Showing posts with label வினவு. Show all posts
Showing posts with label வினவு. Show all posts

இஸ்லாம் பற்றி வினவுக்கும் சாகித்துக்கும்-3

தலாக் விவாகரத்து இத்தா முதலியவை பற்றி நிறைய தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ளன. இந்த பதிவிலேயே என் http://islamicfold.blogspot.com/2007/01/blog-post.html என்றுள்ள இடுகையின் கருத்துரை பகுதியிலும் தலாக் விவாகரத்து பற்றி உள்ளது. இயன்றால் பார்வையிடுங்கள்.

//ஆணின் ஆளுமை அதிகாரத்தினால் தலாக் தலாக் தலாக் என்று மும்முறை ஒருவன் கூறிவிட்டால் அவனது மனைவி விவாகரத்து செய்யப்பட்டவளாக கருதப்படும் நிலையே அன்றும் இன்றும் உள்ளது//
இதை இப்படியே இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கூவி விற்பீர்களோ!. மேலே மின்னணு பொறியியல் பட்டதாரி பாத்திமாவின் கணவர் விடயத்திலும் இதை தெளிவு செய்திருக்கிறோம். தமிழகத்தில் இஸ்லாமிய எழுச்சியில் முத்தலாக் என்கிற விடயமே தவறு என்று ஆண்களும் பெண்களும் அறியத் துவங்கி விட்டனர்.

//இந்த மூன்று முறை தலாக் என்று சொல்லும் உரிமை, சிந்தித்து தெளிவாக நிதானமாக முடிவெடுத்தாலும் ஒரு பெண்ணிற்கு கிடையாது. தனக்கு பொறுப்பானவர்கள் மூலம் தன் கணவனை இந்த உறவிலிருந்து விடுவிக்கச் செய்துகொள்ளத்தான் ஒரு பெண்ணுக்கு இருக்கின்ற உரிமையாகும்.

தலாக் என்பது போல்தான் குளலா என்பதும் என்று சில இசுலாமிய பெண் அமைப்புகள், தாங்களும் நேரிடையாக தலாக் செய்துகொள்ள உரிமையுண்டு என்று வாதாடினாலும் ஆண்களால் மட்டுமே நிர்வாகிக்கப்படும் உலமாக்கள் சபை அதை நிராகரித்துவிட்டது. குலா என்பதன் பொருள் “விவாகரத்து செய்துவிடச் சொல்லுங்கள்” என்று கோரிக்கை வைப்பதே ஆகும்.//
இஸ்லாத்தில் ஆணும் பெண்ணும் அவர்களது உறவினர்கள் முன்னிலையில் தமது வீட்டிலேயே சிறிய நிகழ்ச்சியாக நடத்தி திருமணம் செய்து கொண்டாலும் அதை முறையாகப் பதிவு செய்து ஊர் மக்களுக்கு பொதுவில் அறிவிக்க வேண்டியது கடமையாகும். அதைப் போலவே குலாவும். அநதப் பெண் ஒரு பந்தந்திலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டாள் என ஜமாஅத்தின் முன்னிலையில் அறிவிக்கப் பட வேண்டும். இதிலே அப்பெண்ணுக்கு பல நன்மைகள் இருக்கிறது.

ஒரு பெண் குலாவுக்காக அனுமதி கேட்டால், விசாரித்து, விளக்கம் சொல்லி, முடிவை மறு பரிசீலனை செய்ய அவளிடம் கோரலாம். ஆனால் அப்பெண் தன் நிலையில் உறுதியாக இருந்து குலாவை கேட்டால் அதை நிராகரிக்கும் உரிமை ஜமாஅத்துக்கோ அதன் தலைவருக்கோ சிறிதளவேனும் கிடையாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் வார்த்தையிலிருந்து நீங்களே மாறுபடுவதைக் கவனியுங்கள் //ஆண் தலாக் செய்ய மறுத்தாலும் வலுக்கட்டாயமாக விவாகரத்தை பெற்றுக்கொள்ளும் பாதுகாப்பும் இன்று பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மாற்றத்தின் முன்னேற்றம். சமூகத்தின் இன்றையநிலை பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றமும், பெண்ணுழைப்பும் அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. 'கல்லானாலும் கணவன்...' மலை ஏறிக் கொண்டிருக்கிறது.//
பெண்களுக்கும் இஸ்லாம் சரிவரத் தெரிய தொடங்கியதால் எற்பட்ட நல்ல விளைவுதான் இது.

பெண்ணுழைப்பு - இஸ்லாமிய கல்வியை அறிவதற்கான அவர்களின் உழைப்பு, அதன் மூலம் அவர்களில் சிலர் பெற்ற கல்வியும் வேலை வாய்ப்பும் என எடுத்துக் கொள்ளலாம்.

இஸ்லாத்தில் ஆணும் பெண்ணும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும், குலம் தழைக்கவும் உள்ள ஒரு புனிதமான ஒப்பந்தம்தான் திருமணம். இந்த மகிழ்ச்சிகள் அவர்கள் குடும்ப வாழ்வில் இல்லாதிருந்தால் ஒப்பந்தந்தை முறித்துக் கொள்ளவும் இஸ்லாம் அனுமதி அளிக்கிறது. இந்த உண்மைகள் உணரப்பட்டதால்தான் 'கல்லானாலும் கணவன் புல்லானும் புருஷன்' என்ற நிலை இஸ்லாத்தில் அவசியமற்றதாகி பெண்களுக்கு நல்வாழ்வு அமைய ஏதுவாகிறது.

//விவாகரத்து வழக்குகளில் இன்றைய நடைமுறை மதக்கோட்பாட்டிற்கு வெளியே ஜமாத்துகளால் தீர்மானிக்கப்படுகின்றன.//
மஹ்ர் தொகை என்பது பெண்கள் தங்கள் கணவனால் கைவிடப்படும் நிலைமை ஏற்படும் போதும் அல்லது கணவனை இழக்கும் போதும் உறுதுணையாக இருக்கும் விதத்தில், அந்த அளவுக்கு அமைய வேண்டும். அதை மணப்பெண்ணே தீர்மானிக்க வேண்டும். மஹ்ரை கூட்டிக் குறைத்து பேரம் பேச மணமகனுக்கு அனுமதியுண்டே தவிர இவ்வளவுதான் தருவேன் எனக் கூற அதிகாரம் இல்லை.

மஹ்ர் தொகையைப் பற்றி ஓரளவு இஸ்லாமியப் பெண்கள் விளங்கி இருந்தாலும் அதை அவர்கள் சரிவர நடைமுறைப்படுத்தும் அளவுக்கு இதுவரை இங்கே நிலைமைகள் இல்லை என்பதை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.

இத்தகைய காரணங்களினால்தான் விவாகரத்து வழக்குகளில் இன்றைய நடைமுறையில் மதக்கோட்பாடுகளை விட்டும் வெளியேறாதபடி ஜமாத்துகளால் (பெரும்பாலும்) தீர்த்து வைக்கப்படுகின்றன.

//நடைமுறையில் அப்பெண்ணிற்கு இருக்கும் குழந்தைகளின் பால், வயது ஆகியனக் கணக்கிடப்பட்டு அதற்குப் பாதுகாப்பு தரும்வகையில் தண்டத்தொகையாக தீர்மானிக்கப்பட்டு ஆணிடமிருந்து பெற்று பெண்ணிற்கு வழங்கப்படுகிறது. கொடுக்கப்பட்ட வரதட்சனைகள், நகைகள், சீதனங்கள் திருப்பியளிக்கப் படுகின்றன.//
இந்த தீர்ப்பு இஸ்லாத்துக்கு எதிரான தீர்ப்பல்ல.

//ஜீனாம்சம் என்றச் சொல் மட்டும உச்சரிக்கப்படுவதில்லை.//
ஏனெனில் அது மற்ற மதத்தாரில் நடைமுறையிலுள்ள ஜீவனாம்சம் போன்றதில்லை. மாதம் ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் என்று சொல்லி விட்டு அதை தர மறுப்பவனுக்காக மீண்டும் வழக்காட வழியில்லாத எத்தனையோ பேர் தத்தளிக்கின்ற நிலைமையில் அதை ஒரே முறையில் அல்லது ஜமாஅத்தார் முன்னிலையில் ஒரேயடியாக பெற்றுத் தருவதின் மூலம் எதிர்காலச் சிக்கலில்லாமல் போகிறது.

//குழந்தைகள் ஆண்களுக்கே உரியன. அவர்கள் அவர்களை தமது பொறுப்பில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே கோட்பாடு.//
குழந்தைகளை வளர்ப்பதில் உள்ள செலவுகளுக்கு முழுப்பொறுப்பும் ஆணுக்குள்ளதே. (பெண் எவ்வளவு பணக்காரியாக இருந்தாலும்) நீயும் சேர்ந்துதானே பெற்றாய், நீ பாதிசெலவை ஏற்றுக் கொள் எனக் கூற முடியாது. இதில் பெண்களுக்கு பாதுகாப்பா பிரச்னையா என்பதை உங்கள் அறிவுக்கே விட்டு விடுவோம்.

//கணவன்களால் மட்டுமே தான் கர்ப்பமுற்று குழந்தை பெற்றெடுப்பதாகவும், அதில் தனக்கு பங்கேதுமில்லை என்று இன்னும் இப்பெண்கள் அறிவியலுக்கு அப்பாற்பட்டு சிந்திப்பதால் இப்பிரச்சனையில் தமக்கு ஏதும் உரிமை இல்லை என்பதை எவ்வித மனவருத்தமுமின்றி ஏற்றுக்கொள்கின்றனர்//
இவையெல்லாம் கம்யூனிஸக் கற்பனைகளேயன்றி வேறில்லை. ஆண் பெண் இருவரது அணுக்கலப்பினால்தான் குழந்தை பிறக்கிறது என்பதை குர்ஆன் சொல்லித் தந்தே இருக்கிறது. எந்த தமிழ்த் தாயும் தன் குழந்தையை தான் வளர்ப்பதை ஏமாற்றப்பட்டு விட்டதாக கருதுவதில்லை. சில விதி விலக்குகள் இருக்கலாம். அதைப் பொதுவாகக் கருத முடியாது.

//குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு இவள்மீது சுமத்தப்படும்போது இயல்பாகவே உள்ள தாய்ப்பாசம் அதனை தன் தலையில் கட்டும் ஏமாற்றம் என்று கருதுவதற்கு இடமளிப்பதல்லை.//
எவ்வளவு சிறந்த ஆணாயினும், ஒரு பெண்ணைப் போல், அதிலும் குறிப்பாக பெற்ற தாயைப் போல் குழந்தைகளை வளர்ப்பதென்பது இயலாத காரியம். அதனால் பெரும்பாலும் தாயிடமே குழந்தைகள் விடப்படுகின்றனர். அந்தப் பெண்ணுக்கு வேறு வரன்கள் அமையும் பட்சத்தில் அக்குழந்தைகளுடனேயே திருமணம் செய்விக்கப் படுகின்றனர். இயலாத பட்சத்தில் தாய்வழி உறவினர்களே அக்குழந்தைகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்கின்றனர்.

ஓரளவு வயது வந்த குழந்தைகள் குறிப்பாக ஆண் குழந்தைகள் தந்தையுடன் செல்லும் நிலை ஏற்படும்போது, அது வளர்ந்து, விபரம் அறிந்து, வருவாய் ஈட்டக்கூடிய நேரத்தில்,
'இஸ்லாத்தில் ஒருவர் தம் தாய்க்கு தர வேண்டிய உயர்ந்த அந்தஸ்தும், அப்பெண் எப்படிப் பட்டவளாக இருப்பினும் அவளுக்குள்ள உரிமைகள் அவனது கடமைகள்' ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் அவனுக்கு நினைவுறுத்தப்பட்டு தாய்க்கு சேவையாற்ற ஆர்வமுட்டப்படுகிறான். 'தாயின் காலடியே சொர்க்கம்' என்ற நிலை அவனுக்கு சொல்லித் தரப்படுகிறது. அதனால் இறைவனிடம் கிடைக்கவிருக்கும் உயரிய நிலைமை அவனுக்குச் சொல்லித் தரப்பட்டு தாய்க்குப் பணிவிடையாற்ற ஆர்வமூட்டப்படுகிறான்.

இஸ்லாத்தில் ஒரு மகனிடம் தாய்க்கு உள்ள உரிமை மூன்று பங்கென்றால் தந்தைக்கு ஒரு பங்குதான்- அவனை யார் வளர்த்திருந்தாலும்.
//பெண்ணின் விருப்பத்திற்கிணங்க விவாகரத்து நடந்தால் பெண், தான் பெற்ற மகர் தொகையுடன் சிறுதொகை ஒன்றையும் (திட்டவட்டமான அளவு இல்லை) கொடுக்க வேண்டும். அல்லது மகர் தொகையை மட்டுமாவது கொடுக்கவேண்டும், என்று கோட்பாடு கூறுகிறது. நடைமுறை அவ்வாறு இல்லை. பெண் தலாக் செய்யச் சொல்லும் சூழ்நிலை பரிசீலிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக குடிகாரக் கணவன், விபச்சாரிகளுடன் சுற்றும் கணவன், சமூக குற்றங்களைச் செய்வதால் தொடர்ந்து சிறைசென்று வரும் பொறுக்கி போன்ற அடிப்படை நிகழ்வுகள் பரிசீலிக்கப்பட்டு தீர்த்து வைக்கின்றனர். குற்றம் கணவன் மீது என்றால் கணவனுக்கு தண்டத்தொகையும். மனைவி மீது என்றால் மனைவிக்கு தண்டத்தொகையும் தீர்மானிக்கப்படுகிறது//
மஹ்ர் தொகையை விடக் கூடுதலாக எதையும் கொடுக்க வேண்டியதில்லை. அவன் கொடுத்திருந்த விலையுயர்ந்த பரிசுப் பொருட்கள் திரும்பக் கேட்கப் பட்டால் (சரியான முறையில் மஹ்ர் கேட்டுப் பெறப்படாததால்) குழந்தை வளர்ப்பு முதலிய காரணங்களுக்கான செலவினங்களில் அவை கணக்கிடப்படுகின்றன. இவையாவும் இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு முரணில்லாத வகைதான். (மேலே கல்லானாலும் கணவன் விளக்கத்தையும் பார்வையிடவும்)

இத்தா – காத்திருத்தல்
இஸ்லாத்தைப்பற்றி சரிவர அறிய, ஆராய முயற்சிக்காமல் எவரோ சொன்னவற்றை பிடித்துக் கொண்டு, மார்க்ஸ் கடவுள் கெடுத்த அபின் போதையில்தான் இவரும் தள்ளாடுகிறார் என்பதை இவரது இந்த விளக்கங்களிலே தெளிவாகத் தெரியப்படுத்தி விடுகிறார்.

//'கணவன் இறந்த பெண்கள் மழித்துக் கொள்ளுங்கள் (மொட்டையடித்துக் கொள்ளுவது)' என்று கூறுகிறார். அந்த அறிவிப்பைத் தவிர//
இதற்கான ஆதாரத்தை தர இயலுமா? இஸ்லாத்தை சிறுமைப் படுத்தவல்லாது வேறெதற்காக இத்தகைய புனைச்சுருட்டுகள்?

//தனது கணவனை சொர்க்கத்திற்கு இட்டுச் செல்வதில் பங்காற்றும் நன்மைகளின் எண்ணிக்கையை கூட்டும் என்றும் அவள் மனதார நம்புவதால்அப்பெண்களின் மனதில் எவ்வித எதிர்ப்பையும் ஏற்படுத்தவில்லை//
இவையாவும் இவரது சொந்த கற்பனைகள் அல்லது மார்க்ஸிய கற்பிதங்களாக இருக்கலாம்.

//விவாகரத்து விரும்பியோ விரும்பாமலோ நடந்தாலும் கணவன்மீது ஏற்பட்டுள்ள “கசப்புணர்வு” அங்கே ஏற்பட்டுள்ளது என்பது தெளிவான ஒன்றே. அப்படியிருந்தும் அவர்கள் இந்த இத்தாவை கடைபிப்பது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. அப்படிப்பட்டவர்களின் மனநிலையை அறிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்கு ஏற்படவில்லை//
இவராக சில கற்பனைகளை எழுதி விட்டு அதில் மேற்கொண்டு கேள்விகளை யாரிடம் கேட்கிறார்? கற்பனைக்கு சொந்தக்காரரான அவர்தான் அதற்கு பதில் தர வேண்டும். கற்பனை இல்லையென்றால் அதற்கான ஆதாரத்தை அவர்தான் தர வேண்டும்.

இத்தா என்பது காத்திருப்பு என்று இவரே விளக்கமளிக்கிறார். இதில் கர்ப்பபைகளில் உள்ளதை அறிவதும் இருக்கிறது. அதல்லாத வெறும் காத்திருத்தலும் உண்டு என்பதை 'கர்பப்பை இல்லாவிட்டாலுமா!' என்ற அவரது இடுகையில் அவர் எடுத்து வைத்த (65:4) குர்ஆன் வசனமே விளக்குகிறது.

"உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும், 'இத்தா'(வின் தவணை) மூன்று மாதங்களாகவும், தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய ('இத்தா'வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையுமாகும். மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான்"

மாதவிடாய் நினறு போன வயதானவர்களுக்கும், மாத விடாயே வராதவர்கள் மற்றும் சிறுமிகளுக்கும் (சிறுமிகள் திருமணச் சட்டம் மாற்றப்பட்டு விட்டது) மூன்று மாத தவணை கொடுக்கப்பட்டுள்ளது. இதிலே கர்ப்பபைகளில் உள்ளதை அறிவது இல்லை. வெறும் காத்திருத்தல் சட்டம்தான் என்பது மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கே புரியும்.

இஸ்லாத்தில் கூறப்பட்ட ஒவ்வொன்றும் நபித்தோழர்களால் அவ்வப்போது கேள்விகளாக கேட்கப்பட்டு தெளிவு பெறப்பட்டே வந்திருக்கின்றன. அதனால்தான் தெளிவாக சொல்லப்பட்டுள்ள இவற்றில் கேள்விகள் அவசியமற்றதாகி விட்டிருக்கிறது.

இதை மேலும் விளக்க:
ரமதான் மாதம் முழுதும் நோன்பிருப்பது கடமை. அதனால் பல பயன்கள் உண்டாவதாக சொல்லப்பட்டுள்ளது. அது விளைவுகள்தான். அந்தப் பயன்கள் எமது நோக்கமல்ல. நோன்பிருக்க வேண்டுமென்கிற இறை கட்டளையை நிறைவேற்றுவதல் எனும் அடிபணிதல்தான் எமது முழு முதல் முக்கிய நோக்கம்.

அதுபோல காத்திருத்தலில் பல நல்ல பயன்கள் இருக்கிறது. என்றாலும் அவை எமது நோக்கமல்ல. இறை கட்டளைக்கு அடிபணிதல் என்பதுதான் நோக்கம்.

டிஸ்கி:
1. திரு. வினவு அவர்கள் தமது தளத்தில் 2010-ல் 'இசுலாமியப் பெண்கள்: மதமும் வாழ்க்கையும்' என்ற தலைப்பில் திரு. சாகித் அவர்கள் எழுதி இருந்த இடுகையை எடுத்தது இட்டிருந்தார். அதற்கான கருத்துரை எழுதப்போய் அது மூன்று இடுகைளாக நீண்டு விட்டது.
2. இந்த பதில்கள் உங்களில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்பதையும் இயன்றவரை எல்லா பகுதிகளுக்குமே பதிலளிக்கப் பட்டுள்ளதால் உங்களுக்கு மென்மேலும் வீரியமாய் எதிர்க்கத் தோன்றும் என்பதையும் நான் அனுபவப் பூர்வமாக அறிந்திருக்கிறேன். இந்த பதில்களால் உங்களை வருத்தமுறச் செய்வது எனது நோக்கமல்ல. உண்மையை அறிய முயற்சிக்கும் இது போன்ற கேள்விகளுள்ளவர்கள் மட்டுமே இதனால் பயனடைய முடியும். இவ்வாறு தெளிவு படுத்தவதன் மூலம் என்னளவுக்கு என் கடமையைச் செய்தேன் என்ற மகிழ்ச்சியும் இறை திருப்தியுமே என் நோக்கம். என்னால் இயன்றவரை நான் அறிந்தவரை பதிலளித்துள்ளேன். அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

இஸ்லாம் பற்றி வினவுக்கும் சாகித்துக்கும் - 2

//இசுலாமியப் பெண்களின் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கும்போது நடைமுறை வாழ்க்கையின் வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் இசுலாமியர்கள் புர்கா என்றதும் சூடாகி விடுவது ஏன்?//
எத்தனை விரிவாக எடுத்துரைத்தாலும் அறிய முயற்சிக்காமல் முதல் கேள்விக்கே திரும்ப வரும் திமிர் கொண்டவர்களாக நிறைய பேர் இருப்பதுதான். தனக்கு உரிமையற்ற மற்ற பெண்களை துகிலுரித்து கீழ்த்தரமாக பார்க்கத் துடிக்கும் காமாந்தக கண்களுக்கு புர்கா கேடாகத்தான் தெரியும். இது பெண்களை தங்களின் காமாந்தக கண்களுக்கு விருந்தாக்கத் துடிக்கும் திமிர் பிடித்த ஆண் மேலாண்மையின் வக்கிர உணர்வு. ஆடு நனைகின்றதே என ஊளையிட்டு வெறி கொண்டு அழும் ஓநாய்கள்.

//சமூக ஆர்வாலர்கள் அப்பெண்களுக்கு புர்காவினால் ஏற்படும் சிரமங்களை முன்வைக்கும் போது அது அப்படி இல்லை என்று மறுப்பதும் அதனையே பெண்களை விட்டு பேசவைப்பதும் விவாதத்தில் எட்டப்படாத முடிவாக உள்ளது.//
புர்கா என்பது ஏதோ கருப்புத்துணி என்று நினைப்பதால்தான் பல கோளாறுகள் ஏற்படுகின்றன. உடம்பை மறைக்கின்ற, அழகை, அலங்காரங்களை வெளிப்படுத்தாத முறையில் அணியும் துணி எதுவானாலும் அது புர்காதான். கருப்பு அங்கியே ஆனாலும் அது அவரது உடலின் கன, பரிமாணங்களைக் காட்டி பிறர் கண்களுக்கு விருந்து படைப்பதாக இருந்தால் அது இஸ்லாமிய நெறிமுறைக்குள் வராது.

இந்திரா காந்தி அம்மையாருக்கு தன் பிரதமர் கடைமைகளை ஆற்றுவதற்கோ, ஜெயலலிதா அம்மையாருக்கு தம் முதலமைச்சர் பணிகளை நிறைவேற்றுவதற்கோ, கவர்னர் பாத்திமா பீவிக்கு அவர் கடமைகளை செவ்வனே செய்வதற்கோ, அன்னை தெரசா அம்மையாருக்கு தம் சமூகப்பணிகளை ஆற்றுவதற்கோ, பிணிகளைத் துடைப்பதற்கோ, தற்போதைய குடியரசுத்தலைவர் பிரதிபா தேவி பாட்டிலுக்கு அவர் தம் கடைமையைச் செய்வதற்கோ இத்தகைய துணிகள் எந்தத் தடையையும் ஏற்படுத்தவில்லை. சமூக ஆர்வலர்களாக தம்மை முன்னிறுத்தும் சில காமாந்தகர்கள் கண்களுக்குத்தான் இது தடையாகிறது. அதனால் விவாதப் பொருளாகிறது

கடினமான உடல் உழைப்பை கொடுக்கின்ற வகையில் உள்ள வேலைகளை பெண்களிடம் கொடுத்து அவர்களின் இயல்புக்கு மாறாய் அவர்களைப் பிழிந்தெடுக்காதீர்கள். அவர்களின் உடலமைப்புக்கு ஏற்ற இயல்பான நாசூக்கான வேலைகளை மட்டும் அவர்களுக்கு கொடுங்கள். வேறு வழியின்றி அவ்வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திலிருக்கின்ற பெண்களுக்கு நிர்ப்பந்தம் என்ற முறையில் இஸ்லாம் அவரது உடைக்காக அவர்களை கட்டாயப் படுத்துவதில்லை. ஜமாஅத்துக்கும் வசதி படைத்தவர்களுக்கும் அவர்களை அந்த நிர்க்கதியான நிலையிலிருநது விரைவில் வெளியேற்றி நல்ல நிலைக்கு கொண்டு வருதல் கடமையாகிறது.

//இன்று அனைவரும் படிக்கவைக்கும் நிலையில் அந்த பெண்கள் புர்கா அணிந்தாலும் படிக்கச்செல்ல முடிகிறதே என்ற சந்தோஷத்தில் புர்காவை ஒரு அடக்குமுறையாகக் கருதுவதில்லை. ஒரு சில தீவிர மதப்பற்று இல்லாத குடும்பங்கள் அல்லது பெண்கள் மட்டுமே புர்கா அணியாத நிலையில் பள்ளி கல்லூரிகளுக்குச் சென்றாலும் பெரும்பாலனவர்கள் புர்கா அணிவதை ஒரு பொருட்டாக கருதுவதில்லை//
கல்லூரி செல்லும் இஸ்லாமிய பெண்கள் அறிவு பெற்று கல்லூரிக்கு செல்லும் அதே வேளை அறிவு குறைந்து புர்காவும் இடுகின்றனரா? எத்தகைய வளைந்தொடிந்த சிந்தனை!.

இஸ்லாம் சரிவர புரியாதிருந்த நேரத்தில் பெண்களென்ன ஆண்களே கல்லூரிக்குச் செல்லாமலிருந்தார்கள். இஸ்லாம் புரிந்து விட்டதால் பெண் கல்விக்கு இஸ்லாம் தரும் மகத்துவம் தெரிகிறது. அதனால் இஸ்லாமிய ஒழுக்கத்தைப் பேணிக் கொண்டே கல்லூரிக்குச் செல்கின்றனர். இஸ்லாமிய நெறிமுறைகளைப் பேணியவாறு இஸ்லாம் வலியுறுத்தும் கல்வியும் பெற முடிகின்ற போது அதில் தடை அவசியமற்றது எனப் பெற்றோரும் தெளிந்துள்ளனர்.

// திருமண விழாக்களில் புர்காவுடன் வலம் வரும் பெண்கள், ஆண்களின் கூட்டத்திடையே இயல்பாக வலம் வருகின்றனர். எதிர் எதிர் வரிசையில் அமர்ந்து விருந்துண்ணுகின்றனர். யாரும் எதற்கும் சங்கடப்படுவதில்லை எல்லாம் இயல்பாக குற்றமற்ற செய்லபாடுகளாக நாம் காணுகிறோம்.//
தங்களை கம்யுனிஸ்டுகளாகச் சொல்லிக் கொள்ளும் சிலரை வேறு சிலர் கம்யூனிஸ்டுகளாக முகமூடி அணிந்தவர்களென சித்தரிக்கின்றனர். இது போல உள்ளவைதான் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஆயிஷா, ஸகனாஸ், மதுரைச் சேர்ந்த பாத்திமா, திருச்சியைச் சேர்ந்த பானு முதலானோர். எல்லா இடங்களிலும் அது போன்றவர்கள் உண்டு. இவையொன்றும் முஸ்லீம்களில் மட்டும் உள்ளதல்ல.

புர்கா அணிந்து தம்மை அழகாக மறைத்துக் கொண்டு தம் தேவைகளுக்காக வெளிவர இஸ்லாத்தில் தடை ஏதும் இல்லையே.

//காதுகளையும், நகை அலங்காரங்களையும் மறைத்துக்கொள்ளும் புர்காவெல்லாம் இன்று கிடையாது.//
எதற்காக புர்கா அணிய வேண்டும் எனத் தெரியாமல் கை, கால்கள், உடம்பின் பாகங்கள் வெளித்தெரிய சிலர் அணியும் துணிகளை அவர்கள் என்ன பெயரில் அழைத்துக் கொண்டாலும் அது இஸ்லாமிய உடையாகி விடாது.

//தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போன்ற இசுலாமிய அமைப்புகள் தமிழக இசுலாமியப் பெண்களை புர்கா அணியச் செய்வதில் வெற்றி பெற்றுள்ளனர்//
ஆம். முஸ்லீம்களுக்கு முதலில் இஸ்லாத்தை போதிப்பதில் ஓரளவு வெற்றி பெற வைத்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.
--------------------------------------------------------------------------------

//பெண் உழைப்பு//
கணவர்தான் இஸ்லாமிய குடும்பத் தலைவர். தலைவர் பொருள் திரட்டும்போது பெண்ணை குடும்பத்துக்காக பொருள் திரட்ட இஸ்லாம் கட்டாயப் படுத்தவில்லை. சொத்துகளை தனியாக அடையவும் அதை முறையாக நிர்வகிக்கவும் பெண்களுக்குள்ள உரிமையை இஸ்லாம் தடுக்கவுமில்லை.

இதில் இஸ்லாம் செய்துள்ள குறைகள் என்ன என்று விளக்கினால் தெளிவு படுத்தலாம்.

//உழைக்கும் பெண்களைப் பொருத்தவரை அன்றும் இன்றும் ஏற்ப்பட்டுள்ள வேறுபாடு முதலாளித்துவத்தின் பண்பாடுதானேயொழிய குனர்ஆனுக்கும் இவர்களுக்கும் வெகுதூரம்//
உங்கள் பிழைப்புக்கு முதலாளித்துவம் பிரபுத்துவம் எதுவானாலும் பெயர் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் இஸ்லாமிய அறிவு பெற்ற நம் தமிழ் சமுதாய பெண்கள் 'இத்தனை பேசுகின்றீர்களே எங்கள் நிலைமையிலிருந்து நாங்கள் வெளிவர என்னென்ன ஏற்பாடுகளைச் செய்துள்ளீர்கள்?' என்று தங்கள் இஸ்லாமிய மற்றும் தார்மீக உரிமையை பொதுவில் வைக்கக் கூடிய திறன் பெற்று விட்டனர். அதனால் உழைக்கும் மக்களோடு எல்லோருக்கும் இஸ்லாமிய அறிவு இன்னும் சிறப்பாக சென்றடையத்தான் நாம் இப்போது அதிகம் முயற்சிக்க வேண்டும்.

//பெண்ணின் உழைப்பில் உட்கார்ந்து தின்பதா? அல்லது அவள் வெளிநாடு சென்று சம்பாதிக்க நாம் இங்கே 'பொட்டையைப்' போல் பிரிந்து வாழ்வதா?' சுய கௌரவம் இடம்தரவில்லை. சமூகம் தனக்கு வழங்கியுள்ள விவாகரத்து என்ற அங்குசத்தை நீட்டத் தொடங்கினார்//
இஸ்லாம் புரியத் தொடங்கி விட்ட இந்த கால கட்டத்தில் தலாக் தலாக் தலாக் எனச் சொல்லி விட்டாலும் பிரிந்து விட முடியாது. ஒரு முறையாகவே கணக்கெடுக்கப்படும். அதனால்தான் இந்த அங்குசத்தை அவர் நீட்டத் தொடங்கினார். சரியான இஸ்லாமியத் தெளிவு நாட்டில் ஏற்படத் தொடங்காமல் இருந்திருந்தால் அவர் அப்போதே முடித்திருப்பார்.

//பாத்திமாவோ 'எதுவானாலும் பரவாயில்லை, நான், எனது முன்னேற்றத்தை கெடுத்துக்கொள்ள முடியாது' என்று உறுதியாக வீசிய கவண்கல் வேலை செய்தது//
இஸ்லாத்தில் அவருக்குள்ள உரிமையும் கடமையும் புரியத் தொடங்கி விட்டதாலோ என்னவோ அவரால் கவண்கல் வீச முடிந்தது. பொருள் முதல்வாதம் பேசிக் கொண்டிருந்தால், பொருளையும் இழந்து, யாராரிடமோ சிக்கி சின்னா பின்னமாகி இருப்பார்.

//நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன. தான் சம்பாதிக்கும் தொகையை தனது பெற்றோர்களுக்கு கொடுப்பதில் கட்டுப்பாடு இருக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக உறுதிமொழிகளைப் பெற்றுக்கொண்டு திருமணம் செய்து கொள்ளும் பெண்களும் இவர்கள் மத்தியில் வளர்ந்து கொண்டுதான் வருகின்றனர்.//
இஸ்லாமிய குடும்பவியலில் குடும்பத்தை நடத்த கணவர்தான் பொருள் கொண்டு வர வேண்டும். குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்புதான் மனைவிக்கு. தான் வேலை செய்து கொண்டே குடும்பத்தையும் சரி வர நிர்வகிக்க முடியும் என்ற நிலையிலிருக்கும் பெண்கள், தாம் பெறும் ஊதியத்தை அவர்கள் விரும்பிய நேர்மையான வழிகளில் செலவிடுவதில் தலையிட, கணவனுக்கு எவ்வித உரிமையுமில்லை. அவளாக விரும்பி அதிலிருந்து ஏதும் கொடுத்தால்தான் பெற்றுக் கொள்ளலாம். இவையனைத்தும் இஸ்லாமிய நெறிமுறைகளை பெண்கள் அறியத் தொடங்கியதால் விளைகின்ற நன்மைகள்தான்

//இசுலாமிய பெண் உழைப்பை முதலாளித்தவம்தான் தீர்மானிக்கிறதேயொழிய மதக் கோட்பாடுகள் இல்லை//
இதிலே முதலாளித்துவம் எங்கு வந்தது? அவ்வப்போது முதலாளித்துவம், பிரபுத்துவம், உழைக்கும் வர்க்கம். காலணியாதிக்கம், அடிமைத்தனம் இதில் எதையாவது போட்டால்தான் கட்டுரையை யார் எழுதினார் என்று தெரியும் என்பதற்காக போட்டிருந்தால்... சரிதான் பரவாயில்லை.

இன்னும் வரும்

இஸ்லாம் பற்றி வினவுக்கும் சாகித்துக்கும்-1

//கதவைத் திறக்காமலேயே உள்ளிருந்தபடியே பதில் சொன்னார் என் நண்பனின் மனைவி. அரைக்கால் ட்ரவுசரை போட்டுக் கொண்டு தெருவில் விளையாடிய போதிலிருந்தே அவன் எனக்கு நணபன்//
அவருக்கு நீங்கள் நண்பன். அவர் மனைவிக்கு நீங்கள் தோழி இல்லையே. அவரது நீண்ட கால நண்பர் என்றதால் அன்பாகச் சொன்னார்கள். அதே தெரியாத ஒருவராக இருந்தால் "அவர் வீட்டில் இல்லை. எப்ப வருவாரோ தெரியாது" என்று முகத்திலறைந்தாற்போல் சொல்லி இருப்பார்கள்.

'அவர் எனக்கு சகோதரி மாதிரி' என்பதெல்லாம் இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாது.
'உடன் பிறந்த சகோதரியா? இல்லையே! இடத்த காலி பண்ணு' - இதுவே இஸ்லாமிய முறை.
இவ்விரண்டில் எது சரி என்று எங்காவது உங்களுக்குத் தெரிந்த இடத்தில் நண்பர்களால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பார்கள், கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

எல்லோரையும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதுதான் இஸ்லாமா?
இல்லை. தவறு நடக்க ஏதுவான பாதைகளும் அடைக்கப்பட வேண்டும் - இதுதான் இஸ்லாம்.
இது பெண்களுக்கு மட்டுமான சிறையா? இல்லை. இருபாலாருக்கும் பொது. மற்றவர்கள் வீட்டுக்கு போனால் வெளியிலிருந்து ஸலாம் சொல். மூன்று முறை சொல்லியும் பதிலில்லையா? அவ்விடத்தில் நிற்காதே. போய் விடு.
உனக்கு மஹ்ரமில்லாத பெண்ணிடத்தில் தனித்திருக்காதே. ஒரு பெண்ணும் அவளுக்கு மஹ்ரமில்லாத ஆணும் தனித்திருந்தால் மூன்றாவதாக அங்கே (மனதை வழிகேட்டில் இழுக்கின்ற) ஷைத்தான் இருக்கின்றான் - இது இஸ்லாம். (மஹ்ரம்- திருமணம் செய்வதற்கு தடை செய்யப்பட்ட உறவினர்கள். உதாரணமாக: பெண்களுக்கு - தந்தை, தமையன், மாமன் முதலியோர். ஆண்களுக்கு - தாய், தமக்கை, மாமன் மனைவி முதலியோர்)


//“மாமா” நல்லா இருக்கீங்களா? எப்பவந்தீங்க? என்று நலம் விசாரிக்கும் பண்புக்கு மாறிவிட்டாள்.//
'சரியாகத்தான் சொல்லி இருக்கின்றீர்கள். 'நல்ல பண்பு'

இஸ்லாமிய பெண்கள் அன்னிய ஆடவர் முன்னிலையில் ஒரு குறிப்பிட்ட அளவு உடை அணிந்திருக்க வேண்டியது அவசியம். அந்தளவு உடை எல்லா நேரத்திலும், குறிப்பாக தன் கணவர், குழந்தைகள் முன் அவசியமில்லை. குறைந்த உடையில் துணி விலக வாய்ப்புகள் அதிகம். எழுந்து மறைவான இடம் செல்வதற்கு இது முதல் முக்கிய காரணம்.

நீங்கள் சந்திக்க வந்தது அவரை. அவரைச் சந்திப்பதில் தடை இல்லை.
வீட்டுக்கு வந்தவரை உபசரிப்பது நல்ல குடும்பப் பண்பாடு. அவர்களால் இயன்றவரை உங்களை நல்ல முறையில் உபசரிக்கின்றார்கள்.
அவர்கள் குடும்பப் பெண்களை பார்க்க வேண்டிய தேவை உங்களுக்கு ஏன்?! அல்லது தேவையின்றி அவர்கள் ஏன் உங்களைப் பார்க்க வேண்டும்?!.

இத்தனை நாள் மாமா என்றழைத்து விளையாடியிருந்த பெண் (வயதுக்கு வந்து விட்டது என்பதற்காக) ஒரேயடியாய் விலகி விட்டால் வித்தியாசமாகத் தெரியும். அதனால் அம்மாவோட ஒட்டிக் கொண்டு உங்களை விசாரிக்கிறது. படிப்படியாக அதுவும் குறைந்து விடும்.

இதிலே என்ன குறையை கண்டு பிடித்தீர்கள். நல்ல பண்புகளைப் பழகட்டும் பேணட்டும். இருட்டிலிருந்து கொண்டு வெளிச்சத்தை பழிக்காதீர்கள்.
-----------------------------------------------------------------------------------

//உழைக்கும் பெண்களிடமும் கடைநிலையில் இருந்த அன்றாடங்காச்சி களிடமும் இந்தப் பண்பாடு வேறாகத்தானிருந்தன//
வண்ணாரப்பேட்டை, திருச்சி குத்பிஷா நகர், பாலக்கரை ஆற்றோரத்தின் அருகில், பாளையங்கோட்டை விவசாயக் குடும்பங்கள் போன்றவர்களிடம் வீடுகளில் மறைவாக இருந்து கொள்ள வசதிகளில்லை என நீங்களே சொல்கிறீர்கள். அவர்களிடம் எண்ணமிருந்தாலும் வீடுகளில் வசதிகளில்லாததால் அப்படி இருக்கின்றார்கள்.

இஸ்லாம் எப்போதுமே ஒருவரது இயலாமைக்காக அவரைக் குற்றம் பிடிப்பதில்லை. வசதியுள்ளவர்கள் அவர்களது இயலாமையைப் போக்க வேண்டும் என்று பணிக்கிறது.

அவர்களும் வசதி வந்து விட்டால் அதாவது நடுத்தர நிலைமைக்கு வந்து விட்டால், அதன் பின்னர் நீங்கள் சொன்னதுதான்
"தான் மதிப்புமிக்க கௌரவமான குடும்ப பாரம்பரியம் கொண்டவர்கள் என தன்னைக் கருதிக் கொள்ளும் நடுத்தரவர்க்கத்தின் மத்தியில் மட்டுமே இந்தப் பண்பாடு காணப்பட்டது. இவர்களே இசுலாமிய சமுதாயத்தின் பிரதான தூண்களாகவும் இருந்தனர்."

//எனது நண்பர் கஹாரின் தாயார் விவசாயி. அவர் திருமணம் செய்ததிலிருந்து அவரை கதவுகளும் பாதுகாப்பு செயினும் தடுக்கவில்லை. தலையில் சாணம் சுமந்து விவசாயம் செய்தவர். ஆனால் கஹாரி எலக்ட்ரிசியன் பட்டப்படிப்பு படித்துவிட்டு ஓரளவு சுமாராக சம்பாதிக்கத் தொடங்கியதால் நடுத்தரவர்க்கத்தின் பண்பாட்டினையே கௌரவம் என வரித்துக் கொண்டுவிட்டார்.//
கஹாரின் தாயாரின் சாணம் சுமந்து விற்ற ஏழ்மை. அதனால் இந்தப் பண்பாடுகளைப் பேண முடியாத இயலாமை. வசதி வாய்ப்புகள் வந்ததும் தம்மை சரி செய்து கொண்டுள்ளார். இதிலென்ன தவறு.
-----------------------------------------------------------------------------------
//உலமாக்கள், இந்திய இசுலாமிய அமைப்புகள் போன்றவர்கள் கிராமங்களிலுள்ள ஏழை விவசாயிகளை தன்னுடைய சமூக அங்கமாக ஏற்றுக்கொண்டாலும் சேரிகளில் வாழ்பவர்களையும், அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் பெண்களின் குடும்பங்களையும் கண்டுகொள்வதே இல்லை. இவர்களின் உழைக்கும் வர்க்க பண்பாடு இசுலாமியக் கோட்பாடுவாதிகளுக்கு நெருடலாக இருப்பதே காரணம்.//

இதுதான் பிரதானமாக நீங்கள் தவறிழைக்கும் இடம். ஒரு சில காலத்துக்கு முன் இஸ்லாம் சரிவர தெரியாதிருந்த போதுதான் பள்ளிவாசல்களில் சில்லறையை கொடுப்பதும், மக்களை நெருக்கியடிக்க வைத்து சில்லறைகளை விநியோகிப்பதும்தான் ஜகாத் (எனும் ஏழைகளுக்கான வரி) என நினைக்கப்பட்டிருந்தது. இப்போது அது (ஸதக்கா எனும்) சிறிய தர்மம்தான் அதனால் ஜகாத் வழங்கப்பட்டு விட்டதாக எண்ணி விடக்கூடாது என தெளிவாக அறியப்பட்டு விட்டது.

இஸ்லாமிய அமைப்புகளின் மூலம் உரியவர்களிடம் பெறப்பட்ட ஜகாத், அதைப் பெறத் தகுதியான (நீங்கள் கூறியுள்ளது போலுள்ள) ஏழைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உதவி செய்யப் படுகின்றனர். இன்ஷாஅல்லாஹ் இது தொடர்ந்தால் முஸ்லீம்களில் ஒரு பெரிய மாற்றம் நிகழும்.

எம் ஊருக்கு அடுத்த முஸ்லீம்கள் நிறைந்து வாழும் ஒரு ஊரில் யார் வீட்டில் திருமணம் போன்ற எந்த விருந்து வைபவங்கள் நடந்தாலும் வசதியற்ற அந்த அனைத்து குடும்பங்களுக்கும் உணவளிப்பதாக உறுதியளித்தால் மட்டுமே உலமாக்களும் ஜமாஅத்தினரும் அவ்விருந்துகளில் கலந்து கொள்வர்.

முஸ்லீம்களுக்கும் முஸ்லீமல்லாதவர்களுக்கும் இஸ்லாம் சரிவர புரிய வைக்கப்பட வேண்டும் என (இப்படி தலைகீழாக இல்லாமல் நேர்மையான முறையில்) நீங்களும் எங்களுடன் இயைந்து யோசிக்கின்ற காலம் விரைவில் வர இறைவனை இறைஞ்சுகிறேன்.
------------------------------------------------------------------------------------
இன்னும் வரும்