(அன்பின் வால்பையன்,
உண்மையில் எம் முந்தைய நீக்கப்பட்ட இடுகையில் எழுத்துக்களை கடுமையாக்கி உம்மை வருத்தத்தில் ஆக்கியிருந்தால் அதற்காக உளமாற நான் வருந்துகிறேன். ஏன் அவ்வாறு எழுத நேர்ந்தது என்பது நம்மிருவருடன் மற்றவர்களும் அறிந்ததே. தேவையேற்படின் அதற்காக தங்களிடம் மன்னிப்பு கோரவும் தயங்க மாட்டேன்.
எழுத்துக்களில் எமக்கும் தடித்தனமாய் எழுத இயலும். எனினும் அவை எம் கொள்கைக்கு எதிரானது. நாம் அழகான முறையில் எம் கருத்துக்களை எடுத்துச் சொல்லவும் விவாதிக்கவுமே எப்போதும் விரும்புகிறோம். எனவே கடுமையான வார்த்தை பிரயோகங்கள் நீக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.)
ஒரு வாரத்துக்கு முன் பதிவர் நண்பர் சென்ஷி அவர்கள் வால் பையன் மற்றும் ராஜனுக்கு என்ற தலைப்பிலும் நண்பர் ஜிகே (கோவி. கண்ணண்) அவர்கள் வால்பையன் மற்றும் இராஜனுக்கு வேண்டுகோள்! என்ற தலைப்பிலும் வெளியிட்டிருந்த இடுகைகளை படிக்க நேர்ந்தது. அதன்பின் வால்பையன் அவர்களின் 'குர்ரானில் குஜிலி கும்பா" என்றஇடுகையும் படிக்க கிடைத்தது (அமீரகத்தில் அவர் பதிவு தடை செயயப்பட்டுள்ளதாம்). சென்ஷியுடைய, ஜிகேயுடைய பதிவுகளில் வால்பையன் கொடுத்திருந்த பின்னூட்டங்கள் அவரின் வாதங்கள் பதிலளிக்கப்பட இயலாத வாதங்கள் என்ற நிலையிலும் பின்னூட்டங்கள் இட்டிருந்தார். அதற்காகவே இந்த இடுகை.
முதலில்
அன்பின் வால்பையன்.
ஒரே கேள்வியை அழகாகவும் கேட்க முடியும். அருவருப்பான முறையிலும் கேட்க முடியும். கனியிருப்பக் காய் கவராமல் எந்த விவாதத்தையும் அழகான முறையில் கொண்டு செல்வதுதான் நல்ல பண்பாடாக அமைய முடியும். எனவே உங்கள் இடுகையிலுள்ள அருவருப்பை அகற்றுங்கள். அதற்காக வருத்தம் தெரிவிப்பது நல்ல பண்பாடாக இருக்கும்.
சிலருக்கு கலைஞர் கருணாநிதி அவர்களிடம் சில கோபங்கள் இருக்கலாம். விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவரை விமர்சிக்கும்போது கண்டிப்பாக சில பண்புகளை ஒழுக்கங்களை கடை பிடித்தாக வேண்டியது அவசியம். ஏனெனில், உங்களுக்கு பிடிக்கா விட்டாலும் தமிழகத்தின் கணிசமான மக்களால் தலைவர் என போற்றப்படும் தலைவர்களில் ஒருவர் அவர். அதற்காக அவரது தொண்டர்களாலேயே ஆட்டோ அனுப்பி கவுரவிக்கப்பட்டால், திமுக அனுதாபிகள் எல்லாம் தீவிரவாதிகள் எனப் பொருள் கொள்ளப்பட மாட்டாது. இது ஒரு உதாரணம்தான்.
அவற்றையெல்லாம் விட பல படிகள் மேலாய் முஹம்மது நபி (அன்னாரின் மீது சாந்தி தவழுவதாகுக) அவர்கள், இவ்வுலகத்தின் குறைந்தது ஐந்திலொரு பகுதி மக்களால் தம் உயிரினும் மேலாய் மதித்து போற்றப்படும் பெரும் தலைவர், வழிகாட்டி. அவரது ஒவ்வொரு சொல்லும், செயலும், அங்கீகாரமும் எங்களுக்கு எங்கள் பெற்றோரை விடவும், மற்றெல்லா மனிதர்களை விடவும், பல்லாயிரம் மடங்கு உயர்ந்தது. அவரை விமர்சியுங்கள். ஆனால் அவற்றில் அவரது கண்ணியத்திற்கு களங்கம் தரும், தரம் தாழ்ந்த வார்த்தை பிரயோகங்கள் தவிர்க்கப் பட்டிருக்க வேண்டியது அவசியம். அதுவே நற்பண்பு. அத்தகு விமர்சனங்களுக்கு தகுதியுள்ளோர் தேவையேற்படின் பதிலளிப்பர். யாரும் யாரையும் நிர்ப்பந்திக்க முடியாது. ஏனெனில் 'பதிலில் உள்ள நியாயங்களை ஏற்றுக் கொள்ளும் அறிவு நாணயம், கேள்வி கேட்பவர்களிடத்தில் மிகப் பெரும்பாலும் இல்லை' எனும் வாதத்தை என் அனுபவம் ஏற்றுக் கொள்கிறது.
தரமற்ற வார்த்தைகளை கொண்டிருந்ததால் இவ்விமர்சனங்களுக்கு பதில் சொல்லி நேர விரயம் செய்ய விருப்பமில்லாமல் இருந்தது. என்றாலும் உதாரணத்துக்காக சில பதில்கள் மட்டும்
//... ... ... தனது காம இச்சைக்காக, அவர் பல திருமணங்களை செய்யவில்லை என்று கூறுவர் பார்க்க.
மனைவி துணைவி ஸ்டைல் ... ... ...! அம்பது வயசுக்கு மேல இந்தாள ஐஸவர்யா ராயா கட்டும். பல்லு போன கெழவிக தான் கட்டும்! //
1400 வருடத்துக்கு முந்திய அராபிய கலாச்சாரம் பற்றி ஏதாவது தெரியுமா? அப்போதைய பெண்களின் நிலையைப் பற்றி ஏதாவது படித்திருக்கின்றீர்களா? உங்கள் பாட்டியோட காலத்தில் அவர்களின் நிலைமை எவ்வாறிருந்தது என அவர்களிடம் கேட்டுத் தெளிந்து, பின்னர், 1400 வருடத்துக்கு முந்தைய நாட்களில் பெண்களின் வாழ்வு எவ்வாறிருந்து இருக்கும் என எண்ணிப் பாருங்கள்.
நபி அவர்களது 25வது வயதில் அவரது முதல் திருமணம். 40வது வயதில்தான் அண்ணல் அவர்களுக்கு முதன்முதலாக இறைச்செய்தி வந்தது. அதன் பிறகான அவரது கடுமையான போராட்ட வாழ்வுக்குப்பின் குறைந்தது ஐந்தாறு ஆண்டுகளுக்குப்பின் மக்காவின் மக்கள் அவருடைய செய்திகளுக்கு செவி சாய்த்து கூடுதலாக இணையத் துவங்கினர். அப்போது அவரிடம் பேசப்பட்ட பேரத்தில் ஒன்று. அதை நீங்கள் விட்டு விட்டால் அதற்குப் பிரதியாக அரபுலகத்திலேயே அழகான பெண்களை (பெண்ணையல்ல - பெண்களை) உமக்கு மணமுடித்துத் தருகிறோம் என்பதாகும். யோசியுங்கள். அந்த காலத்து ஐஸ்வர்யா ராய்களை அவர்களே கட்டிக் கொடுக்க தயாராய்த்தான் இருந்தார்கள்.
அவர் மற்ற பெண்களை மணமுடித்த போது, உம்மையும் எம்மையும் போல் பக்கத்து தெருவில் வசிப்பவரே 'பையன் யாரு?' என்று கேட்கக் கூடிய நிலையில் இல்லை. அந்தக் காலத்திய (ரிஸஸனுக்கு முந்தைய) அமெரிக்காவாக இருந்த ரோம சாம்ராஜ்யமே அவரது பேரைக் கேட்டு கதி கலங்கியது. முடி சூட்டிக் கொள்ளா விட்டாலும் மாமன்னர்.
அடுத்து அவரது திருமணங்கள் காம இச்சைக்காக என நிறுவ //ஆயிஷா கூறினார். அல்லாஹ்வின் தூதர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தபோது நாளை ... ... ... அவர்களின் உமிழ்நீர் என் உமிழ் நீருடன் கலந்திருந்த நிலையில் அல்லாஹ் அவர்களை கைப்பற்றிக் கொண்டான்// என்ற ஹதீஸைக் குறிப்பிட்டு விட்டு
//அடச்ச! சிவ பூஜைல கரடி பூந்தா மாதிரி அருமையான நேரத்துல அல்லா பூந்து குட்டைய கொழப்பிட்டாருப்பா!// அதற்கடுத்து மேலும் பல அசிங்க வாதங்களை வைத்துள்ளீர்கள்.
நபியவர்களின் மரணத்தருவாயில் நடந்த நிகழ்ச்சியைப் பற்றிக் கூறும் போது, அது அவரைத் தமது உயிரினும் மேலாய் மதிப்பவர்களை எளிதில் உணர்ச்சி வசப்பட வைக்கும் என்பதை அறிந்து, அதற்கான விளக்கங்களை மேலும் அறிய முயற்சித்திருக்க வேண்டும். எங்கேயோ எழுதி வைத்தவைகளை படியெடுத்து, அதில் மேலும் பல அசிங்க வார்த்தைகளை சேர்த்து வைப்பது அறிவுடைமை ஆகாது.
நபியவர்கள் நோன்பு காலங்களிலும் மற்ற நாட்களிலும் மிஸ்வாக் எனும் பல் துலக்கும் குச்சியால் தம் பற்களை சுத்தம் செய்பவதை அதிகம் விரும்புபவராய் இருந்தார்கள். அது உங்களுக்கு கஷ்டத்தை தராது என்று இருந்திருந்தால் ஒவ்வொரு தொழுகைக்கு முன்னும் மிஸ்வாக் குச்சியினால் பல் துலக்குவதை கட்டாயமாக்கி இருப்பேன் என்று சொல்லுமளவுக்கு இருந்தார்கள்.
அன்னார் இறப்பெய்தும் அந்த தருணத்தில் மிகவும் நோய்வாய்ப்பட்டு, அடிக்கடி மயக்கம் வருவதும் தெளிவதுமாய் இருந்து, நடக்க முடியாமல் இருவரின் தோள்களில் தொங்கிக் கொண்டு, கால்கள் தரையில் இழுபட வீட்டை ஒட்டிய பள்ளிக்கு சென்றிருக்கிறர்கள். அத்தகு நிலையில் பள்ளியை ஒட்டிய ஆயிஷா அம்மையார் அவர்கள் வீட்டில் தங்கியிருந்த நிலையில், அவர் வீட்டுக்கு வந்திருந்த ஆயிஷா அம்மையாரின் சகோதரர் கையில் வைத்திருந்த மிஸ்வாக் குச்சியை பார்க்கிறார்கள். அது வேண்டுமா என அம்மையார் கேட்க ஆம் என்பது போல பார்க்கின்றார்கள். அப்போது அம்மையார் அவர்கள் தம் சகோதரர் கையில் வைத்திருந்த மிஸ்வாக்கை வாங்கி அதன் உபயோகப்படுத்தாத மறு முனையைக் கடித்து, நன்றாக மென்று மென்மையாக்கி நபி அவர்களின் வாயில் வைக்கின்றார்கள். இதுதான் 'அன்னாரின் உமிழ்நீர் என் உமிழ்நீருடன் கலந்திருந்த நிலை' என்று அம்மையார் சொல்கிறார்கள். உங்கள் வாத்திலுள்ள தவறை அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறென்.
அதற்கடுத்து இதற்கு துணையாக அபூதாவுதிலுள்ள ஒரு ஹதீஸை குறிப்பிட்டிருக்கின்றீர்கள்.
அதில் 'எனது நாவினை சுவைப்பார்' என்ற வார்த்தை கூடுதலாக வந்துள்ளதால் அது தவறான ஹதீஸ் என்பதை விளக்கவும் விளங்கவும் பெரிய முயற்சி எதுவும் தேவையில்லை. அபூதாவுது ஹதீஸ் புத்தகத்திலுள்ள தவறான ஹதீஸ்கள் நீக்கப்பட்டு சுனன் அபூதாவுது எனும் புத்தகம் வந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது.
கடைசியில்
நேரான கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் இஸ்லாத்தில் எப்போதும் உண்டு. தங்களின் முன் முடிவுகளைத் துறந்து விட்டு, திறந்த மனதுடன், உண்மைகளை அறியும் நன்நோக்குடன் மட்டும் அணுகுவோரால் அதன் உண்மைகளை அறிந்திட இயலும்.
Showing posts with label சென்ஷி. Show all posts
Showing posts with label சென்ஷி. Show all posts
வால்பையனுக்கு கடுமை அகற்றப்பட்ட பதில்
Subscribe to:
Posts (Atom)