தருமி ஐயாவின் வினாக்களுக்கு என் விளக்கங்கள் (பகுதி-2)

[ பகுத்தறிவு தீர்ப்பளிக்கட்டும் என்ற தலைப்பில் நான் எழுதிய பதிவில் தருமி ஐயா சில கேள்விகள் கேட்டிருந்தார். விரிவாக விளக்கமளிக்க வேண்டிய கேள்விகளாக இருப்பதால், பதிவின் நீளம் கருதி, தனிப்பதிவுகளாக இட்டு வருகிறேன். விளக்கங்களின் பகுதி ஒன்று அங்கிருக்கிறது. இது இரண்டாம் பகுதி]

3. //"மனிதனுக்கு மேலாக சர்வ வல்லமை பொருந்திய ஒரு சக்தி உண்டென்று பகுத்தறிவு சொல்கிறது"
இந்தக் கூற்று எனக்குத் தவறாகத்தெரிகிறதே. பொதுவாக பகுத்தறிவு சொல்கின்றது என்று எதை ஒன்றையும் குறிப்பிடுவது தவறாக ஆகிவிடும் என்று நினைக்கிறேன். ஆளாளுக்கு மாறுபடக்கூடிய விஷயமாக பார்க்கிறேன்.//

பொதுவாக 'பகுத்தறிவு சொல்கிறது' என்று சொல்வது தவறாக ஆகி விடும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இந்த விடயத்தில் என் பகுத்தறிவு எதைச் சொன்னதோ அதையே வேறொரு அறிஞரும் சொன்னார். அதனால் அதை என் பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளத் தயங்கவில்லை. அது என்னவென்று நான் சொல்கிறேன். மற்றவர்களின் பகுத்தறிவு இதற்கு மாற்றமாக இருக்கிறதா என்று அவரவர்கள் முடிவு செய்யட்டும்.

நாம் உருவாக்கப்பட்டுள்ள விதம், இயங்குவதற்கேற்ற மனித உடலமைப்பு, மனிதர்களின் மாறுபட்ட மன நிலை, புவி மற்றும் வான வெளி, விடாது மாறி மாறி வரும் இரவும் பகலும்,
சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள் போன்றவற்றின் ஒழுங்கமைப்பு மற்றும்
கட்டுக்கோப்பான அதன் இயக்கங்களும் தானாகவே வந்ததா?
மனித மூளையின் கட்டுப்பாட்டில் இல்லாத அவற்றின் நிர்மாணத்தையும், அவற்றின் ஒழுங்குகளையும், இயக்கங்களையும், கற்பனையில் கொண்டு வந்து கணிக்கக்கூட இயலவில்லை. மனிதனால் கணிக்கவியலாத இவையனைத்தும் தானாகவே வந்திருக்க முடியுமா? தற்செயலாக நிகழ்ந்தவையா?

பத்து நிறங்களில் பல கோலி குண்டுகளை எடுத்து, ஒவ்வொரு நிறத்துக்கும் ஒரு எண்ணாக 1 முதல் 10 வரை இலக்கமிட்டு, ஒரு பையினுள் போட்டு, கண்ணை மூடிக்கொண்டு, ஒழுங்கான வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாக 1 முதல் 10 வரை எடுப்பதற்கு உண்டான வாய்ப்பு, நிகழ்தகவு (Probability) படி, சுமார் இரண்டரை கோடி தடவைகளில் ஒன்று என்று சொல்கிறார்கள். எனில், சூரியனிலிருந்து தானாக தூக்கி எறியப்பட்ட ஒரு பொருள் (Big Bang theory) இத்தனை வகையான ஒழுங்குகளோடு அமைக்கப்பட, நிகழ்தகவின்படி வாய்ப்புகள் எத்தனை? Big Bang என அது தானாக வந்ததா? அல்லது ஒரு வல்லமை பொருந்திய சக்தி தூக்கியெறிந்து பின்னர் அதை ஒழுங்குற வடிவமைத்ததா?

சிறந்த வடிவமைப்புள்ள ஒரு உயர்ந்த கட்டிடம், ஒரு பெரிய விமானம், ஒரு ராக்கெட், ஒரு சேட்டிலைட், பெரிய கப்பல், ஒரு வாகனம் அல்லது பாலமொன்றை நீங்கள் பார்ப்பதாகக் கொள்வோம். உடனடியாக அதை வடிவமைத்துக் கட்டிய கம்பெனி அல்லது பொறியாளரைப் பற்றி மனது சிந்திக்கும்.

இந்திய அணுகுண்டு தொழில் நுட்பம் பற்றி சிந்தித்தால் குடியரசுத்தலைவர் அபுல்கலாம் நினைவுக்கு வரும் அல்லது ஸ்ரீஹரிகோட்டா சென்று ராக்கெட் வடிவமைக்கும் இடத்தை பார்வையிட்டால் உடனடியாக அவற்றை வடிவமைத்த அறிவியல் அறிஞர்களையம் பொறியியலாளர்களையம் நாம் சிந்திப்போம்.

இப்போது,
மனித மூளையைப் பற்றி சிந்தியுங்கள். எப்படி அது சிந்திக்கிறது? இயங்குகிறது? தகவல்களை திரட்டுகிறது? சேகரிக்கிறது? தேவைப்படும்போது சரியானதை பிரித்து எடுத்துத் தருகிறது? ஒன்றோடொன்றை தொடர்பு படுத்துகிறது? இவையனைத்தையும் ஒரு வினாடியின் ஆயிரத்திலொரு பங்கு நேரத்தில் எப்படிச் செய்கிறது? அதையும் எப்படி தொடர்ந்து செய்து கொண்டேயிருக்கிறது? இந்த மூளைதான் வான் முட்டும் கட்டிடங்களையும், விமானத்தையும், ராக்கெட்டையும், சேட்டிலைட்டையும், கப்பலையும், பாலத்தையும் இன்ன பிற காண்பவற்றையும் வடிவமைத்தது - தொழில் நுட்பத்தை உருவாக்கியது! மனித மூளையைப் பற்றி மேலும் சிந்தியுங்கள். அதை யார் இத்தகைய ஒழுங்குடன் உருவாக்கியது?

இதயத்தை பற்றி சிந்தியுங்கள். சுமார் அறுபது அல்லது எழுபது ஆண்டுகள் இடைவிடாமல் தொடர்ந்து எவ்வாறு மனித உடலுக்குள் குருதியைப் பெற்று, அதை உடலின் எல்லா பாகங்களுக்கும் தொடர்ந்து எவ்வாறு இறைத்துக் கொண்டேயிருக்கிறது?. அது அம்மனித வாழ்நாள் முழுதும் தொடர்ந்து எவ்வாறு இயஙகிக் கொண்டேயிருக்கிறது?

சிறுநீரகத்தின் பணிகளை சிந்தித்துப் பாருங்கள். அது மனித உடலின் சுத்தப்படுத்தும் இயந்திரம். அது ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து, நூற்றுக்கணக்கான வேதி வினைகளைப் புரிந்து, இரத்தத்தை பகுத்தாய்ந்து, மனித உடலின் நச்சுப் பொருட்களின் அளவை கூடாமல் கண்காணிதது வருகிறது. இவையனைத்தையும் அது தொடர்ந்து தானாகவே நடத்திக் கொண்டே இருக்கிறது.

உங்கள் கண்களைப் பற்றி சிந்தியுங்கள். அது மனித கேமரா. தீர்மானித்தல், focus செய்தல், என்னவென்று மதிப்பீடு செய்தல், மூளையை அறியச்செய்தல், தேவையான அளவு நிறங்களை வழங்குதல், வெளிச்சத்தின் அளவுக்கேற்றவாறு தன் உள் வெளிச்சத்தை கூட்டுதல் அல்லது குறைத்தல், தூரத்துக்கேற்றவாறு சரி செய்து கொள்ளுதல் ஆகிய இவையனைத்தையும் தானாகவே செய்து கொள்கிறது.

இவற்றையெல்லாம் யார் உருவாக்கியது என சிந்தியுங்கள். அவற்றின் எஜமானன் யார்? இவ்வாறு இருக்க வேண்டுமென முடிவு செய்தது யார்? யார் அவற்றின் பணிகளை ஒழுங்குற நிர்வகிக்கிறார்கள்? மனிதர்கள் தமக்குத் தாமே செய்து கொண்டார்களா? நிச்சயமாக இல்லை.

இனி இந்த அண்டம், பேரண்டம் இவைகளைப் பற்றி சிந்தியுங்கள். இப்புவியானது நமது சூரியக்குடும்பத்திலுள்ள(solar system) ஒரு கோள்(planet). பால் வீதியிலுள்ள(milky way) பல குடும்பங்களில் நமது சூரியக்குடும்பமும் ஒன்று. நமது பால்வீதி என்பது பால்வீதி மண்டலத்தி(galaxy)ல் உள்ள ஒரு நட்சத்திரக் கூட்டம்(constellation). இது போன்று பல இலட்சக்கணக்கான பால் வீதி மண்டலங்கள் அறியப்படாமலேயே இருக்கின்றன. (நமது சூரியக்குடும்ப ஆராய்ச்சியே இன்னும் முடிவுறாத தூரத்தில்....!) இவையனைத்தும் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கமைப்பில், இம்மியும் பிறழாமல், தங்களுக்கென வரையறுக்கப்பட்ட பாதையில் தொடர்ந்து நீந்திக் கொண்டேயிருக்கின்றன. அவை தங்கள் பாதையில் முரண்படுவதுமில்லை. மோதிக்கொள்வதுமில்லை. இவற்றை மனிதர்களா அவற்றின் பாதையில் மிதக்க விட்டார்கள்? இம்மியும் பிறழாமல் செல்ல வடிவமைத்தார்கள்?. நிச்சயமாக இல்லை.

இனி கடல்கள், மீன்கள், பூச்சிகள், பறவைகள், தாவரங்கள், பாக்டீரியா, இன்னும் அறியப்படாத, நாம் கண்டுபிடித்து வைத்துள்ள மிக உயர்ந்த கருவிகளாலும் காண முடியாத பல கோடி வேதிப்பொருட்கள் என்பனவற்றை சிந்தித்துப் பாருங்கள். எனினும் இவையனைத்தும் தங்களுக்கென விதிக்கப்பட்டுள்ள விதிப்படி இயங்கிக் கொண்டுதானிருக்கிறது என அறிவியல் சொல்கிறது.

ஒரே நேரத்தில் நிகழ்கிற, ஒன்றுக்கொன்று தொடர்புடைய, ஒன்றோடொன்று பொருந்துகிற, சமன்செய்யப்பட்ட, இத்தகைய திட்டங்கள், அவற்றைப் பராமரித்தல், அவைகளில் ஏற்படும் மாற்றங்கள், செயல் ஒழுங்குகள் இன்னும் முடிவுறாத எண்ணிறந்தவைகள் ஆகிய இவையனைத்தும் தானாகவே, தற்செயலாக உண்டாயிருக்குமா?

அவை நிரந்தரமாக, தவறின்றி, ஒழுங்கு குலையாமல் நடைபெறுவதும் தானாக, தற்செயலாக நடப்பதுதானா?

அவை தொடர்ந்து மறு உற்பத்தி செய்து கொள்வதும், பராமரித்துக் கொள்வதும், தானாகவே, தற்செயலாகவே நடைபெறுவதுதானா?

நிச்சயமாக இருக்க முடியாது.

தானாகவே தற்செயலாகவே வந்தது என்று நினைப்பது பொருத்தமற்றதாகவும் முட்டாள்தனமாகவும் என் பகுத்தறிவுக்குத் தோன்றுகிறது.

அது எவ்வாறு வந்ததென்று இருந்தாலும், குறைந்த பட்சம் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது என்றும், இவையனைத்தையும் திட்டமிடவும், படைக்கவும், சீராக்கவும், பாதுகாக்கவும் அறிவு படைத்த, சர்வ வல்லமை பொருந்திய ஒரு சக்தியாலேயே இவையனைத்தும் ஏற்படுத்தப்பட்டதாகவும் என் பகுத்தறிவு சொல்கிறது.

அவரவர்கள் தத்தமது பகுத்தறிவை தட்டி முடிவு கேட்டுக் கொள்ளுங்கள்.

இதைத்தான்,
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது இன்னும் அல்லாஹ். ஓவ்வொன்றின் மீதும் மிகுந்த சக்தியுடையவன். நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியை படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும் சிந்தித்து உணருவோருக்குப் பல சான்றுகள் இருக்கின்றன. சிந்தித்துணரும் அத்தகையோர் நின்று கொண்டும், படுத்துக் கொண்டும,; ஒருக்களித்துப் படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைத்து, வானங்கள் மற்றும் பூமியின் படைப்பை ஆழ்ந்து சிந்தித்து, 'எங்கள் இரட்சகனே! நீ இவற்றை வீணுக்காக படைத்து விடவில்லை. உனக்கு இணையாக்கப்படுபவை அனைத்தையும் விட நீ மிகவும் தூயவன், நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை காத்தருள்வாயாக!' என்று பிரார்த்திப்பார்கள். (அத்தியாயம் 3ல் 189 முதல் 191 வரை உள்ள வசனங்களின் கருத்துகள்)
என்று குர்ஆன் கூறுகிறது. இன்னும் பல நூற்றுக்கணக்கான வசனங்களில் மனிதனை சிந்திக்க அழைக்கிறது.

(பதிவு நீண்டதாக இருப்பதால், படிக்க சோர்வேற்படாதிருக்க பகுதி பகுதியாக எழுதுகிறேன். மீதமுள்ள கேள்விகளுக்கு அடுத்த பதிவில் எழுதி, முடிக்கிறேன்)

4 comments:

Unknown said...

தவறாக விளங்க நேரிடும் என்று நினைப்பதால், ஐந்தாவது பத்தியின் முதல் வரியில் சிறு மாற்றம் செய்துள்ளேன்.

தருமி said...

ithil sollum karuththukkalukku naan aethum keLvi kedka thaevai illai enrae ninaikiraen

Unknown said...

நன்றி அஸலம்ஒன். பகுதி 1 மற்றும் 3 பார்த்தீர்களா? ஏதும் தவறு இருந்தால் தயங்காமல் சொல்லுங்கள். அது எனக்கும் பாடமாக அமையும். மற்றவர்களும் அறிந்து கொள்ள முடியும்.

Unknown said...

நன்றி தருமி ஐயா.
தங்களைப் போன்ற சிறந்த சிந்தனையாளர்களுக்கு, என் எண்ணத்திலிருந்து சிலவற்றை சொல்லக் கிடைத்த ஒரு வாய்ப்பாகவே இதை நான் கருதினேன் ஐயா.