தருமி ஐயாவின் வினாக்களுக்கு என் விளக்கங்கள் கடைசி பகுதி

4)//"அவன் படைத்த மனிதர்களாகிய நமக்குள்ளேயே பிறப்பாலோ, செல்வத்தாலோ அல்லது தொழிலாலோ உயர்வும் தாழ்வும் கற்பிக்காதவனாக இறைவன் வேண்டும்."
இக்கூற்றும் சரியாக எனக்குத் தோன்றவில்லை. பார்க்குமிடமெல்லாம் வேற்றுமைகள் நிறைந்த உலகமாகத்தானே இருக்கிறது. படைப்பினில் எல்லோரும் ஒரே மாதிரியாகவா இருக்கிறோம்? இல்லையே!//

ஆம். வேற்றுமைகள் நிறைந்ததுதான் உலகம். படைப்பில் அனைவரும் ஓரே மாதிரியாக இருப்பதில்லை என்பதும் உண்மைதான்.

ஆனால் அவன் படைத்த இந்த வேற்றுமைகளின் அடிப்படையில், அவனது முன்னிலையில், மனிதர்களில் உயர்ந்தவர்கள் தாழந்தவர்கள் என்ற பேதமிருக்கக் கூடாது.

இஸ்லாத்தில், இறைவனது முன்னிலையில், மேற்கூறிய வேற்றுமைகளின் அடிப்படையிலான உயர்வு தாழ்வு இல்லை.

5)//"பூமியும் வானமும் அவனது ஒரே வார்த்தைக்குள் ஆகும்"
பின் எதற்கு 6 நாட்கள் படைப்பிற்கு - அதுவும் ஒவ்வொன்றாய்? பின் கடவுள் ரெஸ்ட் எடுத்ததாகவும் உள்ளதே!//

கடவுள் ரெஸ்ட் எடுத்ததா:
இறைவனுக்கு ஓய்வு தேவைப்படாது என்று இஸ்லாம் சொல்கிறது.
ஏனெனில் அவன் ஓய்வெடுக்கும் நேரத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் தேவைகளை யாரிடம் கேட்பது என்ற கேள்வி எழுகிறதல்லவா?.

பின் எதற்கு ஆறு நாட்கள்?
குர்ஆன் அத்தியாயம் 7 வசனம் 54 மற்றும் அத்தியாயம் 10 வசனம் 3லும் அல்லாஹ் வானங்களையும் புமியையும் ஆறு நாட்களில் படைத்ததாக கூறுகிறான்.

இறைவன் முடிவெடுத்து செய்கின்ற ஒன்றில் கேள்வி கேட்கிற உரிமை யாருக்கும் இல்லை. ஏன் அவ்வாறு செய்தான் என்பது அவனுக்கே வெளிச்சம்.

அவ்வாறு அவன் படைத்ததால், நடைமுறை வாழ்க்கையில் அதனால் மனிதர்களுக்கு எந்த கெடுதலும் வரப்போவதில்லை.

அவன் சக்தியை அவன் கூறும் போது,; 'மறுமையில் அவனுடைய ஒரு கைப்பிடிக்குள் பூமி அடங்கும்' என்றும் சொல்கிறான். பார்க்க குர்ஆன் அத்தியாயம் 39 வசனம் 67

6)(அ)//"தாடி வைக்க வேண்டுமென்று இறை கட்டளை உள்ளதால்..."
இதைக் கூட கட்டளையாகக் கடவுள் கொடுப்பாரா?//

வாழ்வின் அனைத்து நிலைகளுக்கும் இஸ்லாம் சில வழிமுறைகளை விதித்துள்ளது. சில கட்டளைகளை வலியுறுத்தி சொல்கிறது. சிலவற்றை தேவையானால் ஏற்று நடக்கச் சொல்கிறது.
சிறுநீர் கழிப்பதில் கூட (மற்ற மனிதர்களுக்கும், அவருக்கும் துன்பமேற்படக் கூடாதென்பதற்காக) சில வழிமுறைகளை சொல்கிறது.
இஸ்லாம் வெறும் சடங்கும் சம்பிரதாயமும் கொண்ட மதமல்ல வாழ்வியல்.

6.(ஆ)தாடி இல்லாதவர்கள் முழு முஸ்லீம்கள் இல்லையா?
தாடி இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட சுன்னத்.
நிர்ப்பந்தங்களினால் ஒரு முஸ்லீம் தாடி வைக்கவில்லையென்றால் அவர் குற்றம் பிடிக்கப்பட மாட்டார். தகுந்த காரணமேதுமின்றி ஒருவர் தாடி வைக்காது விட்டால், அவர் ஒரு சுன்னத்தை விட்ட குற்றமிழைத்தவராவார். அது அவருக்கும் இறைவனுக்கும் மத்தியிலுள்ளதாகும்.

7அ). //"இஸ்லாத்தை ஏற்று அம்மார்க்கத்தை சரியாகப் பின்பற்றியவர்களுக்கு பரிசாக சொர்க்கமும், இஸ்லாத்தை நிராகரித்தவர்களுக்கு தண்டனையாக நரகமும் வழங்கப்படும் என்று எவ்வித ஒளிவு, மறைவு இல்லாமல், வெளிப்படையாக இஸ்லாம் கூறுகிறது."

"You are either with us or with them". 9/11 -க்குப் பிறகு ஜார்ஜ் புஷ் சொன்ன இந்த வாக்கியத்தின் பொருளை நான் விளக்க வேண்டியதில்லை. மதத்தின் பெயரால் ஒசாமா செய்ததால் அந்த மதத்தையும், மதத்தைச் சார்ந்தவர்களையும், விரோதிகளாக அவர் பார்த்தார்; அதே போல்தான் எல்லோரும் பார்க்க வேண்டும் என்றும் எதிர்பார்த்தார். அவரின் இந்தக் கூற்றுக்கு உலகத்தின் பல நாட்டவரும், பல நாட்டுத் தலைவர்களும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அவரைப் பொருத்தவரை அவருக்குச் சரியானதாகத் தோன்றும் ஒன்று, உலகத்தில் எல்லோருக்கும் அதே போல்தான் தோன்ற வேண்டுமென அவர் எதிர்பார்த்ததை உலகம் ஒப்புக் கொள்ளவில்லை. இல்லையா?அதாவது, நீ அந்தப் பக்கமா, இந்தப் பக்கமா என்பதை வைத்துதான் உன் மறு வாழ்க்கையும், அதற்குரிய பரிசு / தண்டனையும் தீர்மானிக்கப் படும்.

இந்த புஷ்ஷின் கருத்திற்கும், மேலே சொல்லியுள்ள இஸ்லாமியக் கருத்திற்கும் - ஒன்று மனிதன் கூறியது; இன்னொன்று கடவுளால் கூறப்பட்டதாக நம்பிக்கையாளர்களால் கருதப்படுவது என்பதைத் தவிர. இரண்டுமே கருத்துக்கள் என்ற வரையில் ஒன்றுதானே? ஆனால் ஒன்றை தவறென்று கூறி, இன்னொன்றை எப்படி புனித வார்த்தையாகக் கொள்ளுவது?//

ஒரு சில உதாரணங்களின் மூலம் இதற்கு பதிலளிக்கலாம் என எண்ணுகிறேன்.

i. கம்பெனியில்: நன்றாகவும் சரியாகவும் வேலை செய்தால் நல்ல சம்பளமும் பணியில் உயர்வும் தரப்படும். தவறாகவும் குறைவாகவும் வேலை செய்தால் சம்பளக்குறைப்போடு பணி உயர்வும் தரப்படாது என்கிறார்கள்.
ii. கல்லூரியில்: சரியான முறையில் வந்து, ஒழுங்காக நடப்பவர்களுக்கு internal assessmentல் நல்ல மதிப்பெண்கள் தரப்படும். சரியாக வராமலும், வந்தால் தகராறு செய்பவர்களுக்கும் குறைந்த மதிப்பெண்களே கிடைக்கும் என்கிறார்கள்.
iii. பள்ளியில்: ஒழுங்காக படித்து நல்ல முறையில் தேர்வெழுதினால் தேர்ச்சி அடைவதோடு வாழ்க்கையிலும் முன்னேறலாம். சரியாக படிக்காமல் தேர்வில் சரியாக எழுதாமல் இருந்தால் தேர்வடைவதிலும் வாழ்வில் முன்னேறுவதிலும் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்கிறார்கள்.
iv. கொள்ளையன் ஒருவன்: என்னோடு சேர்ந்து அந்த வங்கியை கொள்ளையடித்தால் வெகு விரைவில் நிறைய பணம் கிட்டும், மகிழலாம். யாராவது வர மறுத்தால் அவர்களை நான் உதைப்பேன், வலிதான் கிடைக்கும் என்கிறான்.

மேற்கூறப்பட்ட நான்குமே "You are either with us or with them" என்ற ஜார்ஜ் புஷ் வாதத்தைப் போன்றதுதானா தருமி ஐயா.

ஒன்று போல தோற்றமளித்தாலும், அந்தந்ந விடயங்களுக்கு தகுந்தாற் போல் பொருள் மாறுபடும். திருடன் சொல் ஆணவமாகவும் தவறானதாகவும் மற்றவை நேர்மையானதாகவும் இருக்கிறது. எனவே சிந்தனையைப் பயன்படுத்தி நாம்தான் முடிவெடுக்க வேண்டும்.

7ஆ). //However, my Q is based on the VIOLENCE in the words. whether it is aimed at fidels or infidels it is a very violent statement - a divine violence towards human beings.
a god need and should not bother whether a man reaches him through path A or B ... man should reach him, that is all what it should be.//

இதற்கும் சில உதாரணம் மூலமே விளக்க நினைக்கிறேன் ஐயா.

ஆயிரக்கணக்கானோர் பணிபுரியம் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் இருக்கிறார். அவருடைய நிறுவனத்தின் சில ஊழியர்கள் அவரை விட்டு விட்டு வேறொருவரை உரிமையாளர் என்கின்றனர். அல்லது, ஒரு கடைநிலை ஊழியர், உரிமையாளர் அமர வேண்டிய இடத்தில் அமர்ந்து கொண்டு, உரிமையாளர் போன்ற ஆணையிடுகிறார் எனக் கொள்வோம்.
உண்மையான உரிமையாளரால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா?

இன்னும் சரியாக விளங்குவதற்காக ஒரு கடுமையான உதாரணம் தருகிறேன். (முகம் சுளிக்க வேண்டாம். கடுமை என நினைப்பவர்களும், பெண்களும் மன்னிக்கவும்.)
தம் மனைவி, மகிழ்வோடு இருப்பதைத்தான் நல்ல கணவன் விரும்புகிறான். அதற்காக ஒருவனது மனைவி வேறொரு ஆணிடம் படுக்கை சுகம் காண்கிறாள். கணவனுக்கும் அவ்விடயத்தில் குறை வைப்பதில்லை எனக் கொள்வோம். எந்த நல்ல ஆண்மகனும்/கணவனும் இதை ஏற்றுக் கொள்வானா? மனிதனுக்கே இவ்வளவு ரோஷம் இருக்கிறதே!

இறைவன் அன்பானவன்தான் ஆனால் ரோஷமில்லாதவனில்லை. மனிதனை விடவும் பலகோடி மடங்கு ரோஷமானவன். "அல்லாஹ் எதை வேண்டுமானாலும் தான் நாடினால் மன்னிப்பான் ஆனால் படைத்தவனாகிய தன்னை விடுத்து, வேறெதையும் இறைவனாக எடுத்துக் கொள்வதை மட்டும் மன்னிப்பதேயில்லை" என்று இஸ்லாம் கூறுகிறது.

என் அறிவுக்கு எட்டிய வகையில் பதிலளித்திருக்கிறேன். இறைவனே மிக அறிந்தவன்.

25 comments:

செல்வமணி said...

"அல்லாஹ் எதை வேண்டுமானாலும் தான் நாடினால் மன்னிப்பான் ஆனால் படைத்தவனாகிய தன்னை விடுத்து, வேறெதையும் இறைவனாக எடுத்துக் கொள்வதை மட்டும் மன்னிப்பதேயில்லை" என்று இஸ்லாம் கூறுகிறது"

ம்..என்ன சொல்வது?...இது எந்த முறையில் சரியானது என்பதை படிக்கும் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.'உங்கள் மார்க்கம் உங்களுக்கு...எங்கள் மார்க்கம் எங்களுக்கு' என்று சொல்லிக்கொண்டே கசையடியும் தரப்படுமா? வாழ்க ஜனநாயக உணர்வுகள்.

இஸ்லாத்தையும் விளக்க வேண்டியுள்ளது..கூடவே அல்லாஹ் மிகவும் அன்பானவன் என்பதையும் காட்டவேண்டியுள்ளது..இஸ்லாமிய சகோதரர்களின் சிரமம் புரிகிறது.

மதங்களில் இருந்து வெளிவருவோம்..முழு மனிதனாக மாறுவோம்.

சுல்தான் said...

வருகைக்கு நன்றி. சில உதாரணங்களுடன் அதன் காரணத்தையும் கூடவே விளக்கியிருக்கிறேனே செல்வமணி.

சுவனப்பிரியன் said...

Good post Mr Sultan!

சுல்தான் said...

நன்றி சுவனப்ரியன். பகுதி 1 மற்றும் 2 பார்த்தீர்களா? ஏதும் தவறு இருந்தால் தயங்காமல் சொல்லுங்கள். அது எனக்கும் பாடமாக அமையும்.

Anonymous said...

//இறைவன் அன்பானவன்தான் ஆனால் ரோஷமில்லாதவனில்லை. மனிதனை விடவும் பலகோடி மடங்கு ரோஷமானவன். "அல்லாஹ் எதை வேண்டுமானாலும் தான் நாடினால் மன்னிப்பான் ஆனால் படைத்தவனாகிய தன்னை விடுத்து, வேறெதையும் இறைவனாக எடுத்துக் கொள்வதை மட்டும் மன்னிப்பதேயில்லை" என்று இஸ்லாம் கூறுகிறது.//

மற்ற மதங்களும் இவ்வாறே கூறினால்...?

சிரமப்பட்டு மற்றவர் மீது திணிக்கத் தூண்டாத மதத்ததை கொடுத்த இறைவனுக்கு நன்றி.

சுல்தான் said...

//மற்ற மதங்களும் இவ்வாறே கூறினால்...?
சிரமப்பட்டு மற்றவர் மீது திணிக்கத் தூண்டாத மதத்ததை கொடுத்த இறைவனுக்கு நன்றி.//

நாமே உண்மையை சோதித்தறிவோம். அதையே பின்பற்றுவோம். நாம் பின்பற்றுவதுதான் உண்மையென்றால்.... . பொய் என்ன சொன்னாலும் எத்தனை சொன்னாலும் பொய்தானே. கவலைப்பட ஏதுமில்லை.

ஆம். மற்றவர் மீது திணிக்கத் தூண்டாத மதத்ததை கொடுத்த இறைவனுக்கு நன்றி.

செல்வமணி said...

"சில உதாரணங்களுடன் அதன் காரணத்தையும் கூடவே விளக்கியிருக்கிறேனே செல்வமணி"

இல்லை சுல்தான்..அவை சரியான காரணங்களாக தெரியவில்லை.நான் தங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவன்.தங்களின் மென்மையாக பதிலளிக்கும் முறை என்னை கவரும். ஆனால் விசயம் என்று வரும் போது சில சமயம் தெளிவாக இல்லை என்பது என் கருத்து. மற்றபடி சுவனப்பிரியன் 'good post' என்று கூறுவதெல்லாம் ஒரு பரஸ்பர உணர்வு. அதனால்தான் இப்படி கூறினேன்..'இஸ்லாத்தையும் விளக்க வேண்டியுள்ளது..கூடவே அல்லாஹ் மிகவும் அன்பானவன் என்பதையும் காட்டவேண்டியுள்ளது..இஸ்லாமிய சகோதரர்களின் சிரமம் புரிகிறது'என்று.

"நாமே உண்மையை சோதித்தறிவோம். அதையே பின்பற்றுவோம். நாம் பின்பற்றுவதுதான் உண்மையென்றால்.... . பொய் என்ன சொன்னாலும் எத்தனை சொன்னாலும் பொய்தானே. கவலைப்பட ஏதுமில்லை."

இந்த பிடிவாதத்தை எல்லோரும் கடைபிடித்தால் என்னாவது? அதை பற்றி எனக்கு கவலையில்லை என்று சொல்லுகிறீரா சுல்தான் அவர்களே?

இந்த பிடிவாதம்தான் அனைத்து மத வன்முறைக்கும் காரணம்..இதில் இஸ்லாம் ஒரு அதிக பிடிவாதம் பிடிக்கும் ஒரு குழந்தை.

இப்படி செய்தால் என்ன? மறுமையில் இறைவனால் தரப்படும் தண்டனை, அல்லது சொர்க்கத்தில் அடையப்போகும் இன்பம் போன்றவற்றையெல்லாம் மறந்துவிட்டு எல்லோரையும் நேசித்தால் என்ன? எல்லோரையும் நேசிப்பதை வணக்கத்துகுரியவன் விரும்பமாட்டாரா?

கடவுளையும்,மதத்தையும் நம்புபவர்கள் சில விசயங்களில் மாற்றத்தை கொண்டுவந்தாலே ஒரு குறைந்தபட்ச சுமூக சூழலை கொண்டுவரமுடியும். ஆனால் சூத்திரதாரிகள் மாற்றம் கொண்டுவரும் உரிமை மனிதனுக்கு இல்லை என்றல்லவா சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள்.

வன்முறைக்கான விதைகளை கடந்த காலத்தில் விதைத்துச் சென்ற புத்திசாலிகளை வணங்கி தண்டனையிலிருந்து தப்பிக்கவும், மறுமையில் மதுவும் மாதுவும் பெறவும்,வாழும் பூமியை ரத்தவெள்ளமாக்க துடிக்கும் மக்களை நினைத்தால் வேதனையாயிருக்கிறது.

சுல்தான் said...

மீள் வருகைக்கு நன்றி செல்வமணி.
//அவை சரியான காரணங்களாக தெரியவில்லை.//
ஏன் அவை சரியான காரணங்கள் இல்லை என்று விளக்காமல் அவ்வாறு சொல்வதால் நான் எப்படி விளங்க முடியும். தவறிருந்தால் எப்படி திருத்திக் கொள்ள முடியும் நண்பரே!.

//நான் தங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவன்.தங்களின் மென்மையாக பதிலளிக்கும் முறை என்னை கவரும். ஆனால் விசயம் என்று வரும் போது சில சமயம் தெளிவாக இல்லை என்பது என் கருத்து.//
Thanks for your compliments.
தங்கள் கருத்தை நான் ஏற்கிறேன். அதனால் எந்தெந்த இடங்களில் தெளிவில்லை என்று சொன்னால் இன்னும் தெளிவாக எழுத முயல்வேன்.

//இந்த பிடிவாதத்தை எல்லோரும் கடைபிடித்தால் என்னாவது?//
அப்போதுதான் உண்மையை அறிய வழி பிறக்கும்.
உண்மையைத் தெரிந்து, அதை கடைபிடிக்காதவர்களாக நாம் ஆகி, நாளை மறுமையில் வருந்தக்கூடாது என்று நினைப்பதிலும் தவறில்லையே.
ஒன்று உண்மை என்றானால், மற்றையவை பொய்கள் என்றாகும். அதன்பின் பொய்களைப் பற்றி கவலையடைய தேவையில்லைதானே.

//இஸ்லாம் ஒரு அதிக பிடிவாதம் பிடிக்கும் ஒரு குழந்தை//
அறிவாராய்ச்சிகளின் பின் உண்மை என உணர முடிவதால், அதை விட்டுக் கொடுக்காத மனப்பான்மை என்றும் சொல்லலாம்.

//இப்படி செய்தால் என்ன? மறுமையில் இறைவனால் தரப்படும் தண்டனை, அல்லது சொர்க்கத்தில் அடையப்போகும் இன்பம் போன்றவற்றையெல்லாம் மறந்துவிட்டு எல்லோரையும் நேசித்தால் என்ன? எல்லோரையும் நேசிப்பதை வணக்கத்துகுரியவன் விரும்பமாட்டாரா?//
அதையெல்லாம் நினைத்துக் கொண்டே எல்லோரையும் நேசிக்கலாம். நேசிக்க வேண்டும். இதைத்தான் வணக்கத்துகுரியவனும் விரும்புகிறான். அவ்வாறு நேசிப்பதால் இரண்டு நன்மைகள். ஒன்று நேசிப்பதால் உள்ள ஒற்றுமை. மற்றது மறுமையிலும் தண்டணையிலிருந்து தப்பி வெகுமதிக்குரியவர்களாகலாம்.

//வன்முறைக்கான விதைகளை கடந்த காலத்தில் விதைத்துச் சென்ற புத்திசாலிகளை வணங்கி தண்டனையிலிருந்து தப்பிக்கவும்இ மறுமையில் மதுவும் மாதுவும் பெறவும்இவாழும் பூமியை ரத்தவெள்ளமாக்க துடிக்கும் மக்களை நினைத்தால் வேதனையாயிருக்கிறது.//
இஸ்லாத்தில் வன்முறையில்லை. வன்முறைக்கான வித்திடப்படுகிறது என்பது அபாண்டமாகும். ஒரு மனிதனை அநியாயமாகக் கொன்றவன் ஒரு சமுதாயத்தையே கொன்றவனாவான் என்று இஸ்லாம் சொல்கிறது.
தங்கள் வாழ்வின் வளத்துக்காக அநியாயமாக பல உயிர்களைக் காவு கொள்ளும் கயவர்களிடத்தே ஊடகங்கள் இருப்பதால் இவ்வாறு இஸ்லாத்துக் கெதிரான கருத்துக்கள் மக்கள் மனங்களிலே விதைக்கப்படுகிறது. மக்களின் சிந்தனைப் போக்கிலே தாங்கள் விரும்பும் மாற்றங்களை ஏற்படுத்தவென்றே பல குழுக்களை அமைத்து கயவாளித்தனம் செய்வது அத்தகைய ஊடகங்களும் அதன் அயோக்கிய எஜமானர்களும்தான்.
முஸ்லீம்கள் தவறே செய்யவில்லை என நான் சொல்வதாக அர்த்தமாகாது. முஸ்லீம்கள் செய்யும் தவறுகள் பூதாகாரமாகக் காட்டப்படுகின்றன. முஸ்லீம்கள் செய்யும் தவறுகளும் களையப்பட வேண்டியவை, கண்டிக்கவும், தண்டிக்கவும் பட வேண்டியவை என்று இஸ்லாமும் சொல்கிறது.

செல்வமணி said...

'ஏன் அவை சரியான காரணங்கள் இல்லை என்று விளக்காமல் அவ்வாறு சொல்வதால் நான் எப்படி விளங்க முடியும்'

ஆயிரக்கணக்கானோர் பணிபுரியம் ஒரு நிறுவனம்,internal assessment,வங்கி கொள்ளை..எதிலுமே ஒரு தெளிவு இல்லை என்பது என் கருத்து.

உதாரணமாக..

"அல்லாஹ் எதை வேண்டுமானாலும் தான் நாடினால் மன்னிப்பான் ஆனால் படைத்தவனாகிய தன்னை விடுத்து, வேறெதையும் இறைவனாக எடுத்துக் கொள்வதை மட்டும் மன்னிப்பதேயில்லை" என்று இஸ்லாம் கூறுகிறது" என்ற தங்கள் கருத்தில் உள்ள 'மன்னிப்பதேயில்லை' என்ற வார்த்தைக்கும்,'உங்கள் மார்க்கம் உங்களுக்கு எங்கள் மார்க்கம் எங்களுக்கு' என்ற ஜனநாயகரீதியிலான் கருத்துக்கும் எந்த இடத்தில் சரியான விளக்கத்தை கொடுத்திருக்கிறீர்கள்? எனக்கு புரியவில்லை.மறுபடி கூறினால் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

மன்னிக்கவே முடியாதபோது அது என்ன 'உங்கள் மார்க்கம் உங்களுக்கு எங்கள் மார்க்கம் எங்களுக்கு'?

மிரட்டவும்,பயமுறுத்தவும்
வேண்டியதிருக்கிறது..கூடவே அடுத்தவர் கருத்துக்கு மதிப்பு கொடுப்பதுபோல் காட்சி அமைக்கவேண்டியுள்ளது.இதற்கெல்லாம் ஒரு மாதிரி சப்பைகட்டத்தான் முடியும்.இதைத்தான் நீங்கள் செய்திருக்கிறீகள் என்பது என் கருத்து.

'//இந்த பிடிவாதத்தை எல்லோரும் கடைபிடித்தால் என்னாவது?//
அப்போதுதான் உண்மையை அறிய வழி பிறக்கும்.'

எல்லோருமே பிடிவாதம் பிடித்தால் எப்படி வழிபிறக்கும்? தெளிவு படுத்தவும்.

'அறிவாராய்ச்சிகளின் பின் உண்மை என உணர முடிவதால், அதை விட்டுக் கொடுக்காத மனப்பான்மை என்றும் சொல்லலாம்'

அறிவாரய்ச்சிகள் ஒருவரால் நடத்தப்படுவதில்லையே..பலரால் நடத்தப்பட்டு பல முடிவுகளும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளனவே.. வான்வெளி எங்கும் பார்த்துவிட்டேன்.. எங்கும் கடவுளை காணோம் என்ற அலெண்டே ஒரு வான்வெளி ஆராச்சியாளர்தான்..எனக்குள்ளும் பயணித்துப் பார்த்துவிட்டேன்..ஒரு வெங்காயமும் இல்லை..அதுவும் ஆராய்ச்சிதான்.நீங்களோ நானோ ஒரு முடிவு எடுத்து விட்டோம் என்பதற்காக மற்றவர்களும் அதை பின் பற்றத்தான் வேண்டுமா? என்னை பொறுத்தவரை ஆராய்ச்சி தொடருகிறது.முடிவு இன்னும் புலப்படவில்லை.இதுகூட ஒரு முடிவுதானே என்று புது விவாதத்தை துவக்கி விட வேண்டாம். சற்று திறந்த மாதிரி இருப்போமே என்கிறேன். ஆதிசங்கரர்,ராமகிருஷ்ண பரமஹம்சர்,ஏசு,நபி எல்லாம் அவசர குடுக்கைகள்..கற்பனை கலந்த சிந்தனாவாதிகள்.இதில் உங்களுக்கு மாற்று கருத்து இருப்பது உங்கள் உரிமை.

'இஸ்லாத்தில் வன்முறையில்லை. வன்முறைக்கான வித்திடப்படுகிறது என்பது அபாண்டமாகும்'

இஸ்லாம் என்று நான் குறிப்பிட்டு சொல்லவில்லை..மறுபடியும் படித்து பார்க்கவும்.எல்லா மதங்களுமே வன்முறைக்கான ராஜபாட்டையை நல்ல முறையில் போட்டிருக்கின்றன.இந்துமத கடவுள்கள் பலவும் ஆயுதபாணிகளாவே காட்சிஅளிக்கின்றன.கிருஸ்த்துவர்களின் மத அடையாளமாக ஒரு கொலைக்கருவி உள்ளது.பொதுவாக எல்லா மதங்களுமே வன்முறையின் ஊடாகவே வளர்ந்து வந்திருக்கின்றன. இதில் இஸ்லாமும் அடங்கும்.இன்னும் சொல்லப்போனால் இஸ்லாம் அடிப்படை
யாகவே 'ஒரு திமிரும் ஆசாமியாக'வே எனக்கு தெரிகிறது.இதை மறுப்பதற்கும் தங்களுக்கு முழு உரிமை உள்ளது.


'கயவர்களிடத்தே ஊடகங்கள் இருப்பதால் இவ்வாறு இஸ்லாத்துக் கெதிரான கருத்துக்கள் மக்கள் மனங்களிலே விதைக்கப்படுகிறது'

உண்மை.ஊடகங்கள் மட்டுமல்ல..பாலைவனங்களில் சிலர் துப்பாக்கியோடு குரானையும் சேர்த்து காண்பிக்கிறார்களே அவர்களும்தான் அந்த தப்பை செய்கிறார்கள்.அவர்களை பெரிய ஹீரோவாக நினைக்கும் அப்பாவி இஸ்லாமியர்களும் இந்த தப்புக்கு துணைபோகிறார்கள்.


தெரிந்து கொள்ள விருப்பம்:

1.ஏன் தாடியை மழிக்க கூடாது? குரானில் என்ன விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது?

2.என்னுடைய சில இஸ்லாம் நண்பர்கள் அல்லாவை ஆணாகவே உணர்வதாக கூறினார்கள். இதையே சில பெண்களும் கூறினார்கள்.இது பற்றிய தங்களின் விளக்கம்.

அதிர்ந்து போன விசயம்:
'மனிதனை விடவும் பலகோடி மடங்கு ரோஷமானவன்.'

எப்படி தெரிந்து கொண்டீர்கள் சுல்தான்? parsonal-ஆக தெரிந்த விசயம் போல் எழுதியது ஆச்சரியமாக இருந்தது.

கேள்விகளே அறிவின் அடிப்படை.

என் பின்னூட்டங்களுக்கு பொறுமையாக பதிலளிக்கும் உங்களுக்கு நன்றி.

சுல்தான் said...

//'அல்லாஹ் எதை வேண்டுமானாலும் தான் நாடினால் மன்னிப்பான் ஆனால் படைத்தவனாகிய தன்னை விடுத்து, வேறெதையும் இறைவனாக எடுத்துக் கொள்வதை மட்டும் மன்னிப்பதேயில்லை' என்று இஸ்லாம் கூறுகிறது' என்ற தங்கள் கருத்தில் உள்ள 'மன்னிப்பதேயில்லை' என்ற வார்த்தைக்கும், 'உங்கள் மார்க்கம் உங்களுக்கு எங்கள் மார்க்கம் எங்களுக்கு' என்ற ஜனநாயகரீதியிலான் கருத்துக்கும் எந்த இடத்தில் சரியான விளக்கத்தை கொடுத்திருக்கிறீர்கள்? எனக்கு புரியவில்லை.மறுபடி கூறினால் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.//

இந்த உலகில் எது சரியோ அதை நாம் தேடிப் பெறுவோம். அவ்வாறு தேடி, முடிவெடுத்து, அவரவர்க்கு சரியென்று தோன்றுவதை பின்பற்றுவோம். (நமக்குள் விவாதித்துக் கொள்ளக் கூடாதென்றோ, விவாதித்து நல்ல முடிவெடுக்கக் கூடாதென்றோ பொருளில்லை) அவ்வாறு முடிவெடுத்த பின் இவ்வுலகில் 'உங்கள் மார்க்கம் உங்களுக்கு எங்கள் மார்க்கம் எங்களுக்கு' என்ற ஜனநாயகரீதியிலான கருத்து கொள்வோம். யாரையும் யாரும் நிர்ப்பந்திக்க வேண்டாமே.

அடுத்து,
அவ்வாறு முடிவெடுப்பதில் வேண்டுமென்றே தவறிழைத்து, அல்லது எங்கள் முன்னோர்கள் சென்ற பாதையே பெரிதென நினைத்து, தவறில் மூழ்கி வாழ்பவனை, இறந்த பின்னுள்ள மறுமை வாழ்வில், 'படைத்தவனாகிய அவனை விடுத்து, வேறெதையோ இறைவனாக எடுத்துக் கொண்டு வாழ்ந்ததால், அதை மட்டும் இறைவன் மன்னிப்பதேயில்லை'

//ஒரு மாதிரி சப்பைகட்டத்தான் முடியும்.இதைத்தான் நீங்கள் செய்திருக்கிறீகள் என்பது என் கருத்து.//
இப்போதும் விளங்கவில்லையென்றால் சொல்லுங்கள். என் விளக்கத்துக்கு முன்னுள்ள உங்கள் கருத்து மாறியிருக்குமென நினைக்கிறேன்.

//பாலைவனங்களில் சிலர் துப்பாக்கியோடு குரானையும் சேர்த்து காண்பிக்கிறார்களே அவர்களும்தான் அந்த தப்பை செய்கிறார்கள்.அவர்களை பெரிய ஹீரோவாக நினைக்கும் அப்பாவி இஸ்லாமியர்களும் இந்த தப்புக்கு துணைபோகிறார்கள்.//
இதற்கு உங்களுக்கான என் முந்தைய பதிலிருந்தே எடுத்துப் போடுகிறேன்.
"முஸ்லீம்கள் தவறே செய்யவில்லை என நான் சொல்வதாக அர்த்தமாகாது. முஸ்லீம்கள் செய்யும் தவறுகள் பூதாகாரமாகக் காட்டப்படுகின்றன. முஸ்லீம்கள் செய்யும் தவறுகளும் களையப்பட வேண்டியவை, கண்டிக்கவும், தண்டிக்கவும் பட வேண்டியவை என்று இஸ்லாமும் சொல்கிறது."

//1.ஏன் தாடியை மழிக்க கூடாது? குரானில் என்ன விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது?//
குர்ஆனில் சொல்லப்பட்டிருப்பதும், குர்ஆனையே வாழ்வாக வாழ்ந்து காட்டிய நபியவர்களின் வாழ்வு வாக்கு அங்கீகாரம் ஆகிய அனைத்துமே இஸ்லாம்தான்.
இஸ்லாத்தில் பெண் போல் உடையணியும் ஆணும், ஆண் போல் உடையணியும் பெண்களும் சபிக்கப்படுகிறார்கள்.
ஆண்களும் பெண்களும் அவரவர்ககுரிய கடமைகளையும் ஒழுங்குகளையும் பேணக்கூடிய வகையில் சமமானவர்களே. ஆண் ஆண்மைக்குரிய ஒழுங்குகளோடும், பெண் பெண்மைக்குரிய ஒழுங்குகளோடும் இருக்க வேண்டும். இயற்கையிலே ஆண்மைக்கு இறைவன் அளித்துள்ளதுதான் தாடி. (ஆண் சிங்கத்துக்கு தாடி, ஆண் மயிலுக்குத் தோகை) அதை அழித்து பெண் தன்மையுள்ளவனாக காட்டக்கூடாது.

மேலும், தாடி வைக்கும்படி நபியவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.

//2.என்னுடைய சில இஸ்லாம் நண்பர்கள் அல்லாவை ஆணாகவே உணர்வதாக கூறினார்கள். இதையே சில பெண்களும் கூறினார்கள்.இது பற்றிய தங்களின் விளக்கம்.//
அல்லாஹ்வை அவன் என்று எழுதுவதால் அவ்வாறு அவர்கள் உணரக்கூடும். ஆனால் இஸ்லாத்தின்படி, அல்லாஹ் ஆணோ, பெண்ணோ, அலி(திருநங்கை)யோ அல்ல. தங்களுடைய சில இஸ்லாமிய நண்பர்கள் மற்றும் அந்த சில பெண்கள் 'அல்லாஹ்வின் உருவத்தை மனிதர்களால் இவ்வுலகில் உணர்ந்து கொள்ளவியலாதபடி அவன் மிக உயர்ந்தவன்' என்பதை அறியாதவர்களாய் இருப்பார்கள் என நினைக்கிறேன்.

//'மனிதனை விடவும் பலகோடி மடங்கு ரோஷமானவன்.' எப்படி தெரிந்து கொண்டீர்கள் சுல்தான்?//
நபி பெருமகனார் இறைவனுடைய தன்மைகளை விளக்கியுள்ளார்கள். அதிலே [இன்னல்லாஹ Gகயூரன்] அல்லாஹ் மிகுந்த ரோஷக்காரன் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதிலிருந்தே அறிந்து கொண்டேன்.

செல்வமணி said...

தங்களின் பதில் புது புது கேள்விகளைத்தான் உருவாக்குகிறது. இருந்தாலும் என் தேடுதலுக்கு உதவும் உங்களின் பொறுமையான பதில்களுக்கு என் நன்றி.

தொடந்து கருத்துக்களை பரிமாறிக் கொள்வோம்.

சுல்தான் said...

//தொடந்து கருத்துக்களை பரிமாறிக் கொள்வோம்.//
வாழ்க்கையே தேடுதல்தானே!. தொடர்ந்து தேடி, சரியானதிலேயே தொடர்வோம்.
ஆம். தொடந்து கருத்துக்களை பரிமாறிக் கொள்வோம். நன்றி செல்வமணி.

தருமி said...

உங்கள் சிரத்தைக்கும், பொறுமைக்கும் தலை வணங்குகிறேன். மிக்க நன்றி. சில கேள்விகளுக்கு 4 பதிவுகள் போட்டு விட்டீர்கள்.
நானும் பொறுமையாக அவைகளை வாசித்து, புரிந்து கொண்டு மீண்டும் ஒரு தனிப்பதிவோடு வருகிறேன். சிறிது பொறுமை காக்கவும்.

சுல்தான் said...

//சில கேள்விகளுக்கு 4 பதிவுகள் போட்டு விட்டீர்கள். நானும் பொறுமையாக அவைகளை வாசித்து, புரிந்து கொண்டு மீண்டும் ஒரு தனிப்பதிவோடு வருகிறேன்//
நன்றி தருமி ஐயா. தங்கள் வினாக்களுக்கு விளக்கமாக 3 பதிவுகள்தானே!

தருமி said...

ஆமாம்..மூன்றுதான்.

தருமி said...

அப்பாடா...ஒரு வழியாக காலம் தாழ்ந்தேயாயினும் வந்துவிட்டேன் ஒரு புதிய பதிவுடன்.

வாருங்கள்...

சுல்தான் said...

நன்றி. படித்து விட்டு வருகிறேன் ஐயா.

அ யூனூஸ் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்,

அன்பு சகோதரரே,

தங்களின் பதிவை தற்செயலாக காண நேர்ந்தது. உங்களின் பதிலும், அதை அமைதியாகவும், மென்மையான முறையிலும் கூறிட முயலும் பக்குவமும் அருமையானதாக உள்ளது. நான் பெங்களூரில் வசித்த் போது அங்கு வாசகர் வட்டம் ஒன்றை இஸ்லாமிய அமைப்பினர் நடத்திக் கொண்டிருந்தனர். (அல்ஹம்துலில்லாஹ், இன்றும் அது தங்கு தடையின்றி நடை பெறுகிறது) அங்கு பங்கு கொள்ளும் அனைத்து மத சகோதர சகோதரிகளுக்கு, இன்னும் இஸ்லாத்தைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ள இலவச குர் ஆனும், கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகளாக புத்தகங்களும் தருவர். இன்னும் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு அழைப்பு பணியை செய்யும் போது ஏற்படும் சவால்கள், அதை எதிர் கொள்ளும் விதங்கள் பற்றியும் வகுப்புகள் நடக்கும். உங்களின் பதில்களைப் பார்க்கையில் அந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன.

என்னுடைய சின்ன விண்ணப்பம் அல்லது, சிறு யோசனை என்னவென்றால், முடிந்த வரையில் உதாரணங்களை தவிருங்கள் / அல்லது குறைந்த உதாரணங்களைக் கொடுங்கள் / அல்லாஹ் தன் திருமறையில் எந்த கேள்விக்கு எத்தகைய உதாரணத்தை உபயோகிக்கின்றானோ, அதையே தந்திட முயலுங்கள். இதன் மூலம் தேவையற்ற அல்லது மீண்டும் அதிகமான கேள்விகளை எதிர் நோக்குவதை தவிர்க்கலாம். கவனிக்கவும். கேள்விகளைக் கண்டு அஞ்சி அதிலிருந்து தப்ப வழி கூறவில்லை. ஒரு கேள்விக்கு சரியான பதில் சென்று சேராத நிலையில், மற்றொரு கேள்வி முளைக்காமலிருக்க செய்யலாம். எத்தனை கேள்விகளை சந்திக்கின்றோம் என்பதை விட எத்தனை கேள்விகளுக்கு சரியான பதில் / குழப்பங்களற்ற தெளிவான பதிலை தந்திருக்கிறோம் என்பது முக்கியம். என் பின்னூட்டமோ அல்லது என் யோசனை கூறும் தோரணையோ தங்களுக்கு துன்பம் தந்திருப்பின் என்னை மன்னிக்கவும். அல்லாஹ் தங்கள் முயற்சிக்கு நற்கூலி வழங்கிடுவானாக. ஆமீன்.

சுல்தான் said...

//ஒரு கேள்விக்கு சரியான பதில் சென்று சேராத நிலையில், மற்றொரு கேள்வி முளைக்காமலிருக்க செய்யலாம். எத்தனை கேள்விகளை சந்திக்கின்றோம் என்பதை விட எத்தனை கேள்விகளுக்கு சரியான பதில் / குழப்பங்களற்ற தெளிவான பதிலை தந்திருக்கிறோம் என்பது முக்கியம்.//

வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹ்.

அன்பின் சகோதரர் யூனுஸ்

நீண்ட நாட்களாக இந்த இடுகை தொடப்படாமலே இருந்தது.

தங்களின் யோசனை வரவேற்கத்தக்கதே.

தங்களின் பிரார்த்தனைக்கு நன்றி.
ஜஸாகல்லாஹ் ஹைர்.

தருமி said...

Sultan,
long time... no see!

என் பதிவில் உங்களிடம் இட்ட ஒரு கேள்வி:

சுல்தான்,
//எப்போதும் சொல்வதுதான். அழகான கேள்விகளுக்கும் தேடல்களுக்கும் தெளிவான பதில்கள் இஸ்லாத்தில் உண்டு.//

எப்போதும் மட்டுமல்ல எல்லா இஸ்லாமிய நம்பிக்கையாளர்களும் இதையேதான் சொல்வதுண்டு என்பது தெரியும். அதையே பல முறை ஒரு கேள்வியாக்கிட வேண்டியதுள்ளது. சரி, இப்போதைக்கு அதை விடுங்கள்.

எனக்கு இன்னொரு ஐயம்; பதில் தெரிந்து கொள்ளவே இந்தக் கேள்வி:

குரானில் திருநங்கைகளைப் பற்றிய தகவல் ஏதுமுண்டா?
கடவுளே எல்லாவற்றையும் படைத்து அருள் பாலிப்பவன் என்றால் திருநங்கைகளை இவ்வாறாகப் படைத்தது ஏன்?
(சமீபத்திய தொலைக்காட்சித் தொடர் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது மனதில் தோன்றிய கேள்வி.)

சுல்தான் said...

நன்றி தருமி ஐயா.
தங்களுக்கு பதில் சொல்லிய பதிவுதான் கடைசி. அதன் பின் இவ்விடுகையில் நான் பதிவெதுவும் எழுதாமல், தொடப்படாமலேயே இருக்கிறது.
உங்களுக்கு பதில் எழுதுவதன் மூலம் மீண்டும் தொடங்கி, தொடர முயற்சிக்கிறேன்.

தருமி said...

நன்றி சுல்தான்.

நானே இப்போதுதான் பார்க்கிறேன். நாம் ஒருவரை ஒருவர் பதிவுகளில் கேள்வியும் பதில்களுமாய் பார்த்துக் கொண்டு சரியாக ஓர் ஆண்டாகி விட்டது.

//........ மீண்டும் தொடங்கி, தொடர முயற்சிக்கிறேன்//

ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன்; நன்றி.

தருமி said...

சுல்தான்,

குரானில் திருநங்கைகளைப் பற்றிய தகவல் ஏதுமுண்டா?
கடவுளே எல்லாவற்றையும் படைத்து அருள் பாலிப்பவன் என்றால் திருநங்கைகளை இவ்வாறாகப் படைத்தது யார்? ஏன்? கடவுளின் படைப்பின் குறைபாடுதான் காரணமா?

தருமி said...

ஹலோ .........

தருமி said...

சுல்தான்,

குரானில் திருநங்கைகளைப் பற்றிய தகவல் ஏதுமுண்டா?
கடவுளே எல்லாவற்றையும் படைத்து அருள் பாலிப்பவன் என்றால் திருநங்கைகளை இவ்வாறாகப் படைத்தது யார்? ஏன்? கடவுளின் படைப்பின் குறைபாடுதான் காரணமா?

??????????