தருமி ஐயாவின் வினாக்களுக்கு என் விளக்கங்கள் (பகுதி-1)

நான் புதிய வீடு பார்த்து, மாறுவதற்கான முயற்சிகளில், தங்களுக்கு உடனுக்குடன் விளக்கமளிக்க இயலாதிருந்தது. தாமதத்துக்கு வருந்துகிறேன்.
இறைவன் நாடினால், இன்னும் ஓரிரு வாரங்களில் புது இடத்தில் முழுதும் செட்டிலாகி (settle) விடுவேன். அதன் பின், நிலைமை சீராகி விடும் என நம்புகிறேன்.

இனி ஒவ்வொன்றாக உங்கள் கேள்விக்கு வருவோம்.

1. //வன்முறைக்கும் துவேசத்துக்கும் இங்கே இடமேயில்லை. இது உங்கள் கருத்து.
எனது கேள்வி:
ஹ்ல்ரத் அலீ (ரலி): "உலகினில் ஏற்படுகின்ற குழப்பங்களுக்குத் தீர்வு காண அல்லாஹ்வின் வேதந்தான் சிறந்த வழி. ...(தன் அறிவைக்கொண்டு) பெருமையடிக்கிறவன் இதனை (அமல் படுத்தாமல்) விட்டு விட்டால், அல்லாஹ் அவனைத் துண்டு துண்டாக ஆக்கிவிடுவான்.
உங்களது வார்த்தைகளுக்கும், இந்த மேற்கோளுக்கும் உள்ள வித்தியாசம் ஏன்?//

நீங்கள், அலி (ரளி) அவர்களுடைய கூற்றை எடுத்துக்காட்டி, எனது வார்த்தைக்கும், இந்த மேற்கோளுக்கும் வித்தியாசம் என்று கூறியுள்ளீர்கள்.

இதற்கு பதில் சொல்லும் முன், இஸ்லாத்தைப் பற்றிய சிறு அறிமுகம் அவசியமாகும். அப்போதுதான் பதிலின் யதார்த்தம் இயல்பாய் விளங்கும்.

இஸ்லாத்தில் இணைய விரும்புபவர் நன்றாக அறிந்து, யோசித்து முடிவெடுக்க வேண்டும். இந்த உலக வாழ்க்கையே பெரிதென்றும், போதுமென்றும் நம்புபவர்களுக்கு இஸ்லாம் சிறந்த முடிவாக இருக்காது. ஏனெனில், இஸ்லாம் இறப்பிற்கு பின்னுள்ள மறுமை வாழ்க்கையை அடிப்படையாக நோக்குவது. இவ்வுலக வாழ்க்கைதான் நம் மறுமை வாழ்வுக்கு நாமிடுகிற அடித்தளம் என்று இஸ்லாம் கூறுகிறது.

'இவ்வலகத்தின் சுக போக வாழ்வே எல்லாம்' என்று நினைப்பவர்களின் பார்வையில், உண்மையான இறை நம்பிக்கையாளனுடைய இவ்வுலக வாழ்க்கை, சிறை வாழ்க்கையாகவே காட்சி தரும். ஏனெனில் கட்டுப்பாடுகளில்லாத சுகபோக வாழ்க்கையையே மனிதன் ஆசிக்கிறான். இஸ்லாம், வெறும் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் உள்ளடக்கிய மதமன்று. அது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் கடைபிடித்தொழுக வேண்டிய நெறிமுறைகளை சொல்லித் தந்து, அதன்படி வாழ வழிகாட்டும் ஒரு உயரிய வாழ்வியல்.

அதனால்தான் இஸ்லாத்தில் முழுதுமாக நுழைந்து விட வேண்டுமென்று இஸ்லாம் பணிக்கிறது. 'ஆற்றில் ஒரு காலும், சேற்றில் ஒரு காலும்' வைத்துக் கொண்டு வாழ்பவர்களால் இஸ்லாம் எதிர்பார்க்கும் உயர்வைப் பெற முடியாது.

நீங்கள் எடுத்துக்காட்டிய மேற்கோள், இஸ்லாத்தை தன் வாழ்வியலாகத் தேர்ந்தெடுத்தவர்களைப் பார்த்துச் சொன்ன நபிகளாரின் வாசகமாகும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு அடிப்படையில் முடிவெடுத்தால் இஸ்லாத்தில் பல பிரிவினைகள் எற்பட்டு மார்க்கம் துண்டு துண்டாகி விடும். உதாரணத்துக்கு: (எந்தவொரு பிரிவினரையும் புண்படுத்துவதோ குற்றம் சொல்வதோ என் நோக்கமன்று)

அ.) கிறிஸ்துவத்தில் ஏகப்பட்ட பிரிவுகள் இருப்பதற்கு முக்கியமான ஒரு காரணம்: அவர்களின் மூல நூலாகக் கொள்ள வேண்டிய பைபிளே பல மாதிரியாக இருப்பதும், அவரவர் கையிலுள்ளதைக் கொண்டு, ஒவ்வொரு குழுவும் தனித்தனி சட்டங்களை உருவாக்கி கொண்டதும்தான்.

ஆ.) இஸ்லாத்தை விளக்கிச் சொல்ல வந்த சில முந்தைய அறிஞர்கள் (போற்றுதலுக்குரிய இமாம்கள்), குர்ஆனையும், அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு கிடைத்த, நபியவர்களின் (வாழ்வும், வாக்கும், ஒப்புதலும்) ஹதீஸ்களையும் அடிப்படையாக கொண்டு சட்டங்களை அமைத்துச் சென்றனர். 'எமக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் சட்டமியற்றினோம். ஆதாரங்களை நோக்காமல் வெறுமனே எம் சட்டங்களை நோக்கலாகாது. இதைவிட சிறந்த ஆதாரங்கள் கிடைக்குமிடத்து எம் சட்டங்களை தூக்கியெறிந்து விட வேண்டும்' என்றும் சொல்லிச் சென்றனர்.
ஆனால் அவர்களது சட்டங்களை எடுத்துக் கொண்ட முஸ்லீம்களில் சிலர், (குர்ஆனும் எல்லா ஹதீஸ்களும் தரம் பிரிக்கப்பட்டு புத்தக வடிவில் கிடைக்கும் இந்நாளிலும்) அவர்கள் கூறிய அடிப்படையை விட்டதால், இஸ்லாத்தின் ஒரு சில உள் சட்டங்களினுள் சில வித்தியாசங்களை ஏற்படுத்தி விட்டனர். இந்த மாயை, தற்போது விளக்கப்பட்டு, விலகிக் கொண்டிருக்கிறது.

எனவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய வந்த நபிகளார், முஸ்லீம்கள் தங்களிடையே ஏற்படும் எல்லா பிணக்குகளுக்கும் பூசல்களுக்கும் தீர்வை, அடிப்படையான குர்ஆனைக் கொண்டே பெறச் சொல்கின்றனர். அவ்வாறு தீர்ப்பளிக்காவிட்டால் மக்கள் சிதறுண்டு விடுவார்கள். அதனால் அவ்வாறு தீர்ப்பளிக்காதவர்கள் இறப்பிற்கு பின்னுள்ள மறுமை வாழ்வில் இறைவனால் தண்டிக்கப்படுவார்கள் (நொறுக்கப்படுவார்கள்) என்று எச்சரிக்கிறார்கள்.

இஸ்லாமிய பார்வையில் குழப்பம் விளைவித்தல் கொலையைப் போன்ற கொடுமையானது. இஸ்லாம் தவறு செய்தவர்களுக்கு தவறுகளுக்கேற்ப மறுமையின் தண்டணையை கடுமையாக்கியுள்ளது.

இதிலே இவ்வுலகின் வன்முறையையும் துவேசத்தையும் குறிப்பிடவில்லை. மாறாக, இறப்பிற்கு பின்னுள்ள மறுமை வாழ்வின் தண்டணையைப் பற்றி குறிப்பிடுகிறது.

(நீங்கள் மேற்கோள் காட்டீய ஹதீஸ் திர்மிதீ என்ற நூலில், நபியவர்கள் அவ்வாறு சொன்னதாக அலி (ரளி) அவர்கள் கூறியதை ஹாரிஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள். தாங்கள் நூல் குறிப்பிடாததால், இதைத் தேடுவதில் புகாரீ, முஸ்லீம் ஹதீஸ் கிரந்தங்களில் ஓரிரு நாட்கள் வலம் வந்தேன்.)

2. //"அது அல்லாத (வேறு கிரந்தத்)தில் நேர்வழியைத் தேடுபவரை வழிதவறச் செய்து விடுவான்." இஸ்லாத்தில் எவ்வித நிர்பந்தமுமில்லை என்பதும் இதன் அடிப்படைகளில் ஒன்று.//

'இஸ்லாத்தில் எவ்வித நிர்ப்பந்தமுமில்லை' என்பதை தாங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்களோ என ஐயுறுகிறேன் ஐயா!

உண்மை (எனும் நேர்வழி) எது! பொய் (எனும் தவறான வழி) எது! என பிரித்தறிவிக்கப்பட்டு, தெளிவுபடுத்தப் பட்டுள்ளது. அதை முயற்சி செய்து அறிந்து, தெளிந்து, அதன் மூலம், நேர்வழி அல்லது தவறான வழி இரண்டில் எதை வேண்டுமானாலும் ஒருவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அவரவர் தேர்ந்தெடுத்து வாழ்ந்த வாழ்க்கைக்குரிய நன்மை, தீமைகளை அவர்கள், மறுமை எனும் நிரந்தர வாழ்வில் அனுபவிப்பார்கள் என்பதே இஸ்லாம் கூறுவதாகும்.

எனவே 'இஸ்லாத்தில் நுழைந்தாக வேண்டுமென யார் மீதும் எவ்வித நிர்ப்பந்தமுமில்லை' என்பதே அதன் விளக்கமாகும்.

ஏனெனில், ஒருவர் இஸ்லாத்தில் நுழைந்த பின், தான் தோன்றித்தனமான வாழ்க்கை வாழ்ந்தால் அவர் சிறந்த முஸ்லீமாக முடியாது. வாழ்வின் எல்லா நிலைகளிலும் இஸ்லாமிய வாழ்வியலுக்கு இயைந்த வாழ்க்கை வாழ்ந்தாலே, இவ்வுலகில் அவர் மனிதத்தை நிலை நிறுத்தி புனிதராக வாழ முடியும். (இந்த உண்மையை வாழ்வின் ஒவ்வொரு கோணத்திலும் எங்களால் உணர முடிகிறது. அந்த நல்வழிகளில் வாழ முயற்சிப்பதையே ஒவ்வொரு முஸ்லீமும் தன் வாழ்வின் இலட்சியமாகக் கொள்கிறான்). மறுமையிலும் சிறந்த பயன்களைப் பெற முடியும் என இஸ்லாம் சொல்கிறது.

இஸ்லாத்தினுள் நுழைந்த பின்னர், பல கிரந்தங்களில் நேர்வழியைத் தேடும் ஒருவனால் வழி தவறத்தான் முடியுமே ஒழிய, இஸ்லாம் கூறும் உன்னத வழியை அடைய முடியாது.

இஸ்லாத்தை தேர்ந்தெடுக்கு முன், இஸ்லாம் உள்பட எல்லா வழிகளையும் சோதிக்கலாம். இஸ்லாம்தான் சரியான வழி என்று தேர்வு செய்து, நுழைந்த பின் அதில் உறுதியுடன் வாழ வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்.

(விடயம் நீண்டதாக இருப்பதால், படிக்க சோர்வேற்படாதிருக்க பகுதி பகுதியாக எழுதுகிறேன்.)

8 comments:

ஜோ / Joe said...

//கிறிஸ்துவத்தில் ஏகப்பட்ட பிரிவுகள் இருப்பதற்கு முக்கியமான ஒரு காரணம்: அவர்களின் மூல நூலாகக் கொள்ள வேண்டிய பைபிளே பல மாதிரியாக இருப்பதும், அவரவர் கையிலுள்ளதைக் கொண்டு, ஒவ்வொரு குழுவும் தனித்தனி சட்டங்களை உருவாக்கி கொண்டதும்தான்.//

ஐயா,
இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லையா ? சியா,சன்னி என்பது என்ன ஐயா?

ஜோ / Joe said...

//இஸ்லாத்தை தேர்ந்தெடுக்கு முன், இஸ்லாம் உள்பட எல்லா வழிகளையும் சோதிக்கலாம்.//
எப்படி ? எல்லா வழிகளையும் கொஞ்சம் கொஞ்சம் நாட்கள் பின்பற்ற வேண்டுமா?

//இஸ்லாம்தான் சரியான வழி என்று தேர்வு செய்து, நுழைந்த பின் அதில் உறுதியுடன் வாழ வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்.//

ஏற்கனவே ஒரு வழியை சரியென்று நம்பி இருந்து விட்டு பின்னர் இஸ்லாம் வழியே சரியென்று இஸ்லாமுக்கு வருவதாக வைத்துக்கொள்வோம் .பின்னர் இஸ்லாம் வழி சரியல்ல என உணர்ந்தால் என்ன செய்ய வேண்டும் ஐயா ?

சுல்தான் said...

//இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லையா ? சியா,சன்னி என்பது என்ன ஐயா?//
இதெல்லாம் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட தவறுகள் என்பதை அதற்கடுத்த உதாரணம்-ஆ விலேயே குறிப்பிட்டிருக்கிறேனே ஐயா! இன்னொரு முறை பாருங்கள்.

//எப்படி ? எல்லா வழிகளையும் கொஞ்சம் கொஞ்சம் நாட்கள் பின்பற்ற வேண்டுமா?//
படித்தால், அல்லது படித்தவர்களிடம் கேட்டறிந்தாலே மூளையை உபயோகித்து முடிவெடுக்கலாமே!. ஒவ்வொன்றையும் பின்பற்றித்தான் ஆக வேண்டுமென்பதில்லையே!.

//பின்னர் இஸ்லாம் வழி சரியல்ல என உணர்ந்தால் என்ன செய்ய வேண்டும் ஐயா ?//
ஒரு விஷயம் சரியெல்ல என்று உணர்ந்தால் என்ன செய்ய வேண்டுமென்பதெல்லாம் சொல்ல வேண்டுமா ஐயா?

நன்றி ஜோ.

சுல்தான் said...

வருகைக்கு நன்றி கரு. மூர்த்தி.
உங்கள் அழுக்குகளைக் கொட்ட இது இடமல்ல. தயவு செய்து உங்கள் பதிவிலேயே கொட்டிக் கொள்ளுங்கள்.

ஜோ / Joe said...

சுல்தான் ஐயா,
நீங்கள் பதில் சொல்லுகிற விதத்திலேயே தெரிகிறது ,நான் கேள்வி கேட்பதை தாங்கள் விரும்பவில்லை என்று ..இனிமேல் நான் எதுவும் கேட்கப்போவதில்லை .மன்னிக்கவும் .மிகுந்த ஏமாற்றத்துடன் ,ஜோ.

சுல்தான் said...

அன்பு ஜோ.
//நீங்கள் பதில் சொல்லுகிற விதத்திலேயே தெரிகிறது//
நான் சரியாக பதில் சொல்வதாகத்தான் நினைக்கிறேன். உங்கள் மனதை வருத்தியிருந்தால் மன்னிக்கவும்.
மேலும் என் பதிலின் எந்த இடம் தங்கள் மனதை புண்படுத்தியது என அறியத் தந்தால் அடுத்தடுத்த முறைகளில் திருத்திக் கொள்ள முயற்சிக்கிறேன்.
மற்றபடி கேள்வி கேட்பதில் எந்தத் தவறும் இல்லை. தெரியாததைக் கேட்டால்தானே தெரிநந்து கொள்ள முடியும்.

தருமி said...

sultan,
sorry for not communicating. net at home is off for the past two days. may take a day or so more.

however, my Q is based on the VIOLENCE in the words. whether it is aimed at fidels or infidels it is a very violent statement - a divine violence towards human beings.
a god need and should not bother whether a man reaches him through path A or B ... man should reach him, that is all what it should be.

சுல்தான் said...

Thank you Dharumi Sir.
I am answering one by one sir and that question is coming at last. Definitely we will discuss about it sir.