நாம் வாழும் இவ்வுலகில் கோடிக்கணக்கான மக்கள் நம்மோடு வாழ்கின்றனர். எண்ணிலடங்காதோர் வாழ்ந்து மடிந்தனர். மனிதர்களிடையே நிறத்தால், குணத்தால், அறிவால், மொழியால், உடல் அமைப்பால் இன்னும் பலவற்றால் வேறுபாடுகள் இருந்தாலும் அவர்களனைவரது மூலப்பொருளும் விந்துத் துளிதான். அனைவருக்கும் குருதி செந்நிறந்தான். அனைவரும் மனிதர்கள்தாம்.
மனித வரலாற்றை தலைமுறை தலைமுறையாக ஆய்ந்தால் கடைசியில் ஒரு மனிதனில்தான் முடியும் என்பதில் ஐயமில்லை. இவ்வடிப்படையில் எல்லா மக்களும் ஒரே தாய் தந்தையரின் வழித் தோன்றல்கள்தான்.
மனிதனுக்கு மேலாக சர்வ வல்லமை பொருந்திய ஒரு சக்தி உண்டென்று பகுத்தறிவு சொல்கிறது. ஆன்மீக நம்பிக்கையுள்ளோர் அதை இறைவன் என்கின்றனர். சிந்தனையை சற்று கூர்மைப் படுத்தினால், இந்த இறைவனைப் பற்றி மனம் பல கேள்விகளை எழுப்புகிறது.
யார் அந்த இறைவன்? அவன் ஒருவனா? இருவரா? மூவரா? அல்லது பலரா? அதன் பண்புகள் என்ன? அதனைப் பார்க்க முடியுமா? அதன் சக்தி எவ்வளவு? அவன் குறிப்பிட்ட பூமிக்கு, நாட்டிற்கு, மக்களுக்கு மட்டும் இறைவனா? அல்லது எல்லோருக்கும், எந்நாட்டவருக்கும், எல்லா மொழியினருக்கும், எல்லா உயிரினங்களுக்கும், எல்லா கிரகங்களுக்கும் அவன்தான் இறைவனா? என்று பலப்பல கேள்விகள் எழுகின்றன.
மனிதனின் சிறப்பம்சமான பகுத்தறிவைக் கொண்டு மேற்கண்ட கேள்விகளை ஒவ்வென்றாய் ஆய்வோம்.
இப்போது ஒன்றிற்கு மேற்பட்ட கடவுளர் இருப்பதாக கொள்வோம். ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொன்றை நினைத்து, அதை செயல்படுத்தினால்.....
ஒரு கடவுள் ஒரு மனிதனை தண்டிக்கவும் மற்றொரு கடவுள் அம்மனிதரை மேம்படுத்தி நன்மை செய்யவும் முனைந்தால்..... முடிவு....??
ஆக ஒரே அதிகாரம், ஒரே சக்தி, ஒரே இறைவன் தான் இருக்க முடியுமென்று பகுத்தறிவு சொல்கிறது.
மனிதனைப் போன்றே கடவுளும் இருந்தால்.....
நமக்குரிய பலவீனங்கள் அவரிடமும் இருக்கும்.
நம்மைப் போன்றே பலவீனமுள்ள இறை எதற்கு? அவசியமில்லையே!
நம்மில் மாறுபட்டு, பலவீனங்கள் அற்றவனாக, அவன் உயர்ந்திருக்க வேண்டுமென நம் பகுத்தறிவு சொல்கிறது.
நம்மைப் போன்று பசிப்பிணி உள்ளவனாக இல்லாமல், இறைவன் உண்ணாதவனாகவும் நமக்கு உணவளிப்பவனாகவும் வேண்டும். ஏனெனில் அவன் உண்ணும்போது உதவி வேண்டுவோருக்கு உதவ முடியாதே!.
நாம் தேவையுடையவர்களாய் இருக்கிறோம். இறைவன் எந்தத் தேவையுமற்றவனாக வேண்டும். ஏனெனில் தேவைகளுக்காக அவனே எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் நம் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாதே!.
நாம் தாய், தந்தை, குழந்தை, குடும்பமென்று, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, சார்ந்து வாழ்கிறோம். இறைவன் யாரையும் பெறாதவனாகவும், யாராலும் பெறப்படாதவனாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் அவன் குடும்பத்தாருக்கு கட்டுப்பட்டு நமது தேவைகளை நிறைவேற்றாமல் போய் விடக்கூடாதல்லவா?.
நமக்கு நிச்சயம் மரணமுண்டு. இறைவன் மரணமடையாதவனாக, நித்திய ஜீவனாக இருக்க வேண்டும். ஏனெனில் மரண பயத்தில் அவன் நம்மை மறந்து விடக்கூடாதே.
நாம் உழைப்புக்குப் பின் களைக்கிறோம், ஓய்வெடுக்கிறோம், உறங்குகிறோம். இறைவன் களைப்பற்றவனாக, ஓய்வு தேவையற்றவனாக, உறங்காதவனாக வேண்டும். ஏனெனில் அவன் களைப்புற்று, ஓய்வெடுக்கும் போது அல்லது உறங்கும்போது, நமது தேவைக்கான கூப்பாடு அவனுக்கு கேட்காது அல்லது அவனை எரிச்சலடையச் செய்யுமே.
நாமும் ஏனைய பொருட்களும் படைக்கப்பட்டவர்கள் அதனால் படைத்தவனிடம் கடப்பாடுண்டு. இறைவன் படைக்கப்படாதவனாயும் அதே நேரம் எல்லாவற்றையும் படைத்தவனாயும் இருக்க வேண்டும்.
நமக்கு நாளையைப் பற்றிய சரியான ஞானமில்லை. நமது கண்களுக்கு அப்பால் நடப்பதை அறிய மாட்டோம். இறைவனோ நடந்தது, நடப்பது, நடக்க விருப்பது என முக்காலத்தைப் பற்றியுமான தெளிவான ஞானமுடையவனாக இருப்பதோடு, அவன் பார்வைக்கு எதுவும் மறைந்ததாகவும் இருக்கக் கூடாது. ஏனெனில் நாளைக்கு நமக்கே கெடுதலாக வருமென்பதை அறியாமல், நாம் எதையாவது கேட்டு வைக்க, இறைவனும் அதையே தெரியாமல் கொடுத்து விட்டால்…..
நாம் நினைப்பதை எல்லாம் செயல்படுத்த முடியாது ஏனெனில் நாம் சிலரது அல்லது பலரது கேள்விகளுக்கு பதில் சொல்லக் கடைமையுடையவர்கள். இறைவன் தான் நினைத்ததை முடிப்பவனாக இருக்க வேண்டும். அவனே கேள்வி கேட்பவனாகவும், யாராலும் கேள்வி கேட்கப்படாதவனாகவும் இருந்தாக வேண்டும்.
நாம் பயந்தவர்களாகவும் பாதுகாப்பு வேண்டியவர்களாகவும் இருக்கிறோம். இறைவன் பயமற்றவனாக, பாதுகாப்பு தேவையற்றவனாக, அதே சமயம் நம்மைப் பாதுகாப்பவனாகவும இருக்க வேண்டும்.
இத்தகு தகுதிகளுள்ள இறைவன் நம்மிடம் எவ்வாறு நடப்பவனாக இருக்க வேண்டும் என பகுத்தறிவு எதிர்பார்க்கிறது?
இறைவன் கருணையும், அன்பும் நிறைந்தவனாக இருக்க வேண்டும். தாய் தன் குழந்தையிடம் காட்டும் இரக்கத்தை விட மிகக் கூடுதலான இரக்கமுள்ளவனாக இருக்க வேண்டும்.
நாம் நன்மை செய்தால் நமக்கு பரிசளிப்பவனாகவும், நாம் தீமை செய்தால் நம்மை தண்டிப்பவனாகவும் இருக்க வேண்டும். செய்த தீமைகளுக்காக நாம் மனம் வருந்தினால் நம்மை மன்னிக்கும் மாண்பாளனாகவும் இருக்க வேண்டும்.
அவன் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கோ, மொழியினருக்கோ, ஜாதியினருக்கோ, நாட்டினருக்கோ மட்டும் இறைவனாக இல்லாமல் மனித குலம் அனைத்துக்கும் (ஏன்? இப்பிரபஞ்சம் முழுமைக்கும்) அவனே இறைவனாக இருக்க வேண்டும். நம் தோற்றத்தையோ, மொழியையோ, குலத்தையோ பார்க்காமல், நம் எண்ணங்களையும், செயல்களையும் பார்த்து எடை போடுபவனாக இருக்க வேண்டும்.
பலப்பல தீமைகள் செய்து, அட்டூழியங்களே வாழ்க்கையாக வாழ்ந்து, பொதுச்சொத்துகளை அபகரித்து, கொலைப் பல செய்து, மனித உரிமைகளை மிதித்து வாழ்ந்தவர்கள், சில பல காரணங்களுக்காக இவ்வுலகில் தப்பி விட்டாலும், அவர்களை சரியாக விசாரணை செய்து தகுந்த தண்டனையளிப்பதோடு பாதிக்கப்பட்பவர்களுக்கும் மனம் நிறையும் நீதி வழங்குவதில், அவன் நீதி வழுவாதவனாக இருக்க வேண்டும்.
அவன் படைத்த மனிதர்களாகிய நமக்குள்ளேயே பிறப்பாலோ, செல்வத்தாலோ அல்லது தொழிலாலோ உயர்வும் தாழ்வும் கற்பிக்காதவனாக இறைவன் வேண்டும்.
இறைவன் நம்மைப் படைத்தவனாகவும், பாதுகாப்பவனாகவும், நேர்வழி காட்டுபவனாகவும், தெளிவான வாழ்க்கைத் திட்டத்தை தருபவனாகவும் வேண்டும்
என்றெல்லாம் சிந்தனை விரிகிறது.
இப்படி பகுத்தறிவு கேட்கும் கேள்விகளுக்கு, மாற்றமில்லாத இறையைத்தான் எனக்கு இஸ்லாம் அறிமுகப்படுத்தித் தந்தது.
இஸ்லாம்
1. இது ஒரு மதமல்ல. மனிதன் எவ்வாறு வாழ வேண்டுமெனச் சொல்லும் வாழ்க்கை நெறிமுறைகளின் தொகுப்பு அல்லது வழிகாட்டி
2. இது மனித அறிவினால் தோற்றுவிக்கப்பட்டதல்ல. இறைவனே கொடுத்தருளியது. மனிதன் இன்று ஒன்றைச் சொல்வான், நாளை அந்நியதிகள் மாறலாம். முக்காலமும் அறிந்த இறைவனின் நியதிகளில் தவறு ஏற்படாது.
3. அதற்காக சிந்தனைக்கும் பகுத்தறிவுக்கும் அபபாற் பட்டதல்ல. சிந்திக்கவும் பகுத்தறிவைப் பயன்படுத்தத் தூண்டும் அல்லது வற்புறுத்தும் வாழ்க்கை நெறி.
4. வன்முறைக்கும் துவேசத்துக்கும் இங்கே இடமேயில்லை. இஸ்லாத்தில் எவ்வித நிர்பந்தமுமில்லை என்பதும் இதன் அடிப்படைகளில் ஒன்று.
5. மனிதரிடையே ஜாதி, இன, மொழி வேறுபாடுகளால் உயர்வு தாழ்வில்லை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற முறையில் அமைக்கப் பட்டுள்ளது. பிறப்பால் மேல் ஜாதி அல்லது கீழ் ஜாதி என்றோ, அரசன், ஆண்டி, படித்தவன், பாமரன் என்றோ உள்ள வேறுபாடுகளையெல்லாம் களைந்து மனிதர்களிலே நல்லவன், தீயவன் என்ற அடிப்படையில் மட்டும் அணுகும் ஒரு வழிமுறை.
6. இது வெறும் சடங்கு சம்பிரதாயங்கள் மட்டுமேயுள்ள மதமல்ல. இது ஒரு அழகான, முழுமையான வாழ்க்கைத் திட்டம். பெண்ணுரிமை பேணி, சரியான அந்தஸ்தை வழங்குகிறது.(பெண்களுக்கும் சொத்தில் உரிமை, விதவை மறுவாழ்வு, ஆண்தான் பெண்ணுக்கு வரதட்சணை வழங்கவேண்டும்.)
7. இது மனித குலம் எதிர் நோக்கியுள்ள அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு வழங்கும் நீதித்திட்டம். (பொருளாதாரக் கோட்பாடுகள், சட்ட இயந்திரத்தின் இயக்கம், வட்டியில்லா வாழ்வு, இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுப்பது அவர்களது கடமை என்றும், இருப்பவர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை அரசின் முலம் எடுப்பது இல்லாதவர்களுக்கான உரிமை என்றும் கூறுகிறது.)
8. பொய், களவு, லாட்டரி, மது, சூது, விபச்சாரம், லஞ்ச லாவண்யம், அடக்குமுறை, அடிமைத்தனம், மூட நம்பிக்கைகள் போன்றவற்றை வேரோடு ஒழிக்கும் ஒரு பகுத்தறிவுப்பாதை.
9. இது மனித உரிமைகளை நிலை நிறுத்தும் ஒரு மிகப்பெரிய வழி முறை. அறிவியல், தொழில் நுட்பம் இதற்கு எதிரானதல்ல. மாறாக, இயைந்தது. இஸ்லாம் ஒரு அறிவியல் பூர்வமான அணுகுமுறைக்கான வழிமுறைதான்.
10. சமத்துவத்தையும் சகோதரத் துவத்தையும் நிலை நிறுத்தி, மனிதன் மனிதனாக வாழ்ந்து, சாந்தியையும் சமாதானத்தையும் அடைவதற்கு வழி காட்டும் முழுமையான வாழ்க்கை நெறி முறைகளின் தொகுப்புதான் இஸ்லாம்.
நான் விரும்புவதை மற்றவர்களும் விரும்ப வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை. நான் நினைப்பதைப் போலவே மற்றவர்களும் நினைக்க வேண்டியதுமில்லை. என்னுடைய விருப்பு பலருக்கு வெறுப்பாகலாம். நான் வெறுப்பதை பலர் விரும்பலாம். இவை மனித இயற்கை.
என் எண்ணங்களை இங்கே வைத்திருக்கிறேன். என்னைப் போன்றே எண்ணமுள்ளவர்களைக் காணும் போது மனது மகிழ்வதும் இயல்புதானே. நேரெதிரான எண்ணமுள்ளவர்களை சந்திக்கும்போது - தவறான கொள்கையில் (என் பார்வையில்) இவ்வளவு பிடிவாதமாக இருப்பதற்காக வருத்தப் படுவேன் - ஆனால் அவர்களை வெறுப்பதில்லை. இயன்றால் அவர்களுக்காக பிரார்த்திப்பேன். அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். என் கருத்து எனக்கு, உங்களது உங்களுக்கு. என் கருத்தை விடவும் சிறப்பான கருத்துகள் யாரிடமிருந்தாவது வந்தால், அதன் உண்மைகளை யோசிக்க நான் தயங்க மாட்டேன். அது போல் நான் சொல்பவற்றின் உண்மைகளை எந்த இதயமாவது யோசித்தால்.... அதுதான் இவ்வெழுத்தின் நோக்கம்.
உலகில் ஒரு பொருளை வாங்கும் முன் அதன் தரமென்ன? அது பயனுள்ளதா? ஏதேனும் கேடு தருமா? என்றெல்லாம் சிந்தித்து வாங்குகிறொம். ஆனால், மிகப் பரிதாபம்!. நமது இவ்வுலக மற்றும் மறு உலக வாழ்க்கை வழிகாட்டி, வாழ்க்கையின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் உன்னதமான அந்த குர்ஆனையும் இஸ்லாத்தையும் சிந்திக்கிறோமா? பகுத்தறிவை பயன்படுத்துங்கள்.
அறிவுப் பூர்வமாக சிந்தியுங்கள். உங்கள் இறைவனைப் பற்றி நீங்களே சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். பகுத்தறிவு நெறியான இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் ஏன் அறிய முற்படக் கூடாது. இஸ்லாம் தந்துள்ள அறிவுப் பெட்டகமான குர்ஆனை நீங்களே சுயமாக ஏன் ஆய்வு செய்யக் கூடாது.
இறைவன் நாடினால்…. இன்னும் வரும்.
எழுதியவர்: சுல்தான் at 7:29 PM
29 மறுமொழிகள்:
Sivabalan said...
இன்னும் முழுமையாக இப்பதிவை படிக்கவில்லை..
படித்துவிட்டு வருகிறேன்..
நன்றி!
8:26 PM
--------------------------------------------------------------------------------
We The People said...
//ஒரு கடவுள் ஒரு மனிதனை தண்டிக்கவும் மற்றொரு கடவுள் அம்மனிதரை மேம்படுத்தி நன்மை செய்யவும் முனைந்தால்..... முடிவு....??
ஆக ஒரே அதிகாரம், ஒரே சக்தி, ஒரே இறைவன்//
என் பகுத்தறிவு ஒரு கேள்வி கேட்க்கிறது! ஒரு இறைவன், ஒரு நேரத்தில் எப்படி கோடானகோடி மக்களை கவனித்துக்கொண்டே இருப்பான்!!!??
//மனிதனுக்கு மேலாக சர்வ வல்லமை பொருந்திய ஒரு சக்தி உண்டென்று பகுத்தறிவு சொல்கிறது. //
எந்த பகுத்தறிவு சொல்லுது. எங்களுக்கு பகுத்தறிவு சொல்லித்தந்தவர் கடவுள் இல்லை/அது கட்டுக்கதைன்னு சொல்லித்தந்தார். அப்ப அவர் தப்பா??
//இறைவன் உண்ணாதவனாகவும் நமக்கு உணவளிப்பவனாகவும் வேண்டும்//
//இறைவன் எந்தத் தேவையுமற்றவனாக வேண்டும்.//
//இறைவன் யாரையும் பெறாதவனாகவும், யாராலும் பெறப்படாதவனாகவும் இருக்க வேண்டும். //
//இறைவன் மரணமடையாதவனாக, நித்திய ஜீவனாக இருக்க வேண்டும். ஏனெனில் மரண பயத்தில் அவன் நம்மை மறந்து விடக்கூடாதே.//
//இறைவன் களைப்பற்றவனாக, ஓய்வு தேவையற்றவனாக, உறங்காதவனாக வேண்டும்.//
மொத்தத்தில் உங்கள் சுயநலமே இறையாக இருக்கவேண்டும்??!!! அவனுக்கு ஒன்றும் இருக்கக்கூடாது, அவன் உங்களுக்கு மட்டும் ஏதாவது செய்து கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். டூ மச் சா தெரியலை??
சரி இப்ப இஸ்லாம் உங்க விளக்கம் பார்த்தேன் எனக்கு சில கேள்விகள்??
முதல் மூன்று பாயிண்டுக்கு ப்ரூப் இல்லை விடுங்க பரவாயில்லை. அவை பெரிய விசயம் இல்லை.
//4. வன்முறைக்கும் துவேசத்துக்கும் இங்கே இடமேயில்லை. இஸ்லாத்தில் எவ்வித நிர்பந்தமுமில்லை என்பதும் இதன் அடிப்படைகளில் ஒன்று.//
அப்ப வண்முறையை கையாள்பவர்கள் இஸ்லாமிலிருந்து விலக்கிவைப்பீர்களா?? அப்ப பின் லேடன், தாலிபான்கள், என திவிரவாத்தை கையில் எடுத்தவர்களை என்ன செய்கிறீர்கள்??
//. மனிதரிடையே ஜாதி, இன, மொழி வேறுபாடுகளால் உயர்வு தாழ்வில்லை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற முறையில் அமைக்கப் பட்டுள்ளது. பிறப்பால் மேல் ஜாதி அல்லது கீழ் ஜாதி என்றோ, அரசன், ஆண்டி, படித்தவன், பாமரன் என்றோ உள்ள வேறுபாடுகளையெல்லாம் களைந்து மனிதர்களிலே நல்லவன், தீயவன் என்ற அடிப்படையில் மட்டும் அணுகும் ஒரு வழிமுறை.//
அப்ப ஷியா, சன்னி முஸ்லீமகள் என்று எப்படி வந்தது இரு பிரிவு, ஈராகில் அவர்கள் ஏன் சண்டையிட்டுக்கொள்கிறார்கள்?? அவர்களுக்குள் என்ன பிரச்சனை?? அதுவும் ஒரு ஏற்ற தாள்வாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். நீங்க?? அப்ப இஸ்லாமில்லும் உள்ளது ஏற்றத்தாள்வு, இங்கு ஜாதி, அங்கு பிரிவு?? சரியா??
//6. இது வெறும் சடங்கு சம்பிரதாயங்கள் மட்டுமேயுள்ள மதமல்ல. இது ஒரு அழகான, முழுமையான வாழ்க்கைத் திட்டம். பெண்ணுரிமை பேணி, சரியான அந்தஸ்தை வழங்குகிறது.(பெண்களுக்கும் சொத்தில் உரிமை, விதவை மறுவாழ்வு, ஆண்தான் பெண்ணுக்கு வரதட்சணை வழங்கவேண்டும்.)//
At a given point of time, ஒருவன் ஐந்து பெண்களை கல்யாணம் செய்வது சரியா?? மூன்று முறை தலாக் சொல்லிவிட்டால் திருமணமுறிவு சரியா? அப்போது பெண்ணுக்கு என்ன உரிமை இருக்கிறது!!! பெண்சொல்லவேண்டியதெ இல்லையா?? அவளுடைய கருந்து தேவையற்றது என்று என்று சொல்லுவது பெண்ணுரிமையை பேணி காப்பதா?? ஆண்கள் பெண்வீட்டருக்கு வரதட்சணை கொடுத்தால் ஓ.கே வா? பெண் வீட்டார் கொடுத்தால் தான் தப்பா?? தலாக் சொன்ன ஒரு இஸ்லாமிய பெண்ணும் தன் கணவனும் மனம் திருந்தி ஒன்று சேர வாய்ப்பு இல்லை? அப்படி சேர வேண்டுமானால் இன்னொருவரை திருமணம் செய்து, அவர் தலாக் சொன்னால் தான் இந்த இருவரும் சேர முடியும் இது தான் சுதந்திரமா??
//7. இது மனித குலம் எதிர் நோக்கியுள்ள அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு வழங்கும் நீதித்திட்டம். (பொருளாதாரக் கோட்பாடுகள், சட்ட இயந்திரத்தின் இயக்கம், வட்டியில்லா வாழ்வு, இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுப்பது அவர்களது கடமை என்றும், இருப்பவர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை அரசின் முலம் எடுப்பது இல்லாதவர்களுக்கான உரிமை என்றும் கூறுகிறது.)
8. பொய், களவு, லாட்டரி, மது, சூது, விபச்சாரம், லஞ்ச லாவண்யம், அடக்குமுறை, அடிமைத்தனம், மூட நம்பிக்கைகள் போன்றவற்றை வேரோடு ஒழிக்கும் ஒரு பகுத்தறிவுப்பாதை.
9. இது மனித உரிமைகளை நிலை நிறுத்தும் ஒரு மிகப்பெரிய வழி முறை. அறிவியல், தொழில் நுட்பம் இதற்கு எதிரானதல்ல. மாறாக, இயைந்தது. இஸ்லாம் ஒரு அறிவியல் பூர்வமான அணுகுமுறைக்கான வழிமுறைதான்.//
இது அனைத்து மததிலும் உள்ளதே!!! யாரும் உபயோக்காத சரக்கு. அதை விடுங்க. நம்மில் யார் இங்க பொய் சொல்லாதவங்க?
//10. சமத்துவத்தையும் சகோதரத் துவத்தையும் நிலை நிறுத்தி, மனிதன் மனிதனாக வாழ்ந்து, சாந்தியையும் சமாதானத்தையும் அடைவதற்கு வழி காட்டும் முழுமையான வாழ்க்கை நெறி முறைகளின் தொகுப்புதான் இஸ்லாம்.//
இதில் ஏதாவது ஒன்றையாவது எந்த மதமாவது பின்பற்றுகிறதா? தன் மதத்தவனையே சகோதரனாக நினைக்காத மக்கள் தான் நாம் இன்று அதிகம் பார்க்கிறோம்(எந்த தனி மதத்தைப்பற்றி அல்ல எல்ல மதத்தவரும் இதற்கு விதிவிலக்கல்ல)
கடைசியாக ஒரு கேள்விகள்:
இப்ப ஒருவன் இஸ்லாமில் சேர்கிறான் என்றால் அவரை எந்த பிரிவில் சேர்ப்பீர்கள்? ஷியாவிலா? சன்னியிலா??
இஸ்லாமிலிருந்து ஒருவன் வேறு மதம் தழுவினால் மரண தண்டனை விதிக்கிறார்கள் ஏன்? இது தான் அடக்குமுறை இல்லாத மதமா?
நான் ஒரு மாராடித்தான் நோம்பி என்ற ஒரு இஸ்லாமிய நோம்பு ஊர்வலத்தை பார்க்க நேர்ந்தது, அந்த ஊர்வலத்தில் எல்லாவரும் ஏதோ ஒரு ஆயுதத்தால் தன் உடம்பை காயப்படுத்திக்கொண்டு நட்டந்து சென்றார்கள் இவை என்ன மூட நம்பிக்கைகள் இல்லையா?? தர்காவில் ஏதோ ஊதி ஒரு கூடு தருகிறார்கள் அது என்ன மூட நம்பிக்கைகள் இல்லையா?? அதில் ஏதாவது அறிவியல் பூர்வ காரணம் இருக்கா??
9:35 PM
--------------------------------------------------------------------------------
மரைக்காயர் said...
நல்ல கட்டுரை. நன்றி சுல்தான்.
7:28 AM
--------------------------------------------------------------------------------
சுல்தான் said...
வருகைக்கு நன்றி சிவபாலன். படித்து விட்டும் வாருங்கள்.
மரைக்காயர் நன்றி.
நன்றி வி த பீப்பிள். உங்களுக்கு பதிலோடே வருகிறேன். வீட்டில் நெட் கோளாறு. கொஞ்சம் பொறுங்கள்.
2:38 PM
--------------------------------------------------------------------------------
அரை பிளேடு said...
சுல்தான்ஜி.
ரொம்ப நல்ல கட்டுர..
பாராட்டுக்கள்..
நீங்க சொன்னா மாறி கடவுள்னு ஒருத்தர் கட்டாயம் கீறாரு..
பாக்கறவங்களுக்கு பாக்கற விதத்துல தெரியரவரு அவரு...
அவருக்கு உருவம் கிடயாதுன்னு நீங்க நினைச்சீங்கன்னா உருவம் இல்லாம வந்து அருள் தருவாரு..
நம்பள மாதிரி மனுசபய வடிவத்தில இருப்பாருன்னு நினைச்சீங்கன்னா மனுசப்பய வடிவத்துள வந்து அருள் தருவாரு..
அதுதாம்பா கடவுளு... இப்படிதான் இருப்பாரு.. அப்பிடிதான் இருப்பாருன்னு நாம சொல்றமே... அந்த மாறி இல்லாம... எல்லா மாறியும் யாரால இருக்க முடியுமோ.. அவராலதான் கடவுளா இருக்க முடியும்...
இன்னா ஒண்ணு அவரு நம்பள மாறியே இருப்பாரு.. நாம சாப்பிடற பலகாரத்தையேதான் சாப்புவாருன்னு நினைச்சு கும்புட சொல்ல நம்பளுக்கு அவரு மேல எக்ஸ்ட்ராவா அன்பு வருது...
நீங்க சொல்ற மாதிரி கடவுள பகுத்து அறிஞ்சி எல்லாம் பாக்க கூடாது.. கடவுள்ன்றது ஒரு பீலிங்க்.. ரொம்ப பகுத்து அறிஞ்சிட்டோம்னு வச்சிக்குங்க மனுசன் மாதிரி இல்லாத ஒண்ண அவன், இவன்னோ.. அவர், இவர்னோ ஏன் சொல்லணும்.. அதுன்னுதானே சொல்லணும்னு தோணிடும்...
உருவமாவும் அருவமாவும் உலகமெல்லாம் விரிஞ்சி பரந்து இருக்கிற அன்பு வடிவம்தான் கடவுள்... அன்பே சிவம், அன்பே அல்லா..
அந்த கடவுள் கீறாரே அவரு எனக்குள்ளாற, உங்களுக்குள்ளாற... எல்லாருக்குள்ளாறயும் கீறாரு... இன்னா ஒண்ணு நாமதான் புரிஞ்சிக்க மாட்டங்கறோம்...
நான் எல்லா சாமியயையும் கும்புடற மாறி அல்லாவாவும் அவர கும்டுக்கறன்...
எஞ்சாமி எதாவது ஒரு ரூபத்துலய அரூபத்துலயோ வந்து என்ன காப்பாத்துனா சரி..
எங்கியாவது தப்பா சொல்லி இருந்தன்னா மன்னிச்சிடுங்க.....
நல்ல கட்டுரைய கொடுத்ததுக்காக தாங்ஸ் வச்சிக்கிறேன்...
3:58 PM
--------------------------------------------------------------------------------
சுல்தான் said...
நன்றி அரைபிளேடு. உங்கள் எண்ணத்தை மற்றவர்களை காயப்படுத்தாமல் சொல்லும்போது எதற்கு மன்னிப்பு.
//மனுசன் மாதிரி இல்லாத ஒண்ண அவன், இவன்னோ.. அவர், இவர்னோ ஏன் சொல்லணும்.. அதுன்னுதானே சொல்லணும்னு தோணிடும்...//
தப்பில்லை. அவர், அவள், அவன், அது என்பதையெல்லாம் விஞ்சி இருப்பதுதான் இறைவன். நமக்குத் தெரிந்ததிலே, இருப்பதிலேயே உயர்தினையை எடுத்து ஒருவன் எனக் குறிக்கும் விதத்தில் நாம் பாவிக்கிறோம். என் பார்வையில் அவர், அவள், அவன், அது என்பதையெல்லாம் கடந்தவன்தான் இறைவன்.
5:22 PM
--------------------------------------------------------------------------------
கோவி.கண்ணன் [GK] said...
சுல்தான் ஐயா,
நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ஆனாலும் சில கேள்விகளுக்கு விடை கிடைப்பதே இல்லையே !
1. சர்வ வல்லமை படைத்த இறைவன் தன்னை ஏன் உலக மாந்தர் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஒரே கொள்கையை படைக்கவில்லை ?
2. ஏழைகளாகவே பிறந்து ஏழைகளாகவே இறப்பவர்களை இறைவன் ஏன் படைத்தான் ?
நான் முயற்சி அற்று முடங்கிக் கிடப்பவர்களைப் பற்றிச் சொல்ல்வில்லை. நமது பூமியில் உள்ள ஆப்ரிக்கா கண்டத்தில் அத்தகைய மனிதர்கள் பிறந்து மடிகிறார்கள். அவர்களுக்கு ஏன் இரக்கம் காட்டுவதே இல்லை ?
3. உலக தொடர்பே இல்லாமல் காடுகளில் (அமேசான்) காட்டுவாசிகளாக திரியும் மனிதர்களுக்கென்று இறைவன் என்ன சொல்கிறான்? அவர்கள் எந்த துன்பமும் இன்றி வாழ்வதாக நான் கருதுகிறேன்.
பொதுவாக ஆன்மிகம் பற்றி பேசுபவர்களிடம் கேட்கும் கேள்விகள் இவை. உங்களிடம் மட்டும் தான் கேட்கிறேன் என்று தவறாக எண்ணாதீர்கள்.
5:27 PM
--------------------------------------------------------------------------------
Bun Butter Jam said...
இஸ்லாமப் பத்தி இப்பிடி புட்டுபுட்டு வெச்சிட்டீங்க.மித்தவங்களும் அவிங்கவிங்க மதத்தைப்பத்தி இங்கே புட்டுபுட்டு வெச்சாங்கன்னா சோக்காருக்கும்.
தெகிரியமிண்டா கணவான்களே!
5:54 PM
--------------------------------------------------------------------------------
சுல்தான் said...
Dear GK,
உங்கள் கேள்விகளுக்கு நான் அறிந்த வகையில் கொண்ட விளக்கங்கள் இவை.
//1.சர்வ வல்லமை படைத்த இறைவன் தன்னை ஏன் உலக மாந்தர் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஒரே கொள்கையை படைக்கவில்லை?//
இறைவன் படைத்தது ஒரே கொள்கையைத்தான். வணங்கத் தகுதியானவனாகிய அந்த ஒரே இறையையே வணங்க வேண்டும் என்பதே அது. காலச் சுழற்சியில் அதைப் பின்பற்றுபவர்களாலேயே இப்போதிருக்கும் வண்ணம் வளைத்தொடிக்கப்பட்டது என்பது இஸ்லாமிய நம்பிக்கை.
//2. ஏழைகளாகவே பிறந்து ஏழைகளாகவே இறப்பவர்களை இறைவன் ஏன் படைத்தான்?//
சிலரை ஏழைகளாகவும் சிலரை வசதி படைத்தவர்களாயும் படைத்திருப்பது இரு பேரராரையும் சோதித்தறியத்தான்.
இல்லாதவன் பொறுமையைக்கொண்டும் இறைவணக்கத்தை கொண்டும் திருப்தி யடைந்தால் மறுமையில் கேள்விக் கணக்கின்றி சுவனம் புகுவான்..
வசதி படைத்தவனுக்கு கொடுக்கப்பட்டது, இல்லாதவனுக்கும் கொடுத்து நன்மைகளை அதிகரித்துக் கொள்ளத்தான். செல்வந்தர்கள் மறுமையில் தனக்கு கொடுக்கப்பட்டவற்றுக்கு கணக்கு கொடுக்காமல் அவர்கள் கால்களை நகர்த்த முடியாது.
இந்த உலகில் இவ்வாறெல்லாம் துன்பப்பட்டு மறுமையில் எப்படி வாழ்ந்தால் என்ன? என்று நினைக்கத் தோன்றும்.
இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படையில் இவ்வுலகமே மறுமைக்கான தயாரிப்புக் களம்தான். இவ்வுலகம் குறுகிய நூறாண்டுகள். மறுமையோ நிரந்தரமானது.
இதை உங்கள் மனது ஏற்றுக் கொள்ளாவிட்டால் பரவாயில்லை. குர்ஆனை முழுதும் சுயமாகப் படித்துப் பாருங்கள். இறைவன் நாடினால் புரியலாம்.
//3. உலக தொடர்பே இல்லாமல் காடுகளில் (அமேசான்) காட்டுவாசிகளாக திரியும் மனிதர்களுக்கென்று இறைவன் என்ன சொல்கிறான்? அவர்கள் எந்த துன்பமும் இன்றி வாழ்வதாக நான் கருதுகிறேன்//
எல்லாக் குழந்தைகளும் இயற்கை மதத்திலேயே பிறக்கின்றன. அக்குழந்தைகளுக்கு மதம் கொடுத்தவர்கள் அவர்களின் பெற்றோர்களே என்பது இஸ்லாமிய கோட்பாடு.
அமேசான் காட்டுவாசிகளுக்கும் 'இறைவன் ஒருவன். அவனே வணங்கத் தகுதியானவன்' என்ற உள்ளுணர்வு பிறக்கும்போதே பிறக்கும். இந்த இயற்கை மதத்திலேயே அவர்கள் இருந்து, இறந்தால், அவர்களும் சொர்க்கத்தின் சொந்தங்களே.
//உங்களிடம் மட்டும் தான் கேட்கிறேன் என்று தவறாக எண்ணாதீர்கள்//
இதிலே தவறாக எண்ண என்ன இருக்கிறது? எனக்குத் தெரிந்த மறுமொழிகள் கொடுத்திருக்கிறேன். ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் அவரவர் விருப்பத்திலுள்ளதுதானே..
வி த பீப்பிள். நெட் சரியாகி விட்டது. இதோ பதிலோடு வருகிறேன். கொஞ்சம் பொறுங்கள்.
6:25 PM
--------------------------------------------------------------------------------
சுல்தான் said...
வருகைக்கு நன்றி Bun Butter Jam,
மற்றவர்களுக்கு காயம் ஏற்படுத்தாத வகையில் நம் கருத்தை சொல்வத தவறில்லையென்று நம்புகிறேன்.
நீங்கள் ஏதோ உள்குத்து வச்சு வம்பத் தூண்டலேண்ணு நினைக்கிறேன். Am I right?
6:36 PM
--------------------------------------------------------------------------------
Anonymous said...
எல்லாம் சரி, அதென்ன மனிதனை மனிதன் பிரித்து இனம் கான வசதியாக தாடி, சிலுவை, திருநீறு போன்ற விளங்குகள். ஒருவரோடு ஒருவர் இனைய தடையாக இருப்பத்ற்கு இந்த தோற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம். இதுதான் நீங்கள் கூறும் பகுத்தறிவோ?
-குமார்.
6:44 PM
--------------------------------------------------------------------------------
SK said...
அன்பு நண்பரே!
//மனித வரலாற்றை தலைமுறை தலைமுறையாக ஆய்ந்தால் கடைசியில் ஒரு மனிதனில்தான் முடியும் என்பதில் ஐயமில்லை//
இதுவே கேள்விக்குரியது.
ஏன் ஒரே சமயத்தில் பல இடங்களில் மனிதர்கள் உருவாகியிருக்க முடியாது?
இன்னும் இது போல பல வரிகளைக் குறிப்பிட்டு வாதாடலாம்.
ஆனால், அதுவல்ல என் கருத்து.
நீங்கள் , மற்றும் இங்கே கருத்திட்ட அனைவருமே இறைவன் என்ற ஒன்றைப் பற்றியே சொல்லியிருக்கின்றனர்.
ஆனால், ஆன்மீகம் என்பது இதுவல்ல.
கண்ணுக்குத் தெரியாத, நம்பலாமோ, கூடாதோ என்ற ஒன்றைத் தேடுவது அல்ல ஆன்மீகம்.
ஒரு சில வரையறைகளைத் தன்னுள்ளே கொண்டு, அவற்றை மேலும் வளர்த்துக்கொள்ளும் முயற்சியே இது.
இதனைக் கொண்டால்தான், இறைவனைப் பற்றிய சந்தேகங்கள், கேள்விகளுக்கு விடை தேட முயலாமல், தன்னையே இறையென உணர முடியும்.
ஏழை, பணக்காரன், அமேஜான் காட்டு மனிதர்கள் பற்றிய கேள்வி ஒன்றைப் பார்த்தேன்!:))
அவ்வளவு ஏன்?
ஒரே குடும்பத்தில், ஒரே அப்பன், ஆயிக்குப் பிறந்த குழந்தைகள் அனைவரும் ஒரே மாதிரி வளரவோ, படிக்கவோ, உயரவோ செய்கின்றனரா?
இது ஏன் என சிந்திக்க ஆரம்பித்தால், பல கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம்.
உங்கள் பதிவு, ஒரு இஸ்லாமியர் என்ற முறையில் சஹ இஸ்லாமியர்களைப் பார்த்து எழுப்பிய கேள்விகளாகவே நான் பார்ப்பதால், அவர்கள் தாங்கள் எப்படியோ இம்மதத்தில் பிறந்ததன் காரணத்தை உணர ஆரம்பிக்கச் செய்யும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்து சொல்லி பாராட்டுகிறேன்.
:))
7:18 PM
--------------------------------------------------------------------------------
சுல்தான் said...
நன்றி வி த பீப்பிள்.
//என் பகுத்தறிவு ஒரு கேள்வி கேட்க்கிறது! ஒரு இறைவன், ஒரு நேரத்தில் எப்படி கோடானகோடி மக்களை கவனித்துக்கொண்டே இருப்பான்!!!??//
இறைவனையும் மனிதனாக பார்ப்பதால் இப்படித் தோன்றுகிறது.
'இறைவனுடைய வல்லமையை, ஆற்றலை, மனித சக்திக்குள் முடிக்கக்கூடாது. இஸ்லாமிய அடிப்படையில் அவன் எதையாவது செய்ய நாடினால் 'ஆகு' என்ற ஒரே வார்த்தைக்குள் ஆக்கி விடுபவன்.' பூமியும் வானமும் அவனது ஒரே வார்த்தைக்குள் ஆகும் என்று நம்புபவர்களுக்கு அந்த நம்பிக்கையில் சிரமமிருக்காது.
இதை மூட நம்பிக்கை என்று உங்கள் மனது சொன்னால்.....
இறைவனது வல்லமையை அறிய குர்ஆனை சுயமாக படித்தறிய முயலுங்கள். அவன் நாடினால் உங்களுக்கும் புரியலாம்
//எந்த பகுத்தறிவு சொல்லுது.//
பகுத்தறிவு என்றாலே அய்யா பெரியார் ஞபாகம் வருவது தமிழ் மண் தரும் வாசனை. அடங்கி முதுகு வளைந்து கூனாகிப் போன தமிழனின் கூன் நிமிர்த்தி நேராக நிற்க வழி தந்த வெண்தாடி வேந்தரவர். நான் சொன்னது ஒவ்வொருவருக்கும் உள்ளேயுள்ள பகுத்தறியும் திறனை.
//எங்களுக்கு பகுத்தறிவு சொல்லித்தந்தவர் கடவுள் இல்லைஃஅது கட்டுக்கதைன்னு சொல்லித்தந்தார். அப்ப அவர் தப்பா??//
கடவுள் பெயரால் நடக்கும் மோசடிகளைப் பார்த்து மனம் வெறுத்ததால் வந்து விழுந்த வார்த்தைகள் அவை. என்னைப் பொறுத்தவரை அய்யா பெரியார் கடவுளுக்கு எதிரியல்ல. கடவுளின் பெயரால் நடைபெறும் பித்தலாட்டங்களுக்குத்தான் அவர் எதிரி. இல்லையென்றால் 'இன இழிவு ஒழிய இஸ்லாமே நன் மருந்து' எனச் சொல்வானேன்!
//மொத்தத்தில் உங்கள் சுயநலமே இறையாக இருக்கவேண்டும்??!!! அவனுக்கு ஒன்றும் இருக்கக்கூடாது, அவன் உங்களுக்கு மட்டும் ஏதாவது செய்து கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். டூ மச் சா தெரியலை??//
மீண்டும் சொல்கிறேன். கடவுள் மனிதன் போலவேயிருந்தால் கடவுளெதற்கு?
அவன் அவ்வாறு கொடுத்துக் கொண்டேயிருப்பதால் அவனுக்கு துன்பமோ, சலிப்போ ஏற்படக்கூடாது.
டூ மச்சா தெரியவில்லை. ஏனென்றால் 'புவியிலுள்ளோர், முன் சென்றோர், மனித இனம், ஜின் இனம் ஆகிய அனைவரும் ஒரு சேர ஒன்று கூடி, ஒவ்வொருவரும் எதையாவது கேட்டு, அவையனைத்தையுமே அவன் கொடுத்து விட்டாலும், அவன் கஜானாவிலிருந்து எதுவம் குறைவதில்லை' என்பது இஸ்லாமிய நபி கற்றுத் தந்த அடிப்படைகளில் ஒன்று.
படிக்க சலிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக இத்துடன் நிறுத்திக் கொண்டு மற்றவற்றுக்கும் பிறகு எழுதுகிறேன்.
இவையெல்லாம் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல. உங்களைப் போன்ற கேள்வி இருப்பவர்களும் அறிந்து கொள்ளவும், என் சிந்தனை இவற்றை ஏன் ஏற்றது என்பதற்கான விளக்கமும்தான்.
7:30 PM
--------------------------------------------------------------------------------
சுல்தான் said...
வருகைக்கு நன்றி குமார். என் பதிவிலிருந்து எதையாவது கேளுங்கள். தெரிந்தால் பதில் சொல்கிறேன். நீங்கள் கேட்டவற்றுக்கு தனியாக ஒரு பதிவு இறைவன் நாடினால் வரும். அப்போது விவாதிக்கலாம். மன்னியுங்கள் குமார்
எஸ்கே ஐயா வருக வருக.
வரிகளுக்கிடையில் பேசினால் எனக்கு குழப்புமோ என்னவோ? இருந்தாலும் பதிலளிக்க முயற்சிக்கிறேன்.
//ஏன் ஒரே சமயத்தில் பல இடங்களில் மனிதர்கள் உருவாகியிருக்க முடியாது?//
பகுத்தறிவுப்படி அப்படியும் இருக்கலாம். 'ஒரு மனிதர் - அவர் வழித்தோன்றல்கள்' என்பதில் மனிதர்களுக்கிடையே 'நாமெல்லாம் சகோதரர்கள்' என்ற நினைப்பில் வரும் ஒற்றுமை எனக்கு நன்றாக இருக்கிறதே. அதனால் அது எனக்கு சரியாகப் படுகிறது. அளவிலாக் கருணையுடைய இறைவன் மனிதர்களை அவ்வாறு பலர் வழித்தோன்றல்களாக ஆக்கி உயர்வு தாழ்வு கற்பிக்க ஏதுவாக்கி இருக்க மாட்டான் என்ற நம்பிக்கை ஐயா.
//ஒரு சில வரையறைகளைத் தன்னுள்ளே கொண்டு, அவற்றை மேலும் வளர்த்துக்கொள்ளும் முயற்சி//
சில வரையறைக்குள் இவ்வார்த்தைகள் ஏற்றுக் கொள்ளத் தக்கதே ஐயா.
//கேள்விகளுக்கு விடை தேட முயலாமல்இ தன்னையே இறையென உணர முடியும்.//
மனிதன் என்ன முயன்றாலும் இறையாக முடியாதென்று நான் நம்புகிறேன். மனிதன் முயன்றால் நல்ல மனிதனாக, மனிதரில் புனிதராக - உயரலாம் (என்பதே என் நம்பிக்கை). அவ்வாறு உயர வேண்டுமென்பதுதான் இஸ்லாம் விரும்பும் மனிதம்.
//உங்கள் பதிவு, ஒரு இஸ்லாமியர் என்ற முறையில் சஹ இஸ்லாமியர்களைப் பார்த்து எழுப்பிய கேள்விகளாகவே நான் பார்ப்பதால்//
என் பதிவு சஹ மனிதர்களுக்காக எழுதப்பட்டது ஐயா.
"குர்ஆனை நீங்களும் கருத்தூன்றிப் படித்தால் உங்கள் பார்வையில்... அது சரியாக இருந்தால் எல்லோருக்கும் சொல்லலாம். கைக்குக் கிடைத்த நல்வழியை தவற விட்டவர்கள் ஆக மாட்டோம். தவறென்றால் பத்தோடு பதினொன்றாக இன்னொரு புத்தகம் படித்து முடித்தீர்கள் அவ்வளவுதான்" என்று சொல்லத்தான் எழுதினேன்.
//உங்கள் முயற்சிக்கு வாழ்த்து சொல்லி பாராட்டுகிறேன்.//
உங்கள் வாழ்த்துகளும் பாராட்டுகளும் என்னை மென்மேலும் படிக்கவும் எழுதவும் தூண்டும். மிகவும் நன்றி ஐயா.
8:06 PM
--------------------------------------------------------------------------------
SK said...
இஸ்லாம் என எழுதியபின், அது சஹ மனிதர்களைக் குறித்து எழுதியதாக என்னல் உணர முடியவில்லை.
ஒரு மத ப்ரசாரகமாகவே என்னால் பார்க்க முடிந்தது.
உங்களுக்குத் தெரிந்த இஸ்லாத்தைச் சொல்லி இது மற்ற மதங்களிலும் காண்கிறேன் எனச் சொல்லியிருந்தால் ஒருவேளை நான் இப்படிச் சொல்லியிருக்க மாட்டேனோ என்னவோ?
மதங்களை விட மானுடமே உயர்ந்தது என்பது என் கருத்து.
இதில் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சொன்னதால் நான் அவ்வாறு கூறலாயிற்று.
மன்னிக்கவும்!
8:56 PM
--------------------------------------------------------------------------------
சுல்தான் said...
Dear We the People,
உங்கள் பாக்கி கேள்விகளில் சிலவற்றுக்கு பதில்கள்.
//அப்ப வண்முறையை கையாள்பவர்கள் இஸ்லாமிலிருந்து விலக்கிவைப்பீர்களா?? அப்ப பின் லேடன், தாலிபான்கள், என திவிரவாத்தை கையில் எடுத்தவர்களை என்ன செய்கிறீர்கள்??//
இஸ்லாத்திலிருந்து விலக்கி வைக்க என்றெல்லாம் யாருக்கும் அதிகாரமில்லை நண்பரே. அவரவர் நன்மைகளுக்கேற்ப வெகுமதிகளைத் தரும் இறைவன், அவரவர் பாவங்களுக்கேற்ப தண்டணையும் தருவான் என்பதே உறுதியான இஸ்லாமிய நம்பிக்கை.
//அப்ப ஷியா, சன்னி முஸ்லீமகள் என்று எப்படி வந்தது இரு பிரிவு, ஈராகில் அவர்கள் ஏன் சண்டையிட்டுக்கொள்கிறார்கள்?? அவர்களுக்குள் என்ன பிரச்சனை?? அதுவும் ஒரு ஏற்ற தாள்வாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். நீங்க?? அப்ப இஸ்லாமில்லும் உள்ளது ஏற்றத்தாள்வு, இங்கு ஜாதி, அங்கு பிரிவு?? சரியா//
இல்லை சகோதரரே! இஸ்லாத்தை புரிந்து கொள்வதில் ஏற்பட்ட குளறுபடிதான் ஷியாக்கள் எனும் பிரிவு.
எந்த ஒரு கருத்தையும் புரிந்து கொள்வதில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்.
ஒரு மனிதன் ஒரு முஸ்லீம் பெற்றோருக்கு பிறப்பதால் அவன் முஸ்லீமில்லை. முயற்சி செய்து, தெரிந்து, உண்மையென உணர்ந்து, ஏற்றுக் கொள்பவன்தான் முஸ்லீம். அதனால் குர்ஆனும் ஹதீஸூம் உங்கள் கைகளில் இருக்கிறது. நீங்களே படித்தறிந்து அல்லது இரு சாராரும் சொல்வதை கேட்டறிந்து கொள்ளலாம். தெளிந்த முடிவுக்கு வரலாம்.
எனக்கு நேரமில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. நிலையான மறுவாழ்வின் சுகம் வேண்டுமெனில் இஸ்லாத்தில் முயற்சி அவசியம். Islam is not by birth, but by choice.
அவர்களுக்கும் அதுதான். உங்களது உனக்கு என்னுடையது எனக்கு. மறுமையில் இறைவன் தீர்ப்பளிப்பான்.
//At a given point of time..............//
பெண்கள் சுதந்திரம் பற்றி நீங்கள் கேட்டுள்ள கேள்விகள் தனிப் பதிவு போடுமளவுக்கு பெரியது. தனியான பதில் தருகிறேன்.
//இது அனைத்து மததிலும் உள்ளதே!!! யாரும் உபயோக்காத சரக்கு. அதை விடுங்க. நம்மில் யார் இங்க பொய் சொல்லாதவங்க?//
இருக்கட்டுமே!. இஸ்லாம் இவற்றை வலியுறுத்துகிறது.
அவ்வாறு வாழ்ந்த ஒரு மாமனிதரை அடையாளங்காட்டி இவர் போல் நீயும் வாழ வேண்டும் என்கிறது.
உபயோகிக்காத சரக்கு. ஆனால் உபயோகப்படுத்தவே முடியாத சரக்கல்ல. அதனால் உபயோகப்படுத்த வேண்டிய சரக்கென இஸ்லாம் அடையாளப் படுத்துகிறது.
//இதில் ஏதாவது ஒன்றையாவது எந்த மதமாவது பின்பற்றுகிறதா? மதத்தவனையே சகோதரனாக நினைக்காத மக்கள் தான் நாம் இன்று அதிகம் பார்க்கிறோம்//
குறைந்த பட்சம் பள்ளி வாயில்களில் அன்றாடம் ஐந்து முறை பார்க்கக் கூடியது. இஸ்லாமியத் திருமண உறவுகளில் காணக்கிடைப்பது.
இப்ப ஒருவன் இஸ்லாமில் சேர்கிறான் என்றால் அவரை எந்த பிரிவில் சேர்ப்பீர்கள்? ஷியாவிலா? சன்னியிலா??
(யாராரோ யாராரிடமோ கேட்ட கேள்வியின் பிரதிபலிப்பாக இக்கேள்வி எனக்குத் தோன்றுகிறது. தவறாகவும் இருக்கலாம்.)
இஸ்லாத்தில் எந்தப் பிரிவிலும் யாரும் சேர்க்க வேண்டியதில்லை. ஒருவன் 'வணங்கத்தகுதியான இறைவன் ஒருவனே. முஹம்மது (சாந்தியும் சமாதானமும் அன்னார் மீது பொழிவதாகுக!) அந்த (வணங்கத்தகுதியான) இறைவனின் தூதர்' என்பதை மனதார நம்பி ஏற்று, வாயார மொழிந்தால் அவர் முஸ்லீம். அவர் படித்தறிந்து எந்த பிரிவிலும் ஆகலாம். ஏற்க மாட்டேன் என்று சொல்லும் உரிமையை யாருக்கும் இறைவன் கொடுக்கவில்லை.
அது அவர் மனதும் இறையும் அறிந்த விஷயம்.
//இஸ்லாமிலிருந்து ஒருவன் வேறு மதம் தழுவினால் மரண தண்டனை விதிக்கிறார்கள்//
எங்கெங்கே யார் யாருக்கெல்லாம் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேறியுள்ளது என்ற பட்டியலைத் தந்தால், அவர்களிடமே கேட்டுச் சொல்கிறேன். (இறைவன் நாடினால்)
//நான் ஒரு மாராடித்தான் நோம்பி என்ற ஒரு இஸ்லாமிய நோம்பு ஊர்வலத்தை பார்க்க நேர்ந்ததுஇ அந்த ஊர்வலத்தில் எல்லாவரும் ஏதோ ஒரு ஆயுதத்தால் தன் உடம்பை காயப்படுத்திக்கொண்டு நட்டந்து சென்றார்கள் இவை என்ன மூட நம்பிக்கைகள் இல்லையா?? தர்காவில் ஏதோ ஊதி ஒரு கூடு தருகிறார்கள் அது என்ன மூட நம்பிக்கைகள் இல்லையா?? அதில் ஏதாவது அறிவியல் பூர்வ காரணம் இருக்கா??//
நீங்கள் சொல்லியுள்ள இரண்டுமே மூட நம்பிக்கைகள்தான். இஸ்லாத்துக்கும் இவற்றுக்கும் கடுகளவேனும் தொடர்பில்லை. முஸ்லீம் பெயர்தாங்கிகள் அறியாமையில் செய்யும் பகுத்தறிவற்ற தவறுகள் இவை தோழரே. உங்களோடு சேர்ந்து, இம்மூட நம்பிக்கைகளை எதிர்த்து, நானும் என் வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறேன்.
9:14 PM
--------------------------------------------------------------------------------
சுல்தான் said...
//மதங்களை விட மானுடமே உயர்ந்தது என்பது என் கருத்து.//
தங்கள் கருத்து உயர்வானது ஐயா.
தங்கள் மேல் நான் கொண்டிருக்கும் மரியாதைக்கும் அன்புக்கும் தங்களிடமிருந்த மன்னிப்பு என்ற வார்த்தை மிகப் பெரியது. மானுடத்தை உய்விப்பதில் எது சிறந்தது என சொல்ல வந்து ஏதும் அதிகப் பிரசங்கியாக நான் எழுதியிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் ஐயா.
9:36 PM
--------------------------------------------------------------------------------
ஆரோக்கியம் kettavan said...
வீ த பீப்பிள் என்பவர் இந்து மதத்தில் சேர்பவர்களை அய்ய்ராக சேர்த்துக் கொள்வாராமே. (முதலில் இவர் அய்யர் இல்லை என்றால் அய்யராகவோ அய்யங்காராகவோ முயற்சி செய்யட்டும்)
அதேபோல இந்து மதத்தில் சேர்ப்பதும் விலக்குவதும் அவர் நம்பும் சில பீடையாதிபதிகளிடம் உள்ளது போல் தான் நம்புகிறார் போல.
ஏதோ பெண்ணுரிமை வாதி போல பில்டப் கொடுக்கும் இவர் வரதட்சணைக்கு வக்காலத்து வாங்குவதில் முகமூடியைக் கிழித்துக் கொண்டார்.
திரு. சுல்தான் அய்யா,
திசை திருப்பும் நோக்கில் எழுதப்பட்டவை அல்ல. நன்றி.
9:50 PM
--------------------------------------------------------------------------------
SK said...
//மானுடத்தை உய்விப்பதில் எது சிறந்தது என சொல்ல வந்து //
சரியன இலக்கைத் தொட்டிருக்கிறீர்கள் நண்பரே!
எது சிறந்தது எனச் சொல்லும் போதே மற்றதெல்லாம் தாழ்ந்தது எனும் பொருள் தானாககவே வருவதாலேயே நான் இதை ஏற்றுக்கொள்வதில் சிறிது தயக்கம் காட்டினேன்.
"அதிகப்பிரசங்கியாக அல்ல", 'எனக்குத் தெரிந்த என்றொரு வழியை' எனச் சொல்லியிருந்தால் உங்கள் கருத்து இன்னும் உயர்வு பெற்றிருக்கும் என்பது என் எண்ணம்.
அப்போது இது போல மற்ற மதங்களும் சொல்லியிருப்பதை ஒப்புவமை காட்டி, மதங்களில் தவறல்ல, மானுடம் உணர்வதிலும், புரிவதிலும் தான் தவறு என்பதை அனைவருக்கும் விளக்கியிருக்க முடியும்.
நல்ல ஒரு கருத்தினைப் பகிர வைத்தமைக்கு நன்றி.
10:02 PM
--------------------------------------------------------------------------------
வஹ்ஹாபி said...
விவாக ரத்து (தலாக்) மற்றும் பலதார மணம் குறித்த பதிவுகளைக் கீழ்க்காணும் பதிவர்கள் பதிந்துள்ளனர்:
http://abumuhai.blogspot.com/2005/05/1.html
http://suttuviral.blogspot.com/2005/11/blog-post.html
http://irainesan.blogspot.com/2006/03/1.html
10:26 PM
--------------------------------------------------------------------------------
சுல்தான் said...
மீண்டும் வருகைக்கு நன்றி எஸ்கே ஐயா.
'மானுடத்தை உய்விப்பதில் எது சிறந்தது என சொல்ல வந்து'
என்பதை
'மானுடத்தை உய்விக்க வந்த மதத்தின் வேதத்தை படிக்கச் சொல்ல வந்து, எனக்குத் தெரிந்ததொரு வழியை'
என்று திருத்தி வாசியுங்கள். அதுவே என் கருத்தும். தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ஐயா.
வருகைக்கு நன்றி ஆரோக்கியம் கெட்டவன்.
தனிப்பட்ட எவரையும் தாக்குதல் என் நோக்கமல்ல.
என்னைத் தாக்கினால் திருப்பித் தாக்குவேனா மாட்டேனா என்பது வேறு விஷயம்.
வருகைக்கும் சுட்டிகளுக்கும் நன்றி வஹ்ஹாபி.
1:31 PM
--------------------------------------------------------------------------------
செந்தில் குமரன் said...
எனக்கு இதில் சில பிரச்சனைகள் தான் உங்க பகுத்தறிவில எல்லா ஆண்களும் ஒரே ஆண் பெண்ணிடம் இருந்து தான் வந்திருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்.
ஆனால் ஆராய்ச்சி அறிவின் மூலமாக Evolution சொல்வதை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்கிறீர்கள். அது கூட சரி
வாழ்க்கை நெறி என்பது சரி. அது காலத்துக்கு தகுந்த மாதிரி மாறுவது என்பதை உணர மாட்டேன் என்கிறீர்கள். அது கூட சரி
ஆனால் இறைவன் அருளியது என்பதை கண்மூடித்தனமாக நம்புகிறீர்கள் பகுத்தறிவின் பெயரை சொல்லி அதுதான் உதைக்கிறது.
2:14 PM
--------------------------------------------------------------------------------
சுல்தான் said...
வருகைக்கு நன்றி செந்தில் குமரன்.
'Survival of Fittest' என்பது 'Jungle theory' என நான் ஏற்கிறேன் நண்பரே. ஏனெனில் மனிதன் ஆறறிவு படைத்தவன், உயர்திணையாக வாழப்பிறந்தவன் என நம்புபவன்.
//வாழ்க்கை நெறி என்பது சரி. அது காலத்துக்கு தகுந்த மாதிரி மாறுவது//
எப்போது கடவுளை, முக்காலமும் உணர்ந்தவனாக நம்ப முடிகிறதோ அப்போதோ, அவன் உலகம் உள்ளவரை எக்காலத்துக்கும் பொருந்தும் புத்தகம் தர முடியும் என்றும் நம்ப முடிகிறது.
யாருக்கு நம்ப முடியவில்லையோ அவர்களது கடவுள் கொள்கையில் ஏதோ கோளாறு அல்லது அவர்கள் உண்மையில் நம்பாமல் வாயளவில் சொல்பவர்களாக நான் நினைக்கிறேன்.
//இறைவன் அருளியது என்பதை கண்மூடித்தனமாக நம்புகிறீர்கள் பகுத்தறிவின் பெயரை சொல்லி//
அதற்குத்தான் உங்களையும் அந்த புத்தகத்தை சொந்தமாக கருத்தூன்றிப் படிக்கக் கேட்டுக் கொள்கிறேன் செந்தில் குமரன். அவ்வாறு படித்த பின் அது கண்மூடித்தனமானது என உங்களுக்கு தோன்றினால் உங்கள் கருத்தை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இறைவன் வேறு விதமாக நாடியிருந்தாலும் இருக்கலாம்.
2:57 PM
--------------------------------------------------------------------------------
Anonymous said...
//எல்லாம் சரி, அதென்ன மனிதனை மனிதன் பிரித்து இனம் கான வசதியாக தாடி, சிலுவை, திருநீறு போன்ற விளங்குகள். ஒருவரோடு ஒருவர் இனைய தடையாக இருப்பத்ற்கு இந்த தோற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம். இதுதான் நீங்கள் கூறும் பகுத்தறிவோ?//
//வருகைக்கு நன்றி குமார். என் பதிவிலிருந்து எதையாவது கேளுங்கள். தெரிந்தால் பதில் சொல்கிறேன். நீங்கள் கேட்டவற்றுக்கு தனியாக ஒரு பதிவு இறைவன் நாடினால் வரும். அப்போது விவாதிக்கலாம். மன்னியுங்கள் குமார்.//
நீங்கள் வைத்துள்ள தாடி, நீங்கள் முஸ்லீம் என்று மற்றவர்களிடம் அடையாளம் காட்டுவதற்காகவா? இல்லை மற்றவர்களிடம் இருந்து பிரித்துக்காட்டுவதற்காகவா?
-குமார்
3:20 PM
--------------------------------------------------------------------------------
சுல்தான் said...
நன்றி குமார். பதிவைப் பத்தி கேட்க ஏதுமில்லையா நண்பரே.
இஸ்லாத்தில் தாடி வைக்க வேண்டுமென்று இறை கட்டளை உள்ளதால், இறைவனிடம் நன்மைகளை நாடி தாடி வைத்துள்ளேன். மற்றவர்களிடம் அடையாளம் காட்டுவதற்கோ பிரித்துக்காட்டுவதற்கோ இல்லை.
3:36 PM
--------------------------------------------------------------------------------
We The People said...
//வீ த பீப்பிள் என்பவர் இந்து மதத்தில் சேர்பவர்களை அய்ய்ராக சேர்த்துக் கொள்வாராமே. (முதலில் இவர் அய்யர் இல்லை என்றால் அய்யராகவோ அய்யங்காராகவோ முயற்சி செய்யட்டும்)
அதேபோல இந்து மதத்தில் சேர்ப்பதும் விலக்குவதும் அவர் நம்பும் சில பீடையாதிபதிகளிடம் உள்ளது போல் தான் நம்புகிறார் போல.
ஏதோ பெண்ணுரிமை வாதி போல பில்டப் கொடுக்கும் இவர் வரதட்சணைக்கு வக்காலத்து வாங்குவதில் முகமூடியைக் கிழித்துக் கொண்டார்.//
இது போன்ற பின்னூட்டங்களை போட்டு என்னை எந்த முத்திரை வேண்டுமானாலும் குத்தலாம்!! I dont care about it!
எங்க மத்தில சாதி பிரிவு இருக்கு, ஏற்றத்தாழ்வு இருக்கு, எல்லா குப்பையும் இருக்கு, எங்க மதத்தில் இல்லாதது உங்க மதத்தில் இருக்குன்னு சொன்ன நீங்க, உங்க மதத்திலும் அது தான் நடக்குதுன்னு நான் அறிந்தவைகளை சொன்னா!!! உடனே என்னை முத்திரை குத்த துவங்கிவிட்டீர்கள், விடுங்க, இனி நான் எதையும் கேட்கவில்லை. உங்க இஷ்டத்துக்கு எதை வேண்டுமானாலும் எழுதுங்க. நான் எப்ப வரதட்டசனை குடுக்கறது சரி என்று?? நான் சொன்னது ரெண்டுமே தப்புன்னு தான்!
//முதலில் இவர் அய்யர் இல்லை என்றால் அய்யராகவோ அய்யங்காராகவோ முயற்சி செய்யட்டும்//
நான் ஐயர் ஆயிரு என்ன செய்யப்போறேன்!! என்ன யூஸ்!! நான் மனுஷனா தான் இருக்க ஆசைப்படறேன். எனக்கு ஜாதி தேவையில்லை. நான் அதை பார்ப்பதும் இல்லை...
உங்களுக்கு இஷ்டம் இல்லை என்றால் என் கேள்விகளையும் எடுத்துவிடுங்க. I dont mind too. நான் இனி இந்த பதிவில் பின்னூட்டமிட மாட்டேன்.
நன்றி :(((((
4:47 PM
--------------------------------------------------------------------------------
சுல்தான் said...
அன்பின் வி த பீப்பிள்
உங்களின் ஒரு கேள்வி பதிலளிக்கப்படாமல் இருக்கிறது.
//ஒருவன் ஐந்து பெண்களை கல்யாணம் செய்வது சரியா?? மூன்று முறை தலாக் சொல்லிவிட்டால் திருமணமுறிவு சரியா? அப்போது பெண்ணுக்கு என்ன உரிமை இருக்கிறது!!! பெண்சொல்லவேண்டியதெ இல்லையா?? அவளுடைய கருந்து தேவையற்றது என்று என்று சொல்லுவது பெண்ணுரிமையை பேணி காப்பதா??//
இஸ்லாத்தில் திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடக்கும் ஒப்பந்தம். கற்பை பாதுகாத்துக் கொள்ளவும், சமூக அந்தஸ்து, ஆன்ம சுத்தி, கொள்கை உறுதி, பண்பு, அருள், கருணை. அமைதி பெற வேண்டி செய்யப்படுவதாகும். இறைவனது சட்டங்களுக்கு கட்டுப்பட்டு, இறையச்சத்தோடு இவ்வொப்பந்தம் செய்யப்பட வேண்டும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை மனைவியராக வைத்துக் கொள்ளும் வழக்கத்தை இஸ்லாம்தான் அறிமுகப்படுத்தியது என்பது தவறான வாதமாகும். ஒரு பெண்ணை மனைவி அந்தஸ்தில் வைத்துக் கொண்டு பல பெண்களோடு உறவு வைத்துக் கொள்ளும் பழக்கம் இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது. பற் பல கட்டுப்பாடுகளை விதித்து அதற்கு நான்கு என்ற வரம்பை இஸ்லாம் நிர்ணயித்தது.
ஒரு பெண்ணைப் போலவே மற்றவர்களையும் போற்ற வேண்டும் என்பது அடிப்படை. உடல் வளமும் அதை எல்லா மனைவியருக்கும் சரியாகப் பகிர்ந்தளிப்பதும் முக்கியம். இதெல்லாம் எல்லோருக்கும் சாத்தியப்படுவதில்லை. சின்ன வீட்டை விட இதில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு உண்டு.
இதனால்தான் முஸ்லீம்களில் அதிகமானோர் அனுமதியிருந்தும் ஒன்றுக்கு மேல் மனைவியோ (அல்லது சின்ன வீடோ) வைத்துக் கொள்வதில்லை.
குறைந்தது,
விதி வசத்தால் சறுக்கிய பெண்கள், மானத்தோடு வாழ விரும்பியும், வாழ்விழந்து வீணாவதை விட, அவர்களை இரண்டாந்தாரமாக மணமுடித்துக் கொடுப்பது சிறந்துதானே!
கைம்பெண்கள் வாழ்விழந்து விடுவதை விட, இரண்டாவது திருமணத்திலாவது ஒருவர் ஏற்றுக் கொள்வதால், அந்தப் பெண்ணுக்கும் அவர் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு உண்டல்லவா! (கைம்பெண்களை முதல் அவர் குழந்தைகளுடன் முதல் திருமணம்தான் செய்ய வேண்டும் என்பதெல்லாம் தற்போதைய சூழலில் இயலும் என்று நம்ப முடியாது.)
இதற்காவது தேவையென்றாலும் ஒன்றுக்கு மேல் அனுமதி அவசியந்தானே!
ஐந்து பெண்கள் என்பது எல்லாம் ஓவர். இப்படியெல்லாம் இந்தியாவில் யாரும் இருப்பதாக தெரியவில்லை.
மன்னர்களைப் போல், மனைவி ஒன்றுடன் அந்தப்புரத்தில் ஆயிரம் பெண்களிடம் உறவு வைத்துக் கொள்வதை விட, நான்கு பெண்களை கண்ணியமாக மணமுடித்து உரிய அந்தஸ்தை வழங்குவது சிறந்ததாக எனக்குத் தெரிகிறது.
இஸ்லாத்தில் தலாக் விடும் உரிமை ஆண்களுக்கு இருப்பது போல் பெண்களுக்கும் இருக்கிறது. இஸ்லாமிய சட்ட திட்டங்கள் தெளிவாக தமிழிலுள்ளதால் இப்போதெல்லாம் குறைந்தது தமிழக முஸ்லீம்கள் பெண்களுக்குள்ள இவ்வுரிமையை பரவலாக அறிந்துள்ளனர்.
தலாக் விடும் வழிமுறையை கூறுகிறேன். இதை விட சிறந்த வழியை (இருந்தால்) நீங்கள் தெரிவியுங்கள்.
1. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மன முறிவு ஏற்பட்டு அது விவாகரத்து என்ற ஆழம் போகும் அபாயத்தில், முதலில் இருவரும் மனம் விட்டு பேசுங்கள். இதில் சரியாகி விடும்.
2. அதிலும் குறையவில்லையா? அடுத்தது படுக்கையை பிரியுங்கள். இந்தத் தேவை பூர்த்தியாகாத போது, மனம், விட்டுக் கொடுக்கச் சொல்லும்.
3. அப்போதும் சரியாகவில்லையா? ஆண் வீட்டாரிலிருந்து இருவருக்கும் நன்மையை நாடுகிற ஒருவரையும், அதே போல் பெண் வீட்டாரிலிருந்து ஒருவரையும் தேர்ந்தெடுத்து அவர்களிடம் நடுவராக இருந்து பேசி அவர்கள் மனக்குறையைத் தீர்த்து வாழ வையுங்கள்.
இப்போதும் சரியாக வில்லையெனில் அது ஒட்டுவது கடினம். இருவரும் அன்போடு இயைந்து வாழத்தான் இல்லறம். மனக்கசப்பும், வெறுப்பும் உள்ள இல்லறத்தில் நல்லறம் தழைக்காது. அது விபரீதங்களைத்தான் ஏற்படுத்தும்.
4. இப்போதுதான் முதல் தலாக் விடுதல். இதன் அளவு மூன்று மாதங்கள்.
5. மூன்று மாத பிரிவு மனங்களிலே மாற்றம் விளைவித்து, மீண்டும் இருவரும் இணைந்து வாழ நினைத்தால், மணமுறிவு ஏற்படாது. அவர்கள் வாழ்க்கையைத் தொடரலாம்.
6. இம்மூன்று மாதங்களுக்குள் இவர்கள் மீண்டும் இணைந்து வாழ விருப்பமில்லையெனில் மணமுறிவு தானாக ஏற்பட்டு விடும்.
மூன்று மாதங்களுக்குள் மனமொத்து மீண்டும் இணைந்து வாழும் இவர்கள் வாழ்வில் இரண்டாம் முறையும் பிணக்கு ஏற்பட்டால் மீண்டும் மேலே சொல்லிய 1, 2, 3, இணக்க முறைகளைக் கையாள வேண்டும்.
அப்போதும் சரியாக வில்லையெனில் இரண்டாவது தலாக்.
அப்புறம் மேற்சொன்ன ஐந்து ஆறாவது பாயிண்ட்.
மூன்று மாதங்களுக்குள் இரண்டாம் தடவையாக மனமொத்து மீண்டும் இணைந்து வாழும் இவர்கள் வாழ்வில் மூன்றாம் முறையும் பிணக்கு ஏற்பட்டால் மீண்டும் மேலே சொல்லிய 1, 2, 3, இணக்க முறைகளைக் கையாள வேண்டும்.
அப்போதும் இயலவில்லையெனில் இது விளையாட்டல்ல. இது ஒவ்வா திருமணம். மூன்றாவது தலாக் சொல்லி நிரந்தரமாக பிரிய வேண்டியதுதான். இனி இவர்கள் சேர்ந்து வாழ முடியாது.
இனியும் சேர்நது வாழ வாழ்க்கை ஒன்றும் விளையாட்டல்ல. இனி அவர்கள் வேறு திருமணம் செய்து அதிலும் அவர்களுக்கு பிணக்கு ஏற்பட்டு மேற்சொன்ன இதே முறைப்படி தலாக் விடப்பட்டு பின்னர் முதல் தம்பதிகள் சேர்ந்து வாழ முடியுமா. சாத்தியமற்றது. அசாதாரண சூழலென்றால் அனுமதியுள்ளது. அவ்வளவுதான்.
பெண்கள் திருமண பந்தத்தை மிக விரைவில் பிரிக்க விரும்ப மாட்டார்கள். ஒரு முறைக்கு பலமுறை யோசித்துதான் முடிவெடுப்பர். (அவளுடைய கணவன் ஆண்மையற்றவனாக, நிரந்தர நோயுள்ளவனாக இருந்தால் வேறு வழியில்லாமல் போகும்.)
அப்போது அவர்களுக்கு திருமண பந்தம் ஏற்படுத்திய சங்கத்தில் மஹல்லாவில் (இடத்தில்) சென்று முறையிட்டால், ஏன் எதற்கு என்ற கேள்வியேதுமில்லாமல் மணவிலக்கு கொடுத்து விட்டார் என்று முடிவாகி விடும்.
இது அறிவுக்குப் பொருந்துகிறதா? பெண்களுக்கு கண்ணியம் தருகிறதா? இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
மேலதிக விபரங்களுக்கு வஹ்ஹாபி கொடுத்துள்ள சுட்டிகளையும் பார்வையிடுங்கள.
மிகுதிக்கு மீண்டும் வருகிறேன்
6:00 PM
--------------------------------------------------------------------------------
சுல்தான் said...
லொடுக்கு said....
சுல்தான் பாய் கலக்குறீங்க!
லொடுக்கு!
உங்கள் கமெண்ட் எப்படியோ தவறி விட்டது.
என் மனதிலுள்ளதை தெளிவாகச் சொல்வதாக நினைத்தேன்.
ரொம்ப கலங்கலாகத் தெரியுதா நண்பரே!
பகுத்தறிவு தீர்ப்பளிக்கட்டும்
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
அருமையான பதிவு தொடர வாழ்த்துக்கள்
நன்றி பொதக்குடியான். இது ஏற்கனவே 'சுல்தான்' என்ற எனது ப்ளாக்கில் பதியப்பட்டதுதான். இஸ்லாம் சம்பந்தப்பட்ட எனது பதிவுகளை மட்டும் தனியாக பிரித்து புதுப்பெயரில் ப்ளாக்கி இருக்கிறேன் அவ்வளவே.
சுல்தான்,
சில கேள்விகள்:
(1)
வன்முறைக்கும் துவேசத்துக்கும் இங்கே இடமேயில்லை. இது உங்கள் கருத்து.
எனது கேள்வி:
//ஹ்ல்ரத் அலீ (ரலி): "உலகினில் ஏற்படுகின்ற குழப்பங்களுக்குத் தீர்வு காண அல்லாஹ்வின் வேதந்தான் சிறந்த வழி. ...(தன் அறிவைக்கொண்டு) பெருமையடிக்கிறவன் இதனை (அமல் படுத்தாமல்) விட்டு விட்டால், அல்லாஹ் அவனைத் துண்டு துண்டாக ஆக்கிவிடுவான்.
உங்களது வார்த்தைகளுக்கும், இந்த மேற்கோளுக்கும் உள்ள வித்தியாசம் ஏன்?
(2)//அது அல்லாத (வேறு கிரந்தத்)தில் நேர்வழியைத் தேடுபவரை வழிதவறச் செய்து விடுவான்." ))
இஸ்லாத்தில் எவ்வித நிர்பந்தமுமில்லை என்பதும் இதன் அடிப்படைகளில் ஒன்று.
(3)//மனிதனுக்கு மேலாக சர்வ வல்லமை பொருந்திய ஒரு சக்தி உண்டென்று பகுத்தறிவு சொல்கிறது//
இந்தக் கூற்று எனக்குத் தவறாகத்தெரிகிறதே. பொதுவாக பகுத்தறிவு சொல்கின்றது என்று எதை ஒன்றையும் குறிப்பிடுவது தவறாக ஆகிவிடும் என்று நினைக்கிறேன். ஆளாளுக்கு மாறுபடக்கூடிய விஷயமாக பார்க்கிறேன்.
(4)//அவன் படைத்த மனிதர்களாகிய நமக்குள்ளேயே பிறப்பாலோ, செல்வத்தாலோ அல்லது தொழிலாலோ உயர்வும் தாழ்வும் கற்பிக்காதவனாக இறைவன் வேண்டும்.//
இக்கூற்றும் சரியாக எனக்குத் தோன்றவில்லை. பார்க்குமிடமெல்லாம் வேற்றுமைகள் நிறைந்த உலகமாகத்தானே இருக்கிறது. படைப்பினில் எல்லோரும் ஒரே மாதிரியாகவா இருக்கிறோம்? இல்லையே!
(5)//பூமியும் வானமும் அவனது ஒரே வார்த்தைக்குள் ஆகும்//
பின் எதற்கு 6 நாட்கள் படைப்பிற்கு - அதுவும் ஒவ்வொன்றாய்? பின் கடவுள் ரெஸ்ட் எடுத்ததாகவும் உள்ளதே!
(6)(அ)//தாடி வைக்க வேண்டுமென்று இறை கட்டளை உள்ளதால்...//
இதைக் கூட கட்டளையாகக் கடவுள் கொடுப்பாரா?
6.(ஆ)தாடி இல்லாதவர்கள் முழு முஸ்லீம்கள் இல்லையா?
என் கருத்துக்கள்
//
இந்து மதத்தில் சேர்பவர்களை அய்ய்ராக சேர்த்துக் கொள்வாராமே.
//
அய்யர் என்பதும் அய்யங்கார் என்பதும் இந்து மதத்தோடு தொடர்புடையதல்ல. ஒருவருடைய குணங்களைக் கொண்டு அவர் அய்யராகவும் அய்யங்காராகவும் கருதப்படுகிறார். என் பார்வையில் அப்துல் கலாம் அவர்கள் அய்யர் / அய்யங்காராகவே தெரிகிறார். ஆங்கிலத்தில் sir எனக் கூறுவது போலத்தான் இதுவும்.
இறை என்பது என்ன என்பதற்கு என் பகுத்தறிவு சொல்வது இறை எல்லாமுமாயும் ஏதுமில்லாததுமாயும் உள்ள ஒன்று. இறையை ஆண் என்றோ பெண் என்றோ பிரித்துக்கூற இயலாது.
இறை வேதம் என்று யார் சொன்னாலும் அஃது அக்காலத்திய நம்பிக்கைகளின் தொகுப்பாகவே இருக்கும். ஆக்குவது மட்டும் இறையல்ல அழிப்பதும் இறை தான்.
இறைவனை அன்பின் வடிவாகவும் தமக்கு நன்மை செய்யும் ஒன்றாகவும் பார்ப்பது மனிதனின் சுயநலத்தால் தான்.
இயற்கையும் இறையும் ஒன்றே. இதை விளக்கும் அளவு நாம் இன்னும் முழுமையடையவில்லை. இயற்கை ஒன்றுமில்லாததாகவும் அனைத்துமாகவும் உள்ளது என்று அறிவியல் கூறும். அதன் இன்னொரு பேர் தான் இறை.
//
வானாகி மண்ணாகி வளிஆகி ஒளிஆகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே
-மாணிக்க வாசகர்.
//
தங்கள் வருகைக்கு நன்றி தருமி ஐயா.
தங்களுடைய கேள்விகள் மிகுந்த விளக்கத்துடன் பதிலளிக்கப்பட வேண்டியவை. குறிப்பாக மூன்றாவதும் முதல் கேள்வியும். கொஞ்சம் நேரம் எடுத்து, பொறுமையாகவும், விளக்கமாகவும் (இப்பதிவே நீண்டதாக இருப்பதால், இயன்றால் தனிப்பதிவாக) பதிலளிக்கிறேன் ஐயா.
வருகைக்கு நன்றி ஃப்ளோரைபுயல்.
(உங்க பேரே கொஞ்சம் வித்தியாசமாக தெரிகிறதே. ஏதாவது காரணம் இருக்கோ?)
அந்த கருத்து என் கருத்தில்லை நண்பரே. அது 'ஆரோக்கியம் கெட்டவன்' என்பவரின் மறுமொழி.
முதலில் தனி மனித விமர்சனங்களை நான் தவிர்க்கவே விரும்புகிறேன். ஒரு விஷயத்தில் எதிர்கருத்து இருந்தால் மற்றொரு விஷயத்தில் அவர் கேள்வி கேட்கக்கூடாதென்பதெல்லாம் இல்லை.
மற்றபடி உங்கள் எண்ணங்களை தெரிவித்தமைக்கு நன்றி.
சுல்தான்,
//இயன்றால் தனிப்பதிவாக) பதிலளிக்கிறேன்//
நன்றி.
ஏற்கெனவே கேட்ட அந்தக் கேள்வியோடு தொடர்புள்ளதும், என் பழைய பதிவில் நான் வைத்த பல கேள்விகளில் ஒன்றுமான இன்னொரு கேள்வியையும் இதோடு சேர்த்து விடுகிறேன். உங்களுக்கு ஆட்சேபனை இருக்காது என்று நம்புகிறேன்.
அந்தக் கேள்வி:
"இஸ்லாத்தை ஏற்று அம்மார்க்கத்தை சரியாகப் பின்பற்றியவர்களுக்கு பரிசாக சொர்க்கமும், இஸ்லாத்தை நிராகரித்தவர்களுக்கு தண்டனையாக நரகமும் வழங்கப்படும் என்று எவ்வித ஒளிவு, மறைவு இல்லாமல், வெளிப்படையாக இஸ்லாம் கூறுகிறது."
"You are either with us or with them". 9/11 -க்குப் பிறகு ஜார்ஜ் புஷ் சொன்ன இந்த வாக்கியத்தின் பொருளை நான் விளக்க வேண்டியதில்லை. மதத்தின் பெயரால் ஒசாமா செய்ததால் அந்த மதத்தையும், மதத்தைச் சார்ந்தவர்களையும், விரோதிகளாக அவர் பார்த்தார்; அதே போல்தான் எல்லோரும் பார்க்க வேண்டும் என்றும் எதிர்பார்த்தார். அவரின் இந்தக் கூற்றுக்கு உலகத்தின் பல நாட்டவரும், பல நாட்டுத் தலைவர்களும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அவரைப் பொருத்தவரை அவருக்குச் சரியானதாகத் தோன்றும் ஒன்று, உலகத்தில் எல்லோருக்கும் அதே போல்தான் தோன்ற வேண்டுமென அவர் எதிர்பார்த்ததை உலகம் ஒப்புக் கொள்ளவில்லை. இல்லையா?அதாவது, நீ அந்தப் பக்கமா, இந்தப் பக்கமா என்பதை வைத்துதான் உன் மறு வாழ்க்கையும், அதற்குரிய பரிசு / தண்டனையும் தீர்மானிக்கப் படும்.
இந்த புஷ்ஷின் கருத்திற்கும், மேலே சொல்லியுள்ள இஸ்லாமியக் கருத்திற்கும் - ஒன்று மனிதன் கூறியது; இன்னொன்று கடவுளால் கூறப்பட்டதாக நம்பிக்கையாளர்களால் கருதப்படுவது என்பதைத் தவிர. இரண்டுமே கருத்துக்கள் என்ற வரையில் ஒன்றுதானே? ஆனால் ஒன்றை தவறென்று கூறி, இன்னொன்றை எப்படி புனித வார்த்தையாகக் கொள்ளுவது?
சுல்தான்,
துணைக் கேள்வி ஒன்றும் அனுப்பியிருந்தேனே .. என்னாயிற்று? மீண்டும் அதை அனுப்பவா?
தருமி ஐயா. வீடு மாற்றிக் கொண்டு சிறிது பணிகளில் இருக்கிறேன். எனவே தங்கள் மறுமொழிகளுக்கான விளக்கம் மிக விரைவில் (இன்னும் சில நாட்களுக்குள்) அளிக்கிறேன்.
சுல்தான் ஐயா,
எப்படி விவாகரத்து செய்ய முடியும்னு நீங்க நீண்ட விளக்கம் கொடுக்குறீங்க .இங்கே பாருங்க .சும்மா SMS -லேயே விவாகரத்து பண்ணிடலாமாம்
http://www.newindpress.com/NewsItems.asp?ID=IEW20070301140044&Title=World&Topic=0&
ஒண்ணுமே புரியல்ல!
வருகைக்கு நன்றி ஜோ.
தலாக் விடுதலைப் பற்றிய என்னுடைய நீண்ட விளக்கத்தில் 4வது பாயிண்ட்
//இப்போதுதான் முதல் தலாக் விடுதல். இதன் அளவு மூன்று மாதங்கள்//
இந்த தலாக் விடுவதை வாயால் சொல்லித்தான் ஆக வேண்டுமென்பது இல்லை. எழுதியும் கொடுக்கலாம்.
அதை இப்போது அறிவியல் முன்னேற்றத்தின் படி SMSல் கொடுக்கலாமாம் அதை சட்டம் ஏற்றுக் கொள்ளுமாம். இதுதான் உங்கள் சுட்டியில் சொல்லப்படும் செய்தி.
இப்போது இது தொடர்பான குழப்பம் நீங்கி விட்டதென நம்புகிறேன் நண்பரே.
இன்னும் இருந்தால் அறியத்தாருங்கள். விளக்கம் தர முயலுகிறேன்.
http://www.youtube.com/watch?v=opzIpIXzmxs
they say they are proud in killing others because it is said in ISLAM/Quran/Elders.
More ever zakir naik speach?
do you still say ISLAM is for PEACE
சுல்தான் ஐயா,
குழப்பம் முழுவதும் நீங்கவில்லை .நீங்கள் முதல் தலாக் -க்கு மட்டுமே இது மாற்று வழி என்கிறீர்கள் .அதன் பிறகும் இன்னும் இரண்டு தலாக்கும் கால அவகாசமும் இருப்பதாக தானே பொருள் .ஆனால் அந்த செய்தியில் ஏதோ SMS அனுப்பி விட்டால் விவாகரத்து ஆகி விடுவது போல இருக்கிறது .தகவல் பிழையா?
அடுத்த வருகைக்கும் நன்றி ஜோ.
முதலாவதோ, இரண்டாவதோ அல்லது மூன்றாவதோ அதை வாயால் சொல்வதற்கு பதிலாக SMSல் தரலாம் என்கிறார்கள்.
அடுத்து
அவர்கள் முதல் தலாக்குக்குப் பிறகு மூன்று மாத கால இடைவெளிக்குள் சேர்ந்து வாழவில்லையெனில் மணமுறிவு ஏற்பட்டு விடும். (ஆனால் அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ நினைத்தால், மீண்டும் திருமண(ஒப்பந்த)ம் செய்து கொண்டு வாழலாம். அவர்களுக்கு மூன்றாவது தலாக்குக்குப் பின்னர் உள்ளது போன்ற கடுமையான சட்ட திட்டங்கள் இல்லை)
அதிலே தகவல் பிழை ஏதுமில்லை. முதலாம் தடவை அல்லது இரண்டாம் தடவை சொன்ன பிறகும் அவர்கள் பிரிந்து வாழ வேண்டும். திரும்ப சேர்நது வாழ மூன்று மாதங்கள் கால அவகாசம். மூன்றாம் தடவை சொல்லியிருந்தால் கடுமையான சட்டங்கள். அதன் பின் சேர்ந்து வாழ்தல் இயலாததாகிவிடும்.
இப்போது தெளிவு படுத்தி விட்டதாக நினைக்கிறேன்.
//they say they are proud in killing others because it is said in ISLAM/Quran/Elders//
Thank you Anony.
I accept that there are some peoples who are getting Islam only by birth and not by choice. They are not trying to read and understand the Islam but blindly following somebody who they think their teachers/gurus. It is against Islamic teachings.
What Dr. Zakir Naik said is clear and right but it is shown in a bad taste by cutting and pasting images/videos.
Any how, I don't want to talk on the behaviours of some Muslims as in this comminity there are good aswellas bad as other communities. Let's talk about Islam not about some Muslims.
Thanks.
Post a Comment