இஸ்லாம் பற்றி வினவுக்கும் சாகித்துக்கும்-3

தலாக் விவாகரத்து இத்தா முதலியவை பற்றி நிறைய தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ளன. இந்த பதிவிலேயே என் http://islamicfold.blogspot.com/2007/01/blog-post.html என்றுள்ள இடுகையின் கருத்துரை பகுதியிலும் தலாக் விவாகரத்து பற்றி உள்ளது. இயன்றால் பார்வையிடுங்கள்.

//ஆணின் ஆளுமை அதிகாரத்தினால் தலாக் தலாக் தலாக் என்று மும்முறை ஒருவன் கூறிவிட்டால் அவனது மனைவி விவாகரத்து செய்யப்பட்டவளாக கருதப்படும் நிலையே அன்றும் இன்றும் உள்ளது//
இதை இப்படியே இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கூவி விற்பீர்களோ!. மேலே மின்னணு பொறியியல் பட்டதாரி பாத்திமாவின் கணவர் விடயத்திலும் இதை தெளிவு செய்திருக்கிறோம். தமிழகத்தில் இஸ்லாமிய எழுச்சியில் முத்தலாக் என்கிற விடயமே தவறு என்று ஆண்களும் பெண்களும் அறியத் துவங்கி விட்டனர்.

//இந்த மூன்று முறை தலாக் என்று சொல்லும் உரிமை, சிந்தித்து தெளிவாக நிதானமாக முடிவெடுத்தாலும் ஒரு பெண்ணிற்கு கிடையாது. தனக்கு பொறுப்பானவர்கள் மூலம் தன் கணவனை இந்த உறவிலிருந்து விடுவிக்கச் செய்துகொள்ளத்தான் ஒரு பெண்ணுக்கு இருக்கின்ற உரிமையாகும்.

தலாக் என்பது போல்தான் குளலா என்பதும் என்று சில இசுலாமிய பெண் அமைப்புகள், தாங்களும் நேரிடையாக தலாக் செய்துகொள்ள உரிமையுண்டு என்று வாதாடினாலும் ஆண்களால் மட்டுமே நிர்வாகிக்கப்படும் உலமாக்கள் சபை அதை நிராகரித்துவிட்டது. குலா என்பதன் பொருள் “விவாகரத்து செய்துவிடச் சொல்லுங்கள்” என்று கோரிக்கை வைப்பதே ஆகும்.//
இஸ்லாத்தில் ஆணும் பெண்ணும் அவர்களது உறவினர்கள் முன்னிலையில் தமது வீட்டிலேயே சிறிய நிகழ்ச்சியாக நடத்தி திருமணம் செய்து கொண்டாலும் அதை முறையாகப் பதிவு செய்து ஊர் மக்களுக்கு பொதுவில் அறிவிக்க வேண்டியது கடமையாகும். அதைப் போலவே குலாவும். அநதப் பெண் ஒரு பந்தந்திலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டாள் என ஜமாஅத்தின் முன்னிலையில் அறிவிக்கப் பட வேண்டும். இதிலே அப்பெண்ணுக்கு பல நன்மைகள் இருக்கிறது.

ஒரு பெண் குலாவுக்காக அனுமதி கேட்டால், விசாரித்து, விளக்கம் சொல்லி, முடிவை மறு பரிசீலனை செய்ய அவளிடம் கோரலாம். ஆனால் அப்பெண் தன் நிலையில் உறுதியாக இருந்து குலாவை கேட்டால் அதை நிராகரிக்கும் உரிமை ஜமாஅத்துக்கோ அதன் தலைவருக்கோ சிறிதளவேனும் கிடையாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் வார்த்தையிலிருந்து நீங்களே மாறுபடுவதைக் கவனியுங்கள் //ஆண் தலாக் செய்ய மறுத்தாலும் வலுக்கட்டாயமாக விவாகரத்தை பெற்றுக்கொள்ளும் பாதுகாப்பும் இன்று பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மாற்றத்தின் முன்னேற்றம். சமூகத்தின் இன்றையநிலை பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றமும், பெண்ணுழைப்பும் அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. 'கல்லானாலும் கணவன்...' மலை ஏறிக் கொண்டிருக்கிறது.//
பெண்களுக்கும் இஸ்லாம் சரிவரத் தெரிய தொடங்கியதால் எற்பட்ட நல்ல விளைவுதான் இது.

பெண்ணுழைப்பு - இஸ்லாமிய கல்வியை அறிவதற்கான அவர்களின் உழைப்பு, அதன் மூலம் அவர்களில் சிலர் பெற்ற கல்வியும் வேலை வாய்ப்பும் என எடுத்துக் கொள்ளலாம்.

இஸ்லாத்தில் ஆணும் பெண்ணும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும், குலம் தழைக்கவும் உள்ள ஒரு புனிதமான ஒப்பந்தம்தான் திருமணம். இந்த மகிழ்ச்சிகள் அவர்கள் குடும்ப வாழ்வில் இல்லாதிருந்தால் ஒப்பந்தந்தை முறித்துக் கொள்ளவும் இஸ்லாம் அனுமதி அளிக்கிறது. இந்த உண்மைகள் உணரப்பட்டதால்தான் 'கல்லானாலும் கணவன் புல்லானும் புருஷன்' என்ற நிலை இஸ்லாத்தில் அவசியமற்றதாகி பெண்களுக்கு நல்வாழ்வு அமைய ஏதுவாகிறது.

//விவாகரத்து வழக்குகளில் இன்றைய நடைமுறை மதக்கோட்பாட்டிற்கு வெளியே ஜமாத்துகளால் தீர்மானிக்கப்படுகின்றன.//
மஹ்ர் தொகை என்பது பெண்கள் தங்கள் கணவனால் கைவிடப்படும் நிலைமை ஏற்படும் போதும் அல்லது கணவனை இழக்கும் போதும் உறுதுணையாக இருக்கும் விதத்தில், அந்த அளவுக்கு அமைய வேண்டும். அதை மணப்பெண்ணே தீர்மானிக்க வேண்டும். மஹ்ரை கூட்டிக் குறைத்து பேரம் பேச மணமகனுக்கு அனுமதியுண்டே தவிர இவ்வளவுதான் தருவேன் எனக் கூற அதிகாரம் இல்லை.

மஹ்ர் தொகையைப் பற்றி ஓரளவு இஸ்லாமியப் பெண்கள் விளங்கி இருந்தாலும் அதை அவர்கள் சரிவர நடைமுறைப்படுத்தும் அளவுக்கு இதுவரை இங்கே நிலைமைகள் இல்லை என்பதை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.

இத்தகைய காரணங்களினால்தான் விவாகரத்து வழக்குகளில் இன்றைய நடைமுறையில் மதக்கோட்பாடுகளை விட்டும் வெளியேறாதபடி ஜமாத்துகளால் (பெரும்பாலும்) தீர்த்து வைக்கப்படுகின்றன.

//நடைமுறையில் அப்பெண்ணிற்கு இருக்கும் குழந்தைகளின் பால், வயது ஆகியனக் கணக்கிடப்பட்டு அதற்குப் பாதுகாப்பு தரும்வகையில் தண்டத்தொகையாக தீர்மானிக்கப்பட்டு ஆணிடமிருந்து பெற்று பெண்ணிற்கு வழங்கப்படுகிறது. கொடுக்கப்பட்ட வரதட்சனைகள், நகைகள், சீதனங்கள் திருப்பியளிக்கப் படுகின்றன.//
இந்த தீர்ப்பு இஸ்லாத்துக்கு எதிரான தீர்ப்பல்ல.

//ஜீனாம்சம் என்றச் சொல் மட்டும உச்சரிக்கப்படுவதில்லை.//
ஏனெனில் அது மற்ற மதத்தாரில் நடைமுறையிலுள்ள ஜீவனாம்சம் போன்றதில்லை. மாதம் ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் என்று சொல்லி விட்டு அதை தர மறுப்பவனுக்காக மீண்டும் வழக்காட வழியில்லாத எத்தனையோ பேர் தத்தளிக்கின்ற நிலைமையில் அதை ஒரே முறையில் அல்லது ஜமாஅத்தார் முன்னிலையில் ஒரேயடியாக பெற்றுத் தருவதின் மூலம் எதிர்காலச் சிக்கலில்லாமல் போகிறது.

//குழந்தைகள் ஆண்களுக்கே உரியன. அவர்கள் அவர்களை தமது பொறுப்பில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே கோட்பாடு.//
குழந்தைகளை வளர்ப்பதில் உள்ள செலவுகளுக்கு முழுப்பொறுப்பும் ஆணுக்குள்ளதே. (பெண் எவ்வளவு பணக்காரியாக இருந்தாலும்) நீயும் சேர்ந்துதானே பெற்றாய், நீ பாதிசெலவை ஏற்றுக் கொள் எனக் கூற முடியாது. இதில் பெண்களுக்கு பாதுகாப்பா பிரச்னையா என்பதை உங்கள் அறிவுக்கே விட்டு விடுவோம்.

//கணவன்களால் மட்டுமே தான் கர்ப்பமுற்று குழந்தை பெற்றெடுப்பதாகவும், அதில் தனக்கு பங்கேதுமில்லை என்று இன்னும் இப்பெண்கள் அறிவியலுக்கு அப்பாற்பட்டு சிந்திப்பதால் இப்பிரச்சனையில் தமக்கு ஏதும் உரிமை இல்லை என்பதை எவ்வித மனவருத்தமுமின்றி ஏற்றுக்கொள்கின்றனர்//
இவையெல்லாம் கம்யூனிஸக் கற்பனைகளேயன்றி வேறில்லை. ஆண் பெண் இருவரது அணுக்கலப்பினால்தான் குழந்தை பிறக்கிறது என்பதை குர்ஆன் சொல்லித் தந்தே இருக்கிறது. எந்த தமிழ்த் தாயும் தன் குழந்தையை தான் வளர்ப்பதை ஏமாற்றப்பட்டு விட்டதாக கருதுவதில்லை. சில விதி விலக்குகள் இருக்கலாம். அதைப் பொதுவாகக் கருத முடியாது.

//குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு இவள்மீது சுமத்தப்படும்போது இயல்பாகவே உள்ள தாய்ப்பாசம் அதனை தன் தலையில் கட்டும் ஏமாற்றம் என்று கருதுவதற்கு இடமளிப்பதல்லை.//
எவ்வளவு சிறந்த ஆணாயினும், ஒரு பெண்ணைப் போல், அதிலும் குறிப்பாக பெற்ற தாயைப் போல் குழந்தைகளை வளர்ப்பதென்பது இயலாத காரியம். அதனால் பெரும்பாலும் தாயிடமே குழந்தைகள் விடப்படுகின்றனர். அந்தப் பெண்ணுக்கு வேறு வரன்கள் அமையும் பட்சத்தில் அக்குழந்தைகளுடனேயே திருமணம் செய்விக்கப் படுகின்றனர். இயலாத பட்சத்தில் தாய்வழி உறவினர்களே அக்குழந்தைகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்கின்றனர்.

ஓரளவு வயது வந்த குழந்தைகள் குறிப்பாக ஆண் குழந்தைகள் தந்தையுடன் செல்லும் நிலை ஏற்படும்போது, அது வளர்ந்து, விபரம் அறிந்து, வருவாய் ஈட்டக்கூடிய நேரத்தில்,
'இஸ்லாத்தில் ஒருவர் தம் தாய்க்கு தர வேண்டிய உயர்ந்த அந்தஸ்தும், அப்பெண் எப்படிப் பட்டவளாக இருப்பினும் அவளுக்குள்ள உரிமைகள் அவனது கடமைகள்' ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் அவனுக்கு நினைவுறுத்தப்பட்டு தாய்க்கு சேவையாற்ற ஆர்வமுட்டப்படுகிறான். 'தாயின் காலடியே சொர்க்கம்' என்ற நிலை அவனுக்கு சொல்லித் தரப்படுகிறது. அதனால் இறைவனிடம் கிடைக்கவிருக்கும் உயரிய நிலைமை அவனுக்குச் சொல்லித் தரப்பட்டு தாய்க்குப் பணிவிடையாற்ற ஆர்வமூட்டப்படுகிறான்.

இஸ்லாத்தில் ஒரு மகனிடம் தாய்க்கு உள்ள உரிமை மூன்று பங்கென்றால் தந்தைக்கு ஒரு பங்குதான்- அவனை யார் வளர்த்திருந்தாலும்.
//பெண்ணின் விருப்பத்திற்கிணங்க விவாகரத்து நடந்தால் பெண், தான் பெற்ற மகர் தொகையுடன் சிறுதொகை ஒன்றையும் (திட்டவட்டமான அளவு இல்லை) கொடுக்க வேண்டும். அல்லது மகர் தொகையை மட்டுமாவது கொடுக்கவேண்டும், என்று கோட்பாடு கூறுகிறது. நடைமுறை அவ்வாறு இல்லை. பெண் தலாக் செய்யச் சொல்லும் சூழ்நிலை பரிசீலிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக குடிகாரக் கணவன், விபச்சாரிகளுடன் சுற்றும் கணவன், சமூக குற்றங்களைச் செய்வதால் தொடர்ந்து சிறைசென்று வரும் பொறுக்கி போன்ற அடிப்படை நிகழ்வுகள் பரிசீலிக்கப்பட்டு தீர்த்து வைக்கின்றனர். குற்றம் கணவன் மீது என்றால் கணவனுக்கு தண்டத்தொகையும். மனைவி மீது என்றால் மனைவிக்கு தண்டத்தொகையும் தீர்மானிக்கப்படுகிறது//
மஹ்ர் தொகையை விடக் கூடுதலாக எதையும் கொடுக்க வேண்டியதில்லை. அவன் கொடுத்திருந்த விலையுயர்ந்த பரிசுப் பொருட்கள் திரும்பக் கேட்கப் பட்டால் (சரியான முறையில் மஹ்ர் கேட்டுப் பெறப்படாததால்) குழந்தை வளர்ப்பு முதலிய காரணங்களுக்கான செலவினங்களில் அவை கணக்கிடப்படுகின்றன. இவையாவும் இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு முரணில்லாத வகைதான். (மேலே கல்லானாலும் கணவன் விளக்கத்தையும் பார்வையிடவும்)

இத்தா – காத்திருத்தல்
இஸ்லாத்தைப்பற்றி சரிவர அறிய, ஆராய முயற்சிக்காமல் எவரோ சொன்னவற்றை பிடித்துக் கொண்டு, மார்க்ஸ் கடவுள் கெடுத்த அபின் போதையில்தான் இவரும் தள்ளாடுகிறார் என்பதை இவரது இந்த விளக்கங்களிலே தெளிவாகத் தெரியப்படுத்தி விடுகிறார்.

//'கணவன் இறந்த பெண்கள் மழித்துக் கொள்ளுங்கள் (மொட்டையடித்துக் கொள்ளுவது)' என்று கூறுகிறார். அந்த அறிவிப்பைத் தவிர//
இதற்கான ஆதாரத்தை தர இயலுமா? இஸ்லாத்தை சிறுமைப் படுத்தவல்லாது வேறெதற்காக இத்தகைய புனைச்சுருட்டுகள்?

//தனது கணவனை சொர்க்கத்திற்கு இட்டுச் செல்வதில் பங்காற்றும் நன்மைகளின் எண்ணிக்கையை கூட்டும் என்றும் அவள் மனதார நம்புவதால்அப்பெண்களின் மனதில் எவ்வித எதிர்ப்பையும் ஏற்படுத்தவில்லை//
இவையாவும் இவரது சொந்த கற்பனைகள் அல்லது மார்க்ஸிய கற்பிதங்களாக இருக்கலாம்.

//விவாகரத்து விரும்பியோ விரும்பாமலோ நடந்தாலும் கணவன்மீது ஏற்பட்டுள்ள “கசப்புணர்வு” அங்கே ஏற்பட்டுள்ளது என்பது தெளிவான ஒன்றே. அப்படியிருந்தும் அவர்கள் இந்த இத்தாவை கடைபிப்பது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. அப்படிப்பட்டவர்களின் மனநிலையை அறிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்கு ஏற்படவில்லை//
இவராக சில கற்பனைகளை எழுதி விட்டு அதில் மேற்கொண்டு கேள்விகளை யாரிடம் கேட்கிறார்? கற்பனைக்கு சொந்தக்காரரான அவர்தான் அதற்கு பதில் தர வேண்டும். கற்பனை இல்லையென்றால் அதற்கான ஆதாரத்தை அவர்தான் தர வேண்டும்.

இத்தா என்பது காத்திருப்பு என்று இவரே விளக்கமளிக்கிறார். இதில் கர்ப்பபைகளில் உள்ளதை அறிவதும் இருக்கிறது. அதல்லாத வெறும் காத்திருத்தலும் உண்டு என்பதை 'கர்பப்பை இல்லாவிட்டாலுமா!' என்ற அவரது இடுகையில் அவர் எடுத்து வைத்த (65:4) குர்ஆன் வசனமே விளக்குகிறது.

"உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும், 'இத்தா'(வின் தவணை) மூன்று மாதங்களாகவும், தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய ('இத்தா'வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையுமாகும். மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான்"

மாதவிடாய் நினறு போன வயதானவர்களுக்கும், மாத விடாயே வராதவர்கள் மற்றும் சிறுமிகளுக்கும் (சிறுமிகள் திருமணச் சட்டம் மாற்றப்பட்டு விட்டது) மூன்று மாத தவணை கொடுக்கப்பட்டுள்ளது. இதிலே கர்ப்பபைகளில் உள்ளதை அறிவது இல்லை. வெறும் காத்திருத்தல் சட்டம்தான் என்பது மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கே புரியும்.

இஸ்லாத்தில் கூறப்பட்ட ஒவ்வொன்றும் நபித்தோழர்களால் அவ்வப்போது கேள்விகளாக கேட்கப்பட்டு தெளிவு பெறப்பட்டே வந்திருக்கின்றன. அதனால்தான் தெளிவாக சொல்லப்பட்டுள்ள இவற்றில் கேள்விகள் அவசியமற்றதாகி விட்டிருக்கிறது.

இதை மேலும் விளக்க:
ரமதான் மாதம் முழுதும் நோன்பிருப்பது கடமை. அதனால் பல பயன்கள் உண்டாவதாக சொல்லப்பட்டுள்ளது. அது விளைவுகள்தான். அந்தப் பயன்கள் எமது நோக்கமல்ல. நோன்பிருக்க வேண்டுமென்கிற இறை கட்டளையை நிறைவேற்றுவதல் எனும் அடிபணிதல்தான் எமது முழு முதல் முக்கிய நோக்கம்.

அதுபோல காத்திருத்தலில் பல நல்ல பயன்கள் இருக்கிறது. என்றாலும் அவை எமது நோக்கமல்ல. இறை கட்டளைக்கு அடிபணிதல் என்பதுதான் நோக்கம்.

டிஸ்கி:
1. திரு. வினவு அவர்கள் தமது தளத்தில் 2010-ல் 'இசுலாமியப் பெண்கள்: மதமும் வாழ்க்கையும்' என்ற தலைப்பில் திரு. சாகித் அவர்கள் எழுதி இருந்த இடுகையை எடுத்தது இட்டிருந்தார். அதற்கான கருத்துரை எழுதப்போய் அது மூன்று இடுகைளாக நீண்டு விட்டது.
2. இந்த பதில்கள் உங்களில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்பதையும் இயன்றவரை எல்லா பகுதிகளுக்குமே பதிலளிக்கப் பட்டுள்ளதால் உங்களுக்கு மென்மேலும் வீரியமாய் எதிர்க்கத் தோன்றும் என்பதையும் நான் அனுபவப் பூர்வமாக அறிந்திருக்கிறேன். இந்த பதில்களால் உங்களை வருத்தமுறச் செய்வது எனது நோக்கமல்ல. உண்மையை அறிய முயற்சிக்கும் இது போன்ற கேள்விகளுள்ளவர்கள் மட்டுமே இதனால் பயனடைய முடியும். இவ்வாறு தெளிவு படுத்தவதன் மூலம் என்னளவுக்கு என் கடமையைச் செய்தேன் என்ற மகிழ்ச்சியும் இறை திருப்தியுமே என் நோக்கம். என்னால் இயன்றவரை நான் அறிந்தவரை பதிலளித்துள்ளேன். அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

2 comments:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

உமர் | Umar said...

நண்பரே நலமா! இந்தப் பதிவை நான் முழுவதுமாக படிக்கவில்லை. படித்தபின்பு எனது கருத்துகளை கூறுகின்றேன். உரையாடலாமா?

கடந்த பதிவின் உரையாடலில், கடைசியாக நான் இட்ட பதில் (பரிணாமம் குறித்து) வெளிவரவில்லை. வெளியிடுவீர்கள் என்று நம்புகின்றேன்.